sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

முன்னோருக்கு மோட்ச தீபம்

/

முன்னோருக்கு மோட்ச தீபம்

முன்னோருக்கு மோட்ச தீபம்

முன்னோருக்கு மோட்ச தீபம்


ADDED : பிப் 12, 2013 12:30 PM

Google News

ADDED : பிப் 12, 2013 12:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தை அமாவாசையை ஒட்டி, முன்னோர்களின் ஆத்ம சாந்திக்கு மோட்சதீபம் ஏற்றப்படும் திருச்சுழி பூமிநாதர் கோயிலுக்குச் சென்று வருவோமா!

தல வரலாறு:





இரண்யாட்சன் என்னும் அசுரன், பூமாதேவியை கடலுக்குள் ஒளித்து வைத்தபோது, பெருமாள் அவனை அழித்து அவளை மீட்டார். இறந்தவன் அசுரனாயினும், அவனது அழிவுக்கு தானும் ஒரு காரணம் என்பதால் வருந்திய பூமாதேவி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றாள். பூமாதேவிக்கு அருள் செய்த சிவன் 'பூமிநாத சுவாமி' என்னும் பெயரில் இங்கு அருள் செய்கிறார். பிற்காலத்தில் 'திருமேனிநாதர்' என்ற பெயர் ஏற்பட்டது.

ஊர் பெயர் காரணம்:





ஒரு சமயம் உலகம் அழிந்த காலத்தில் இத்தலத்தை வெள்ளம் சூழ்ந்தது. மன்னன் சந்திரசேகர பாண்டியன், மக்களை காக்கும்படி பூமிநாதரை வேண்டினான். சிவன் ஒரு யோகி வடிவில் வந்து, ஓரிடத்தில் சூலத்தால் குத்தினார். அங்கு பள்ளம் உண்டாகி, பிரளய நீர் அதற்குள் சுழித்து சென்றது. இதனால் இவ்வூர் 'திருச்சுழி' ஆனது. பள்ளத்துக்குள் சென்ற நீர், 'கவ்விக்கடல் தீர்த்தம்' எனப்பட்டது. சுழியால் கவ்வப்பட்டு சென்றதால் இப்பெயர் உண்டானது.

திருக்கல்யாணம்:





ஒரு சாபத்தால் கல்லாக மாறிய அகலிகை என்னும் பெண்மணி, ராமனின் பாத தூசு பட்டு சுயவடிவம் அடைந்தாள். இந்த தம்பதியருக்கு சிவ தரிசனம் வேண்டுமென்ற ஆசை இருந்தது. இதற்காக இங்கு தவமிருந்தனர். சுவாமி அவர்களுக்கு மணக்கோலத்தில் காட்சி தந்தார். பங்குனியில் நடக்கும் திருக்கல்யாணம், இவர்கள் முன்னிலையில் நடக்கும்.

நடராஜர் சந்நிதி எதிரே இவர்களுக்கு சிலை உள்ளது.

இறந்தவர்களுக்கு அர்ச்சனை:





உயிருடன் இருப்பவர்கள் பெயருக்கே அர்ச்சனை செய்வது வழக்கம். இங்கு மறைந்த முன்னோரின் பிறவாநிலைக்கும், அவர்கள் மோட்சம் பெறவும் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்கின்றனர். அப்போது சிவனுக்கு பின்புள்ள திருவாசியில் நெய் தீபம் ஏற்றுகின்றனர். இதை 'மோட்ச தீபம்' என்பர். இந்த வழிபாட்டுக்கு கட்டணம் ரூ.50. முன்னோருக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள் இந்த வழிபாட்டைச் செய்து வரலாம்.

நிலப்பிரச்னைக்கு தீர்வு:





நிலப்பிரச்னை, வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் தங்கள் நிலத்திலிருந்து சிறிது மண் எடுத்து வருகிறார்கள். அத்துடன் கோயில் வளாகத்திலுள்ள மண்ணையும் சேர்த்து, பூமிநாதர் சந்நிதியில் பூஜிக்கின்றனர். அதை பிரச்னை உள்ள இடத்தில் இட்டால், விரைவில் தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. சொந்தவீடு வாங்க விரும்புவோரும் சுவாமிக்கு பூஜை செய்கின்றனர்.

துணைமாலை அம்பிகை:





இத்தல அம்பிகைக்கு 'துணைமாலை நாயகி' என்று பெயர். திருமண தோஷ நிவர்த்திக்கு இவளது சந்நிதியில் மஞ்சள் கயிறு வைத்து வேண்டிக்கொள்கிறார்கள். இவள் சகாய முத்திரை காட்டி, பக்தர்களுக்கு சகாயம் தருவதால் 'சகாயவல்லி' என்றும் பெயருண்டு. அம்பாளுக்கு கீழுள்ள பீடம் அல்லது எதிரில்தான் ஸ்ரீசக்ரம் இருக்கும். ஆனால், இங்கு சந்நிதி எதிரேயுள்ள அர்த்த மண்டபத்தின் மேல் சுவரில் ஸ்ரீசக்ரம் உள்ளது. இதனால், இதை 'ஆகாய ஸ்ரீசக்ரம்' என்கின்றனர்.

குரவைப்பாட்டு:





திருமேனிநாதரைப் பற்றி கிராமிய நடையில் அமைந்த குரவைப்பாடல்கள் உள்ளன. 'குரவை' என்பதே 'குலவை' என மருவியது. பொங்கலிடும் பெண்கள் குலவையிடுவதுபோல பாடப்பட்ட பாடல் இது. 'கொம்பில்லாத அந்தாதி' பாடல்களும் புகழ் பெற்றவை. இத்தலத்து அம்பாள் பற்றி 'முத்துப்பருவம்' என துவங்கும் பிள்ளைத்தமிழ் பாடல்களை மீனாட்சி சுந்தரம் பிள்ளை எழுதியுள்ளார். இதற்கு அம்பிகையே அடியெடுத்துக் கொடுத்ததாகச் சொல்வர்.

சுழியல் சொக்கி:





கோயிலில் இருந்து சற்று தூரத்தில் துர்க்கை கோயில் உள்ளது. இவளுக்கு ஊரின் பெயரால் 'சுழியல் சொக்கி' என்று பெயர் உள்ளது. இவளது மூக்கும் சுழித்த நிலையில் இருக்கிறது. வடக்கு நோக்கி இருக்க வேண்டிய துர்க்கை, இங்கு கிழக்கு நோக்கியிருக்கிறாள். சுந்தரர், தனது பதிகத்தில் அம்பிகை கிழக்கு நோக்கியிருப்பதை குறிப்பிட்டுள்ளார். விக்கிரமாதித்தனால் பூஜிக்கப்பட்ட இந்த அம்பிகைக்கு, மாசி மாதம் 10 நாள் விழா நடக்கும்.

மூச்சுப்பிடிப்பு அம்மன்:





மூச்சுப்பிடிப்பு ஏற்பட்டு சிரமப்படுபவர்கள் அம்பாள் சந்நிதி கொடி மரம் அருகில் ஒரு தூணிலுள்ள அம்பாளை வழிபடுகின்றனர். இவளுக்கு 'மூச்சுப்பிடிப்பம்மன்' என்று பெயர். இந்த அம்பாளுக்கு நல்லெண்ணெயில் மஞ்சள் கலந்து பூசி வணங்குகின்றனர். வாயுத்தொல்லை, மூட்டு வலியால் அவதிப்படுவோரும் இதே வழிபாட்டைச் செய்கின்றனர். உலகம் தனக்குள் அடக்கம் என்பதை உணர்த்தும் 'அண்டபகிரண்ட விநாயகர்' இங்கு அருளுகிறார். பிரகாரத்தில் பழநியாண்டவர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, மகாலட்சுமி, பூமாதேவியுடன் சுழிகை கோவிந்தர் உள்ளனர். கோயிலைச் சுற்றிலும் எட்டு திசைகளில் அஷ்ட லிங்கங்கள் உள்ளன.

ரமணர் அவதார தலம்:





ரமண மகரிஷி இவ்வூரில் அவதரித்தவர். இவர் பிறந்த 'சுந்தர மந்திரம்' இல்லம், கோயில் அருகில் உள்ளது.

இருப்பிடம்:





மதுரையில் இருந்து 50 கி.மீ., விருதுநகரில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் அருப்புக்கோட்டை. இங்கிருந்து 13 கி.மீ., சென்றால் திருச்சுழி. பஸ் ஸ்டாப் அருகில் கோயில்.

திறக்கும் நேரம்:





காலை 6- மதியம் 12.15, மாலை 4- இரவு 8.15.

போன்:





04566- 282 644.






      Dinamalar
      Follow us