ADDED : செப் 10, 2023 06:32 PM

சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது எல்லோரின் கனவு. ஆனால் வீட்டை கட்டி முடிப்பதற்குள் பல பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
இந்த பிரச்னை ஏற்படாமல் இருக்க வேண்டுமா...
அப்படி என்றால் கேரள மாநிலம் கோட்டயம் சக்குளத்துக்காவு பகவதி கோயிலுக்கு வாருங்கள்.
கோயில் இருக்கும் பகுதி முன்பு காடாக இருந்தது. ஒருநாள் வேடன் ஒருவன் தன் மனைவியுடன் இங்கு விறகு வெட்ட வந்தான்.
அப்போது ஒரு பாம்பு சீறியபடி நின்றது. பயந்து போனவன் கோடாரியால் அதை வெட்ட முயன்ற போது அது தப்பி ஓடியது. கொல்லாமல் விட்டால் தன்னை பழி வாங்குமோ என எண்ணி விரட்டிச் சென்றான். கடைசியில் பாம்பு புற்றுக்குள் செல்ல முயன்றது. அப்போது அதை வெட்டினான். ஆனாலும் அது வெட்டுப்படவே இல்லை. மாறாக சீறிக்கொண்டு அது படமெடுத்து ஆடியது. சிறிது நேரத்தில் புற்றிலிருந்து நீர் ஊற்று கிளம்பியது. பாம்பும் மறைந்தது.
இதைக் கண்டு வேடனும், அவன் மனைவியும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது அங்கு மாறுவேடத்தில் வந்த நாரதர் புற்றை அகற்றும்படி கூறினார். வேடனும் அப்படியே செய்ய ஊற்றில் இருந்து தேனும், பாலும் வெளியேறியது.
அதனடியில் அம்பிகையின் சிலை இருந்தது. அதை நாரதர் எடுத்து பிரதிஷ்டை செய்தார். அதன்பின் வேடன் குடும்பத்தினர் வழிவழியாக அம்மனை வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில் கோயிலும் கட்டப்பட்டது.
கோயில் அருகில் இருந்த குளத்து நீர் சர்க்கரை போல இனித்தது. அந்த சர்க்கரை குளம், அதைச் சுற்றியுள்ள காடு என இரண்டையும் சேர்த்து 'சக்குளத்துக்காவு' எனப் பெயர் ஏற்பட்டது.
நாரதர் பிரதிஷ்டை செய்த அம்பிகையே 'சக்குளத்தம்மா' என்னும் பெயரில் இங்கு அருள்பாலிக்கிறாள். பின் எட்டு கைகள் கொண்ட அம்மன், சிவன், ஐயப்பன், விஷ்ணு, கணபதி, முருகன், நாகதேவதை, வனதேவதைக்கு சன்னதி கட்டப்பட்டன.
இத்தலத்து மண்ணுக்கு மகத்துவம் அதிகம். ஒவ்வொரு துகளும் மாணிக்கம் போன்றது. ஆம். கோயில்கள், வீடு கட்டுவதற்கு முன் இங்கிருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துச் சென்றால் அந்த செயல் நல்லபடியாக நிறைவேறும்.
எப்படி செல்வது: * திருவனந்தபுரத்தில் இருந்து 135 கி.மீ.,
* கோட்டயத்தில் இருந்து 35 கி.மீ.,
விசேஷ நாள்: புரட்டாசி ஆயில்யத்தன்று நாகர் பூஜை திருக்கார்த்திகை பொங்கல் உற்ஸவம், மார்கழி நாரிபூஜை
நேரம்: அதிகாலை 5:00 - 10:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
அருகிலுள்ள தலம்: பனிசிகாடு சரஸ்வதி கோயில் 28 கி.மீ.,
(இசை, நாட்டியம் போன்ற கலைகளில் சிறந்து விளங்க வேண்டிக் கொள்ளலாம்)
நேரம்: அதிகாலை 5:30 - 9:30 மணி; மாலை 5:00 - 7:30 மணி
தொடர்புக்கு: 0481 - 233 0670, 233 0020