ADDED : ஜூலை 01, 2011 12:06 PM

கனவில் பாம்பு வருவது நல்ல சகுனமல்ல என்றும், இதனால், துன்பங்கள் ஏற்படுமோ என்றும் பலரும் அஞ்சுகின்றனர். இவர்கள் தங்கள் பயம் நீங்க சென்று வர வேண்டிய தலம் திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில். ஜாதகரீதியாக காளசர்ப்பதோஷம் உள்ளவர்கள் இங்கு சென்று பரிகார பூஜை செய்யலாம்.
தல வரலாறு: ஒருமுறை தன் தந்தை சிவனை, விநாயகர் வணங்கிய போது, சிவனின் கழுத்தில் இருந்த பாம்பு, தன்னையும் அவர் வழிபட்டதாக நினைத்து கர்வம் கொண்டது. அதன் ஆணவத்தை அடக்க எண்ணிய சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தியை இழக்க சாபமிட்டார். இதனால் சிரமப்பட்ட பாம்புகளின் சார்பில், ராகுவும் கேதுவும் தங்கள் இனத்தில் ஒருவர் செய்த தவறுக்காக மற்றவர்களை தண்டிக்கலாகாது என்றும், தவறு செய்த பாம்பை மன்னிக்கும் படியும் வேண்டினர். ஒரு மகாசிவராத்திரியன்று நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் தலைமையில் அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய நாகங்கள் திருப்பாம்புரம் வந்து வேண்டி சாபவிமோசனம் பெற்றன. நாகங்களுக்குரிய தோஷம் விலகக் காரணமான ராகு, கேது ஒரே சிலையாக இணைந்த வடிவில் இங்கு அருளுகின்றனர்.
சிறப்பம்சம்: திருநாகேஸ்வரம், நாகூர், கீழப்பெரும்பள்ளம், காளஹஸ்தி, மற்றும் கும்பகோணம் நாகநாதர் கோயில் ஆகிய ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே அமையப்பெற்ற தலம். இதை 'சர்வ தோஷ பரிகார தலம்' என்கின்றனர். ஆதிசேஷனுக்கு உற்சவர் விக்ரகம் உள்ளது. இங்குள்ள அம்பாளை பிரமராம்பிகை என்றும் வண்டுசேர் குழலி என்றும் அழைப்பர்.
ராகு கேது சன்னதி: பிற கோயில்களில் இருப்பதைப்போல் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்றார்கள். எனவே இத்தலத்து சிவனையும் அம்மனையும் நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.
பரிகாரத் தலம்: ஜாதகத்தில் காளசர்ப்பதோஷம், 18 வருட ராகு தசை, 7 வருட கேது தசை நடந்தாலோ, லக்னத்திற்கு 2ல் ராகுவோ, கேதுவோ இருந்து, லக்னத்திற்கு 8ல் கேதுவோ, ராகுவோ இருந்தால், ராகு புத்தி, கேது புத்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், இருபாலருக்கும் திருமணத்தடை இருந்தால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், தெரிந்தோ, தெரியாமலோ பாம்பைக் கொன்றிருந்தால், கடன் தொல்லைகள் இருந்தால் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்தல் அவசியம்.
வழிபட்டோர்: பிரம்மா, இந்திரன், பார்வதி, அகத்தியர், அக்னி, தட்சன், கங்காதேவி, சூரியன், சந்திரன், சுனிதன், கோச்செங்கண்ணன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.
திறக்கும் நேரம்: காலை 7- மதியம் 12.30 மணி, மாலை 4- இரவு 8.30 மணி.
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள கற்கத்தியில் இறங்கி, அங்கிருந்து 3 கி.மீ. சென்றால் திருப்பாம்புரத்தை அடையலாம்.

