
திருப்பூர் அருகே செஞ்சேரியில் தந்தையிடம் மந்திர உபதேசம் பெற்ற வேலாயுதசுவாமி கோயில் உள்ளது. இவரை 'மந்திரி முருகன்' என்று அழைப்பர்.
தல வரலாறு: சூரபத்மன் பெற்ற வர பலத்தால் தேவர்களை துன்புறுத்தினான் அவனை அழிக்க முருகனைப் படைத்தார் சிவன். முருகன் போர் புரிய கிளம்பிய போது பார்வதிக்கு, ''மாயத்தில் வல்ல, சூரனை அழிக்கும் திறமை சிறுவனான முருகனுக்கு உண்டா'' என்ற சந்தேகம் எழுந்தது. இதை சிவனிடம் கேட்க, 'முருகனைத் தவிர வேறு யாராலும் சூரனை அழிக்க முடியாது' என்றார். ஆனாலும் பெற்ற மனம் கேட்கவில்லை. முருகன் மீதுள்ள அன்பால் சிவனிடம், ''முருகனுக்கே போரில் வெற்றி கிடைக்க மந்திர உபதேசம் செய்யும்படி வேண்டினாள். சம்மதித்த சிவன், ''முருகா! போருக்கு செல்லும் வழியில் தர்ப்பை புற்கள் நிறைந்த இடத்தைக் காண்பாய். அங்கு மலை வடிவில் நான் இருப்பேன். அருகில் பார்வதியும் 'சக்தி கிரி' என்னும் மலையாக இருப்பாள். கிழக்கில் பிரம்மாவும், மேற்கில் திருமாலும் பாறை வடிவில் இருப்பர். அங்கே என்னை நோக்கி தவமிருந்து வா. உனக்கு மந்திர உபதேசம் செய்கிறேன்” என அருளினார். அதன்படி முருகனும் தவம் செய்ய, சிவன் உபதேசம் செய்து வெற்றிக்கு வழிகாட்டினார். பெற்றோர் பேச்சைக் கேட்கும் பிள்ளைகள் வெற்றி பெறுவர்.. இத்தலத்தில் முருகன் 'வேலாயுதர்' என்னும் பெயரில் வீற்றிருக்கிறார்.
சேவலுடன் முருகன்: இங்கு பன்னிரண்டு கைகளுடன் காட்சியளிக்கும் வேலாயுதர் சூரபத்மனை சேவலாக மாற்றி தனது இடது கையில் வைத்துள்ளார். உற்ஸவர் முத்துக்குமாரர் வள்ளி, தெய்வானையுடன் பத்ம பீடத்தின் மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
மந்திரி முருகன்: சிவனிடம் மந்திர உபதேசம் பெற்றதால், 'மந்திர முருகன்' என அழைக்கப்பட்டார். காலப்போக்கில் 'மந்திரியப்பன்' என மருவியது. துன்பம் தீர, ஆலோசனை சொல்லும் மந்திரியாக இவரை வழிபடுகின்றனர். இங்கு குழந்தைகளுக்கு 'மந்திரி' என பெயரிடும் வழக்கம் உள்ளது. சிவன் உபதேசித்த மலை என்பதால் 'மந்திர மலை' 'மந்திராசலம்', 'மந்திர கிரி' என்றும் அழைக்கப்படுகிறது.
பூக்கேட்கும் சடங்கு: நடராஜர், சிவகாமி, கைலாசநாதர், பெரியநாயகி, விநாயகர் சன்னதிகள் உள்ளன. கோயிலுக்கு அருகில் சக்தி மலை, திருமால் மலை, பிரம்மா மலை என்ற மூன்று மலைகள் உள்ளன. தொழில் தொடங்க, திருமணம் நடத்த முருகனிடம் 'பூக்கேட்டல்' என்னும் சடங்கை நடத்துகின்றனர்.
நவக்கிரக சன்னதியில் சூரியன் மேற்கு நோக்கியிருக்க, மற்ற கிரகங்கள் அவரை நோக்கியபடி இருப்பது மாறுபட்ட அமைப்பு. கிரக தோஷம் நீங்க, முருகன் சூரியனுக்கு செவ்வரளி மாலை சாத்துகின்றனர்.
எப்படி செல்வது: திருப்பூரில் இருந்து பல்லடம் வழியாக 20 கி.மீ.
விசேஷ நாட்கள்: தைப்பூசம் பத்து நாள் திருவிழா, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம்
நேரம்: காலை 7:00 - 12:30 மணி; மாலை 4:30 - 7:30 மணி
தொடர்புக்கு: 04255 - 266 515