
திருமாலின் அடியார்களான ஆழ்வார்கள் பாடிய திவ்ய தேசங்கள் 108. அதில் அண்டை நாடான நேபாளத்திலுள்ள முக்திநாத் தலமும் ஒன்று. இது தரை மட்டத்தில் இருந்து 3710 அடி உயரத்தில் உள்ளது. இமயமலையிலுள்ள இக்ேகாயில் மூலவரான நாராயணரை தரிசிப்பவர்களுக்கு முக்தி கிடைக்கும்.
இத்தலம் 51 சக்தி பீடங்களிலும், வைணவ தலங்கள் எட்டிலும் ஒன்று. விஷ்ணுவாகிய திருமால் தவம் செய்து சிவபெருமானிடம் சுதர்சன சக்கரம் பெற்ற தலம் இது. இக்கோயிலில் ஹிந்து முறைப்படி காலையிலும், புத்தமதப்படி மாலையிலும் பூஜை நடக்கிறது. சிறிய பிரகாரத்துடன் கூடிய கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நாராயணர் அருள்பாலிக்கிறார். இவரை அவலோகிதேஸ்வரர் எனவும் அழைப்பர். வாசலுக்கு முன் திறந்த முற்றத்தில் பாவம் போக்கும் குளம் ஒன்றும், புண்ணியம் தரும் குளம் ஒன்றும் உள்ளன.
கோயிலுக்கு பின்புறம் சன்னதியைச் சுற்றி திவ்யதேச புஷ்கரணி தீர்த்தத்திற்கு சமமான 108 கோமுக தீர்த்தங்கள் கொட்டுகிறது. அவற்றில் குளித்துக் கொண்டே கோயிலை வலம் வரலாம். கோயிலில் கருடாழ்வார், ராமானுஜர், ஆண்டாள், மணவாள மாமுனிகள் சன்னதிகள் உள்ளன. நேபாள பட்டத்து ராணி சுபர்ணா பிரபாவின் கனவில் நாராயணர் தரிசனம் அளித்ததால் இக்கோயிலின் திருப்பணி முழுவதையும் அவரே செய்துள்ளார். முக்திநாத்தில் பாயும் கண்டகி ஆற்றில் கிடைக்கும் சாளக்கிராமக் கல்லை நாராயணரின் அம்சமாக கருதி பக்தர்கள் வீட்டில் வழிபடுகின்றனர். 2015 ல் இங்கு நடந்த நிலஅதிர்வில் எந்த சேதாரமும் இந்த கோயிலுக்கு இல்லை. மலை அடிவாரத்திலுள்ள சிவன் கோயிலில் வழங்கப்படும் விபூதி சகல நோய்களுக்கும் மருந்தாக உள்ளது. இந்த கோயில்களை தரிசிக்க ஏற்ற மாதம் மார்ச் - ஜுன்.
எப்படி செல்வது : காத்மாண்டில் இருந்து 377 கி.மீ.,
விசேஷ நாள்: விஜயதசமி ஸ்ரீராம நவமி
நேரம்: காலை 6:00 - இரவு 7:00 மணி
அருகிலுள்ள தலம்: ஜீவாலமா கோயில் 1 கி.மீ.,(மனபலம் அதிகரிக்க)
நேரம் : காலை 6:00 - இரவு 7:00 மணி

