/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
ஜோதிர்லிங்கத்தலம் (11) - கேதர்நாத் கேதாரீஸ்வரர்
/
ஜோதிர்லிங்கத்தலம் (11) - கேதர்நாத் கேதாரீஸ்வரர்
ADDED : ஆக 03, 2012 03:50 PM

இமயமலையில் உள்ள நந்திதேவி சிகரத்தில் தரைமட்டத்திலிருந்து 15 ஆயிரம் அடி உயரத்தில் இருப்பது கேதர்நாத். <உத்ராஞ்சல் மாநிலத்திலுள்ள இக்கோயில் சிவனை கேதாரீஸ்வரர் என்றும், அம்பாளை கேதார கவுரி என்றும் அழைக்கின்றனர். இந்தக் கோயில் ஏப்ரல் 15ம் தேதி முதல் அக்டோபர் 15 வரை மட்டுமே திறந்திருக்கும்.
தல வரலாறு:
ஒரு காலத்தில், பாண்டவர்களின் தந்தையான பாண்டு, அன்னை குந்தி, பாண்டுவின் இன்னொரு மனைவி மாத்ரி ஆகியோர் அரசபதவியைத் துறந்து இந்த மலையில் வாழ்ந்தனர். இங்கு தான் குந்திதேவி தர்மர், பீமன், அர்ஜுனன் என்ற மூன்று மகன்களையும் மாத்ரி நகுல, சகாதேவரையும் பெற்றெடுத்தனர். அதன்பிறகே இவர்கள் அஸ்தினாபுரம் சென்றனர். பாரதப்போரில் துரியோதனனை வெற்றிகொள்ள பாசுபத அஸ்திரம் வேண்டி, அர்ஜுனன் மீண்டும் இம்மலைக்கு வந்து தவமிருந்தான். அஸ்திரத்தைப் பெற்று வெற்றிபெற்றான். ஏராளமான வீரர்கள் பாரதப்போரில் கொல்லப்பட்டனர். அந்த தோஷம் நீங்குவதற்காக கண்ணனின் ஆலோசனைப்படி பாண்டவர்கள் காசி சென்றனர். ஆனால், சிவபெருமானோ காசியில் இல்லாமல் கேதர்நாத்திற்கு வந்துவிட்டார். உடனே கிருஷ்ணர் அவர்களுக்கு ஒரு சிவலிங்கத்தைக் கொடுத்து வழிபடும்படி கூறினார்.
சிவபெருமான் அங்கு தோன்றி அந்த சிவலிங்கத்தில் ஜோதி வடிவமாக ஐக்கியமானார்.
சிறப்பம்சம்:
இங்குள்ள லிங்கம் தோற்றத்தில் வித்தியாசமாக இருக்கும். காசியிலிருந்து கேதர்நாத்திற்கு சிவபெருமானை பாண்டவர்கள் தேடிவந்தபோது அவர் எருமையின் வடிவெடுத்து மாட்டுமந்தையுடன் கலந்துவிட்டார். இதை அறிந்த பாண்டவர்கள் பீமனை அனுப்பி அந்த மாட்டை கண்டுபிடிக்கக் கூறினார். பீமன் சிவபெருமானை அடையாளம் கண்டு அவரை பிடிக்க ஓடினான். சிவன் தப்பி ஓடினார். ஆனாலும் வேகமாக சென்ற பீமன் அந்த எருமைமாட்டின் பின்பகுதியை பிடித்துவிட்டான். ஆனால் முன்பகுதி ஒரு புதரில் நுழைந்துவிட்டது. அவனால் மாட்டை வெளியே இழுக்க முடியவில்லை. எனவே பின்பகுதியை சிவலிங்கமாக கருதி பாண்டவர்கள் சிவனை வழிபடத் துவங்கினர். சிவபெருமானின் பிண்டம் என இந்த லிங்கத்தை கூறுவார்கள். முக்கோண வடிவ பாறை போல லிங்கம் காட்சிதரும். மூலஸ்தானத்தில் பாண்டவர்கள் ஐவரும் காட்சிதருவது குறிப்பிடத்தக்கது.
வெந்நீர் குளங்கள்:
இந்த கோயிலுக்கு வருவோர் நீராடுவதற்கு என்றே வெந்நீர் குளங்கள் ஆங்காங்கே உள்ளன. இது எப்படி ஏற்பட்டது என்பது யாராலும் அறிய முடியவில்லை. பாண்டவர்களுக்கு கங்கா தீர்த்தத்தை சிவபெருமான் வழங்கியதாகவும் அவர்கள் நீராடிய தீர்த்தமே வெந்நீர் குளங்களாக உருவானதாகவும் சொல்வதுண்டு. மேலும் பார்வதிதேவி கவுரி இங்கு வந்து நீராடிய குளத்தை கவுரிகுளம் என்கிறார்கள். இதுவும் வெந்நீர் ஊற்றாக இருக்கிறது. இதன் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
கோயில் அமைப்பு:
ஆதிசங்கரர் இந்தக் கோயிலை அமைத்தார். அதிக உயரமில்லாத கோபுரம் உள்ளது. கோயிலுக்குள் முக்கோண வடிவ பாறையாக சிவலிங்கம் தெற்கு நோக்கி உள்ளது. வடக்கிலுள்ள இமயமலையிலிருந்து தெற்கு நோக்கி இந்திய மக்களை சிவன் பாதுகாக்கிறார் என்று சொல்வதுண்டு. இங்கு ஒரு வித்தியாசமான வழிபாடு உள்ளது. உடலில் எண்ணெயை தடவிக்கொண்டு கேதாரநாதரை கட்டித்தழுவி மக்கள் வழிபடுகிறார்கள். இங்கிருந்து 35 கி.மீ., சென்றால் பத்ரிநாதர் கோயிலுக்கு செல்லலாம்.
இருப்பிடம்:
நாட்டின் எந்த பகுதியிலிருந்து இங்கு வந்தாலும் ஹரித்துவார் செல்ல வேண்டும். ஹரித்துவாரில் இருந்து ரிஷிகேஷ், தேவப்பிரயாகை, ருத்ர பிரயாகை வழியாக 300 கி.மீ., தூரத்தில் கவுரிகுண்ட். 8 மணி நேர பஸ் பயணம். அங்கிருந்து 14 கி.மீ., மலைப்பாதையில் நடை அல்லது குதிரைச்சவாரி. மிகவும் கடுமையான பயணம்.