
தடைகளை நீக்கி, இனிமையான மணவாழ்வு தரும் திருத்தலமான திருமணஞ்சேரியில், கோகிலாம்பாள் சமேத கல்யாணசுந்தரர் திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். இந்தக் கோயிலின் அருகில் மேலத்திருமணஞ்சேரி என்று அழைக்கப்படும் எதிர்கொள்பாடியில் கல்யாணசுந்தரரின் மைத்துனரான லட்சுமிநாராயணப் பெருமாள் அருள்பாலிக்கிறார். திருமணஞ்சேரி வரும் பக்தர்கள் இவரையும் தரிசித்து வந்தால் திருமணம் மிக விரைவில் கைகூடும்.
தல வரலாறு:
கிழக்கில் விக்ரமன் என்னும் காவிரியாறும், மேற்கில் கிளை நதியான காளி வாய்க்காலும் அமைந்திருக்க நடுவில் அமைந்த தலம் மேலத்திருமணஞ்சேரி. பசுவாகப் பிறக்கும்படி சாபம் பெற்ற பார்வதி பூலோகம் வந்தாள். அப்பசுவை மேய்க்கும் இடையனாக விஷ்ணு உடன் வந்தார். சாபவிமோசனம் பெற்று அம்பிகை சிவனைத் திருமணம் செய்தபோது, உடனிருந்து திருமண வைபவத்தை நடத்தி மகிழ்ந்தார். அத்துடன் அதே தலத்தில் தன் மனைவி லட்சுமியுடன் கோயில் கொண்டார். இந்த நிகழ்வின் அடிப்படையில் லட்சுமிநாராயணப் பெருமாள் கோயில், கல்யாணசுந்தரர் கோயில் அருகில் அமைந்துள்ளது.
திருமண விழாவிற்கு வந்திருந்த தேவர்களை விஷ்ணு எதிர் கொண்டு வரவேற்றார். இதனால் அந்த இடம் "எதிர்கொள்பாடி' என அழைக்கப்படுகிறது. சிவ பார்வதி கல்யாண உற்சவத்திற்கு சீர்வரிசைகள் இன்றும் எதிர்கொள்பாடியில் இருந்தே எடுத்துச் செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.
மைத்துனர் பெருமாள்:
பொதுவாக கோயில்களில் பெருமாள் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருப்பார். ஆனால், இங்கு மேற்கு நோக்கிய நிலையில் இருக்கிறார். தம்பதிகளான கோகிலாம்பாளும், கல்யாண சுந்தரரும் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்த போது, மைத்துனராக விஷ்ணு திருமணத்தை நடத்தி வைக்க, மேற்குநோக்கி அமர்ந்தார் என காரணம் சொல்கின்றனர். இவர் லட்சுமி தாயாரைத் மடியில் தாங்கிய கோலத்தில் சேவை சாதிக்கிறார். சோழநாட்டில் உள்ள திவ்யதேசங்களில் இத்தலம் அபிமானத்தலமாகத் திகழ்கிறது. இங்குள்ள உற்சவருக்கு "வரதராஜர்' என்பது திருநாமம். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக இருக்கும் இவரை வழிபட்டால் மணவாழ்வு விரைவில் கைகூடும். வைகானஸ ஆகமப்படி இங்கு பூஜை நடக்கிறது.
மூலிகை அபிஷேகம்:
கையில் அமிர்தகலசம் தாங்கிய கோலத்தில் வடக்குநோக்கி தன்வந்திரி தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். நீண்டகாலம் நோயால் அவதிப்படுபவர்கள் இவருக்குரிய அஸ்த நட்சத்திரம், புதன்கிழமைகளில் மூலிகைத்தைலம் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இவருக்கு நெய்தீபமேற்றி 11 முறை வலம் வந்தால் ஆரோக்கியம் மேம்படும்.
பரிவார மூர்த்திகள்:
தும்பிக்கை ஆழ்வார் எனப்படும் விநாயகர், வீர ஆஞ்சநேயர், கருடாழ்வார், ஐந்து தலைநாகர், கிருஷ்ணர்,ராமானுஜர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசிமாலை சாத்தி வழிபட்டால் சத்ருபயம் நீங்கும். ராகு தோஷம் உள்ளவர்கள் ஐந்துதலை நாகருக்கு வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் தீபமேற்றி வழிபடுகின்றனர். இக்கோயிலில் திருப்பணி நடந்து வருகிறது. 2013ல் சம்ப்ரோக்ஷணம்(கும்பாபிஷேகம்) நடத்த திட்டமிட்டுள்ளனர். பக்தர்கள் திருப்பணியில் பங்கேற்கலாம்.
திறக்கும்நேரம்:
காலை 6-11.30, மாலை4.30- இரவு 8.
இருப்பிடம்:
கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் உள்ள குத்தாலத்தில் இருந்து வடக்கே 6கி.மீ., மயிலாடுதுறையில் இருந்து குத்தாலம் 10 கி.மீ.
போன்:
99401 76878, 98947 88156.