sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

ஆதிகாமாட்சியின் அடிபணிவோம்

/

ஆதிகாமாட்சியின் அடிபணிவோம்

ஆதிகாமாட்சியின் அடிபணிவோம்

ஆதிகாமாட்சியின் அடிபணிவோம்


ADDED : ஆக 03, 2012 03:47 PM

Google News

ADDED : ஆக 03, 2012 03:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 ஆக.10 ஆடிகடைசி வெள்ளி

தொண்டை மண்டலத்தின் திலகமாக விளங்கும் தலம் காஞ்சிபுரம். இங்குள்ள காளிகோட்டத்தில் அம்பிகை ஆதிகாமாட்சியாக வீற்றிருக்கிறாள். இவளை காளிகாம்பாள் என்பர். ஆடிக்கடைசி வெள்ளியன்று தரிசித்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

தல வரலாறு:

கயிலாயத்தில் சிவனும் பார்வதியும் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிவன் ஒரு லீலை செய்தார். தன் கண்களை மறைக்கும் வகையில், பார்வதிதேவியைக் கொண்டு விளையாட்டாக மூடச் செய்தார். அப்போது உலகமே இருண்டு போனது. உயிர்கள் தத்தளித்து நின்றன. அவளைப் பெரும் பாவம் சூழ்ந்தது. பொன்மயமான அம்பிகையின் மேனியில் அந்த இருள் படிந்தது. அம்பிகை தன் கைகளை இறைவனின் கண்களில் இருந்து வெடுக்கென எடுத்து விட்டாள்.

சிவன் அவளிடம்,""தேவி! கரிய நிறம் பெற்றதால், நீ காளி என்று பெயர் பெறுவாய். உன் பாவம் நீங்க பூலோகத்தில் தவம் இயற்றி அறம் பல செய்வாயாக!,'' என்று அருள்புரிந்தார். அதன்படி, தேவியும் பூலோகத்தில் கம்பா நதிக்கரையில் மணல் லிங்கம் அமைத்து, தவமிருந்து வந்தாள். ஒருநாள் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கவே, தன் கைகளால் சிவலிங்கத்தை அணைத்துக் கொண்டாள். அப்போது உமையவளின் வளையல் தழும்பு மணல் லிங்கத்தில் பதிந்தது. அம்பிகையின் அன்புக்கு கட்டுப்பட்டு சிவன் தோன்றினார். தேவியும் தன் கருமை நிறம் நீங்க அருள்புரியும்படி வேண்டினாள். சிவனருளால் பழைய நிறத்தைப் பெற்று மகிழ்ந்தாள். அதேவடிவில், "ஆதிகாமாட்சி காளிகாம்பாள்' என்னும் திருநாமத்துடன் அருள்புரியத் தொடங்கினாள்.

பத்மாசனத்தில் அம்பிகை:

கருவறையில் கிழக்கு நோக்கி பத்மாசனத்தில் காளிகாம்பாள் அமர்ந்திருக்கிறாள். மேல்கைகளில் பாச அங்குசமும், கீழ் இடக்கையில் அட்சயபாத்திரமும், வலதுகை அபய ஹஸ்தமாக அனுக்ரஹ கோலமும் விளங்குகிறது. அசுர சக்திகளை அடக்கி ஆள்பவள் என்பதன் அடையாளமாக, திருவடியின் கீழ் மூன்று அசுரத்தலைகள் உள்ளன. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மதியம் உச்சிக்கால அபிஷேகம் சிறப்பாக நடக்கும். விநாயகர், முருகன், அன்னபூரணி, மடாளீஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, சக்திலிங்கம் சந்நிதிகளும் உள்ளன. உற்சவர் அம்பாளின் இருபுறமும் லட்சுமி, சரஸ்வதியும் உடனிருந்து காட்சி தருகின்றனர்.

வெள்ளிக்கிழமை மாலையில் வெளிப்பிரகாரத்தில் உள்ள 16கால் மண்டபத்தில் ஊஞ்சலில் அம்மனைத் தரிசிக்கலாம். ஆக.,10ல் நிகழும் ஆடிவெள்ளியில் காளிகாம்பாளுக்கு விசேஷ அலங்காரம் நடக்கும். அன்று அம்பாளைத் தரிசித்து நினைத்தது நிறைவேறப் பெறலாம்.

இருப்பிடம்:

காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்ட் அருகில்.

திறக்கும்நேரம்:

காலை6.30- 11.30, மாலை5- இரவு8.

போன்:

99414 70606

- சி.வெங்கடேஸ்வரன், சிவகங்கை






      Dinamalar
      Follow us