/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
ஒரே விழாவில் 3 முறை திருமணம் செய்யும் முருகன்
/
ஒரே விழாவில் 3 முறை திருமணம் செய்யும் முருகன்
ADDED : மார் 18, 2011 12:33 PM

இன்று பங்குனி உத்திரம்
பங்குனி உத்திரத்திருநாள் உள்பட மூன்று நாட்கள் திருக்கல்யாண விழா நடக்கும் முருகன் கோயில் பெரம்பலூர் அருகிலுள்ள செட்டிகுளத்தில் உள்ளது.
தல வரலாறு: இவ்வழியே சென்ற வணிகன் ஒருவன், இரவில் இங்கிருந்த அரச மரத்தில் ஏறி அமர்ந்திருந்தான். நள்ளிரவில், அந்த மரத்தை ஒட்டிய இடத்தில் தேவர்கள் சிலர், பேரொளியின் மத்தியில் தோன்றிய சிவலிங்கத்திற்கு பூஜை செய்ததைக் கண்டான். மறுநாள் மன்னன் பராந்தக சோழனிடம் தகவல் தெரிவித்தான். அச்சமயத்தில் குலசேகரபாண்டிய மன்னன், விருந்தினராக அங்கு வந்திருந்தான். இரு மன்னர்களும் இங்கு வந்தனர். அங்கு அப்படி நடந்த அறிகுறி ஏதும் தெரியவில்லை. அப்போது, கையில் கரும்புடன் வந்த முதியவர் அந்த தான் லிங்கத்தைக் காட்டுவதாகச் சொல்லி அழைத்துச் சென்றார். ஓரிடத்தில் லிங்கத்தை காட்டிவிட்டு, அருகிலிருந்த குன்றில் ஏறி கையில் கரும்புடன் முருகனாகக் காட்சி கொடுத்தார். தான் விருந்தாளியாக வந்தபோது தரிசனம் கிடைக்கப்பெற்றதால், மகிழ்ந்த குலசேகர பாண்டியன், மலையில் முருகனுக்கும், ஊருக்குள் சிவனுக்கும் கோயில் எழுப்பினான். சிவனுக்கு 'ஏகாம்பரேஸ்வரர்' என்ற திருநாமம் சூட்டப்பட்டது.
சிறப்பம்சம்: முருகன் கோயிலில் 240 படிகள் உள்ளன. வழக்கமாக வேலுடன் காட்சி தரும் முருகன் இங்கு கரும்புடன் காட்சியளிக்கிறார். தலையில் குடுமி உள்ளது. உற்சவர் கையில் வேல் இருக்கிறது. கரும்பு பார்ப்பதற்கு கரடு முரடாக இருந்தாலும், உள்ளே இனிமையான சாறு இருக்கும். இதைப்போலவே, மனிதனும் முரண்பட்ட குணங்களை விடுத்து, நல்ல மனம் என்னும் இனிய சாற்றை உள்ளுக்குள் கொண்டிருக்க வேண்டுமென்பதை இவர் உணர்த்துகிறார். சித்திரைப் பிறப்பன்று 240 படிகளுக்கும் பூஜை நடக்கும். பொதிகை சென்ற அகத்தியர், இங்குள்ள முருகனைத் தரிசிக்க வந்தார். அப்போது, முருகன் வளையல் விற்கும் செட்டியாராக காட்சி தந்தார். இதனால் ஊர் 'செட்டிகுளம்' எனப்பட்டது. 'வடபழநி' என்றும் இத்தலத்திற்கு பெயருண்டு. மதுரையில் இருந்து கோபத்துடன் கிளம்பிய கண்ணகியை, இத்தல முருகன் சாந்தப்படுத்தினார். இதனால், உக்கிரம் குறைந்த அவள், அருகிலுள்ள சிறுவாச்சூரில் மதுரகாளியம்மனாக கோயில் கொண்டுள்ளதாக தல வரலாறு கூறுகிறது.
கரும்புத்தொட்டில்: குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், சஷ்டியன்று முருகனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் பங்குனி உத்திரத்தன்று, கரும்புத்தொட்டிலில் குழந்தையைக் கிடத்தி, கோயிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். விவசாயிகள் முதலில் விளைந்த தானியம், பழம், காய்கறிகளை முருகனுக்கு காணிக்கை செலுத்துகின்றனர். மலையடிவாரத்தில் விநாயகர், நடுவே இடும்பன், முகப்பில் ராஜகணபதி, வீரபாகு சந்நிதிகள் உள்ளன. வில்வம் இத்தலத்தின் விருட்சம்.
மூன்று திருக்கல்யாணம்: கோயில்களில் ஆண்டுக்கு ஒரு திருக்கல்யாணம் தான் நடத்தப்படும். இங்கு, பங்குனி உத்திர பிரம்மோற்ஸவத்தின் 5,7, 9ம் நாட்களில் திருக்கல்யாணம் நடக்கிறது. இதில் கடைசி திருமணம் பங்குனி உத்திரத்தன்று நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்தடை உள்ளோர் ஏராளமாக இதில் பங்கேற்பர். விழா நாட்களில் சுவாமி கிரிவலம் செல்வார்.
இருப்பிடம்: பெரம்பலூர்- திருச்சி ரோட்டில் 15 கி.மீ., (திருச்சியில் இருந்து 44 கி.மீ.,) தூரத்தில் உள்ள ஆலத்தூர் சென்று, அங்கு பிரியும் ரோட்டில் 8 கி.மீ., சென்றால் செட்டிகுளத்தை அடையலாம். ஆலத்தூரில் இருந்து பஸ் குறைவு. ஆட்டோ உண்டு.
திறக்கும் நேரம்: காலை 8- 1 மணி, மாலை 4- இரவு 7மணி.
வெள்ளி, கிருத்திகை நாட்களில் காலை 8- இரவு 7 மணி.
போன்: 04328- 268 008.