/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
தாமரை தந்தால் தீரும் திருமணத்தடை
/
தாமரை தந்தால் தீரும் திருமணத்தடை
ADDED : ஜூன் 14, 2018 10:44 AM

ராமாயணத்தில் ராமனின் தம்பி பரதனின் பங்கு இணையில்லாதது.
'பரதாழ்வார்' எனப்படும் இவர் கேரளா, இரிஞ்ஞாலக்குடாவில் 'கூடல்மாணிக்கம்' என்னும் பெயரில் மூலவராக அருள்கிறார்.இவரை வழிபட திருமணத்தடை நீங்கும்.
விஷ்ணுபக்தரான 'வக்கேகைமால்' என்பவர் கிராமத் தலைவராக இருந்தார். ஒருநாள், அவரது கனவில் வானுலக தேவர் ஒருவர் தோன்றினார். திடுக்கிட்டு கண் விழித்த போது, அவரது எதிரில் நின்றிருந்தார். ''கைமால் என்னுடன் வா கடற்கரையில் புதையல் இருக்கிறது ''என்று கூறி அழைத்துச் சென்றார். குறிப்பிட்ட இடத்தில் தோண்டியபோது, நான்கு சிலைகள் இருந்தன. பார்ப்பதற்கு ஒன்று போல இருந்த சிலைகள் தசரத சக்கரவர்த்தியின் பிள்ளைகளான ராமர், லட்சுமணர், பரதர், சத்ருக்கன் என்பது தெரிந்தது. விஷ்ணுவின் ஆயுதங்களான சங்கு, சக்கரம், கதாயுதம், ஜபமாலை ஏந்திய நிலையில் நான்கு கைகளுடன் இவர்கள் காட்சிஅளித்தனர். திரிப்பறையார் என்னுமிடத்தில் ராமர், இரிஞ்ஞாலக்குடாவில் பரதர், மொழிக்குளத்தில் லட்சுமணர், பாயம்மாளில் சத்ருக்கனுக்கு கோயில்கள் அமைத்தார்.
ராமர் காட்டுக்குச் சென்றதை அறிந்த பரதன் தாய் கைகேயியை வெறுத்ததோடு, ராமபாதுகையை சிம்மாசனத்தில் அமர்த்தி, ராமராஜ்ஜியத்தை நடத்தினார். துறவி போல வாழ்ந்த அவர், 14 ஆண்டுகள் பாதுகையை பூஜித்து வந்த தியாகசீலர்.
ராமர், பரதர், லட்சுமணர், சத்ருக்கன் அருள்புரியும் தலங்களை ஒரேநாளில் தரிசிக்கலாம். அனைத்தும் இரிஞ்ஞாலக்குடாவைச் சுற்றி இருப்பது சிறப்பு.
பழங்காலத்தில் இரிஞ்ஞாலக்குடா காடாக இருந்தது.அங்கு கபிலினி என்னும் மகரிஷி தவத்தில் ஈடுபட்டார். ரிஷியின் தவக்கனல் வைகுண்டத்தை அடைந்தது. மகரிஷியின் பக்தியை மெச்சிய விஷ்ணு, 'கபிலினி! என்ன வரம் வேண்டும்?' எனக் கேட்டார். அவரோ, “சுவாமி! உம் அருளால் எனக்கு குறையொன்றுமில்லை. எனக்கென எதுவும் வேண்டாம். என்றென்றும் உம்மை வணங்கும் பாக்கியம் இருந்தால் போதும்' என்றார். ஆனாலும் விஷ்ணு மீண்டும் வற்புறுத்த, தருவதாக இருந்தால் என்றென்றும் இவ்விடத்தில் இருந்து அருள்புரியுங்கள்'' என்று கேட்டார்.
அதன்படி பெருமாளும் அங்கு தங்குவதாக சம்மதித்தார்.
இரிஞ்ஞாலக்குடாவில் சுவாமிக்கு பரதர் என்னும் பெயரை விட 'கூடல் மாணிக்கம்' என்ற பெயரே பிரபலமாக உள்ளது. அதிர்ஷ்டவசமாக, ஒரு நாள் சுவாமியின் நெற்றியில் பேரொளி கிளம்பியது. அது எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை. இதையடுத்து பக்தர் ஒருவர் காயங்குளம் ராஜாவுக்குச் சொந்தமான மாணிக்கக் கல்லுடன் கோயிலுக்கு வந்தார். சிலையில் இருந்து வரும் ஒளியோடு, மாணிக்கத்தை ஒப்பிடும் நோக்கத்தில் மூலவர் அருகில் சென்ற போது அதிசயம் நிகழ்ந்தது. அவர் கையில் இருந்த மாணிக்கம் அப்படியே பரதரின் நெற்றிக்குள் மறைந்தது. அது முதல், 'மாணிக்கம்' என பெயர் பெற்றார். கோயில் உள்ள பகுதி 'கூடல்' என்பதால் 'கூடல் மாணிக்கம்' என அழைக்கப்படுகிறார்.
இங்குள்ள குளம் குலிபினி தீர்த்தம். மீனைத் தவிர மற்ற தவளை, பாம்பு போன்ற உயிர்கள் இருப்பதில்லை. மீன்களுக்கு பொரியிட்டு பக்தர்கள் வழிபடுகின்றனர். இதற்கு 'மீனுாட்டு' என்று பெயர். மூலவருக்கு வாசனை திரவியம் ஏதும் சாத்துவது கிடையாது. தாமரை, துளசி, தெற்றிப்பூக்கள் பூஜைக்கு பயன்படுத்தப்படுகின்றன. 101 தாமரை மலர்களை மாலையாகத் தொடுத்து மூலவர் கூடல்மாணிக்கத்திற்கு சாத்தி வழிபட திருமணத்தடை நீங்கும்.
எப்படி செல்வது: திருச்சூரிலிருந்து 22கி.மீ.
விசேஷ நாட்கள்: சித்திரையில் பிரம்மோற்ஸவம்
நேரம்: அதிகாலை 3:00 - பகல் 11:30 மணி; மாலை 5:00 - இரவு 08:30 மணி
தொடர்புக்கு: 0480 - 282 6631, 282 2631
அருகிலுள்ள தலம்: 7 கி.மீ., துாரத்தில் பாயம்மாலில் சத்ருக்கன் கோயில்