ADDED : ஜூன் 21, 2022 11:50 AM

பரசுராம அவதாரம் எடுத்த விஷ்ணு, அந்தகாசுரனை அழித்து, அவனது ராஜ்யங்களை கஷ்யப முனிவரிடம் ஒப்படைத்தார். பின்னர், தனக்கு தவம் செய்ய ஒரு இடத்தை காட்டும்படி சிவபெருமானிடம் வேண்டினார். அவரும், உனக்குரிய இடத்தை கடல்அரசனிடம் கேட்டுக்கொள் என்றார். கடல் அரசன் இடம் தர மறுத்ததால் கோபம் அடைந்த பரசுராமர், தன் கோடரியை அவனை நோக்கி வீசினார். நேத்திரவதி ஆறு, பல்குனி ஆறு இணையும் இடத்தில் கோடரி விழுந்தது. அந்த இடத்தில், அம்மன் வடிவம் பொறித்த சிவசக்தி லிங்கம் கிடைத்தது. இதுதான் தவம் செய்ய சரியான இடம் என்று பரசுராமர் தேர்வு செய்தார். சக்திலிங்கத்திற்கு கோயில் கட்டி மங்களாதேவி என்ற பெயர் சூட்டினார். அம்பாள் பெயரில், மங்களாபுரம் என்று ஏற்பட்ட பெயர் மருவி மங்களூரு ஆனது. பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட வீரபாகு மன்னரின் வாரிசுகள் கோயிலுக்கு திருப்பணி செய்தனர்.
மூலவர் மங்களாம்பிகை காலையில் நிர்மால்ய தரிசனத்தின் போது மட்டுமே, லிங்க வடிவம் தெரியும். ஆனால், இந்த சக்திலிங்கம், ஒரு பெண்ணின் வடிவம் போல, சற்று வித்தியாசமாக உள்ளது.தேவி சன்னதி எதிரிலுள்ள வசந்த மண்டபத்தில் தினமும் மாங்கல்ய பூஜை நடத்தப் படுகிறது. அம்மனின் சிரசு வைக்கப்பட்டுள்ள சன்னதியில் செவ்வந்தி மாலையும், சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி வழிபடுபவருக்கு சகல ஐஸ்வர்யமும் கிடைக்கிறது.கோயிலின் வெளிப்புறத்தில் உள்ள நாகராஜா சன்னதியில் பால், இளநீர் அபிஷேகம் செய்தால் கண் நோய், தோல் வியாதி விலகுகிறது. ஜாதகரீதியாக ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் நாகராஜாவை வழிபட்டு பலன்பெறுகின்றனர். இங்கு வழங்கப்படும் விபூதியால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் விலகுகிறது. விவசாயிகள் தென்னங்கன்று நடுவதற்கு முன்பாக நாள் முழுவதும் இங்குள்ள நிர்மால்ய தீர்த்த தொட்டியில் வைத்து அதனை மறுநாள் எடுத்து செல்கின்றனர். இதனால், தேங்காய் விளைச்சலும் நன்றாக இருக்குமாம்.
எப்படி செல்வது : மங்களூரு ரயில்வே ஸ்டஷேனிலிருந்து 3 கி.மீ.,
விசஷே நாள்: நவராத்திரி. கார்த்திகை லட்ச தீபம், சிவராத்திரி
நேரம்: காலை 6:00 - 1:15 மணி; மாலை 4:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 0824 - 242 5476
அருகிலுள்ள தலம்: மங்களூரு பாண்டேஸ்வரர் கோயில் 2 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:30 - 1:00 மணி; மாலை 4:30 - 8:00 மணி
தொடர்புக்கு: 0824 - 244 1210
