ADDED : செப் 19, 2023 12:28 PM

ஒவ்வொரு மனிதனுக்கும் தேவ, பித்ரு, மானிட கடன்கள் உண்டு. தேவ கடனை வழிபாடு, யாகம் மூலமும், பித்ரு கடனை திதி, தர்ப்பணம் மூலமும் தீர்க்கலாம். மனிதனுக்கு ஏற்படும் கடனை கணபதி வழிபாட்டின் மூலம் தீர்க்கலாம். சென்னை குன்றத்துார் காத்யாயினி கோயிலில் உள்ள தோரண கணபதியை வழிபடுங்க. துரத்தும் கடனில் இருந்து விடுபடுங்க. இதைத்தான் கணபதியை வணங்க. கைமேல் பலன் என்கிறார் அவ்வையார்.
அம்மன் கோயில்களில் தோரணவாயில் அருகே அருள் பாலிப்பவர் தோரணகணபதி. இவரது தலையில் ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேல் இரு கைகளில் அங்குசமும் பாசமும், கீழ் இரு கைகளில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு காட்சி தருகிறார். தேய்பிறை, வளர்பிறை சதுர்த்தி, செவ்வாய், ஞாயிறு அன்று தீபமேற்ற தன்கையில் உள்ள தந்தத்தை கொண்டு அவர்களது கடன் தீர ஆசி வழங்குவார். தோப்புக்கரணம் இடுவது அவசியமானது. இவருக்கு பிடித்த பிரசாதங்கள், படைத்து வழிபடலாம். அருகம்புல் மாலை சாற்றுவது உத்தமம்.
ஆறு வாரங்கள் தொடர்ந்து இவ்வழிபாட்டினை கடைப்பிடிக்க கடன் தீரும். இவரை நினைத்து கச்சியப்ப முனிவர் எழுதிய காரிய சித்தி மாலையை படிப்பவர் வாழ்வில் வெற்றி உண்டாகும்.
பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வாரணாசி, சிருங்கேரி சாரதாம்பாள் கோயில்களில் தோரண கணபதிக்கு சன்னதி உள்ளது.
ஸ்லோகம்
தினமும் 16 முறை தோரணகணபதி ஸ்லோகத்தை சொல்லுங்கள்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் க்லௌம் கம் தோரண
கணபதியே சர்வகார்ய கர்த்தாய, சகல
சித்திகராய, ஸர்வஜன வசீகரணாய, ருணமோசன
வல்லபாய, ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.
எப்படி செல்வது
* சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து 21 கி.மீ.,
* தாம்பரத்தில் இருந்து 16 கி.மீ.,
* பல்லாவரத்தில் இருந்து 8 கி.மீ.,
விசேஷ நாள்: விநாயகர் சதுர்த்தி நவராத்திரி
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 95511 84326
அருகிலுள்ள தலம்: குன்றத்துார் நாகநாதர் கோயில் (ராகு, கேது பரிகாரத்தலம்)
நேரம்: காலை 6:30 - 12:30 மணி; மாலை 4:00 - 8:00 மணி