
தேவாரம் பாடிய சுந்தரரை, நண்பராக சிவன் ஏற்ற தலம் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார். ஆயுள் முழுவதும் நட்பு நீடிக்க நண்பர்கள், இங்கு அருளும் கிருபாபுரீஸ்வரரை வழிபடுவது சிறப்பு.
தல வரலாறு: பாற்கடலை கடைந்து அமுதம் வந்த போது, ஆலகால விஷமும் தோன்றியது. சிவன் அந்த விஷத்தை உண்டு உலகைக் காப்பாற்றினார். சிவன் சாப்பிட்ட விஷத்தால் அவருக்கு எந்த வித பாதிப்பும் வரக்கூடாது என்ற காரணத்தால் பார்வதிதேவி வெண்ணெய்யால் கோட்டை கட்டி, யாககுண்டம் அமைத்து, தீ மூட்டி அதன் நடுவில் அமர்ந்து தவம் செய்தாள். வெண்ணெய்யால் கட்டப்பட்ட ஊர் என்பதால், இது திருவெண்ணெய்நல்லுார் என அழைக்கப் பட்டது.
கிருபாபுரீஸ்வரர்: தாருகாவனம் என்னும் காட்டில் முனிவர்கள், தங்கள் துணைவியருடன் வசித்தனர். அவர்கள் யாகம், தவம் முதலானவை செய்து அரிய சக்திகளைப் பெற்றிருந்தனர். இதனால் அவர்களுக்கு தலைக்கனம் ஏற்பட்டது. இவர்களின் ஆணவத்தை அடக்க சிவன் அங்கு வந்தார். அவர் பேரழகனாக வந்ததும், முனிவர்களின் துணைவியர் மனதில் சபலம் ஏற்பட்டது. அவர் பின்னால் சென்றனர். அதிர்ந்த முனிவர்கள் சிவனை கொல்ல தீய சக்திகளை ஏவினர். ஆனால் அவர்களது எண்ணம் நிறைவேறவில்லை. முடிவில் முனிவர்கள் பணிய, சிவனும் மன்னித்தார். முனிவர்களை மன்னித்து கிருபை செய்ததால் சிவனுக்கு கிருபாபுரீசுவரர் என பெயர் வந்தது.
சிறப்பம்சம்: கிருபாபுரீசுவரர் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். அம்மன் மங்களாம்பிகை நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். மகிஷன் என்ற அரக்கனை அழித்தாள் சக்தி. இதனால் ஏற்பட்ட கோபத்தை இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி தொலைத்து, மங்களம் பெற்றதால் மங்களாம்பிகை எனப்பட்டாள். தலவிருட்சம் மூங்கில். பெண்ணை, வைகுண்டம், வேதம், சிவகங்கை, பாண்டவ தீர்த்தம் என ஐந்து தீர்த்தங்கள் உள்ளன.
மூன்று லிங்கம்: சுந்தரர் தேவாரம் பாடிய தலங்களில் இது முதலாவதாகும். 'பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா' என்ற பாடல் தான் சுந்தரர் முதலில் பாடியதாகும். சுந்தரருக்கு முன்பே, திருநாவுக்கரசர் இத்தலத்தின் சிறப்பு குறித்து பாடியுள்ளார். அர்ஜுனனுக்கு குழந்தை பாக்கியம் அளித்த விஜயலிங்கம், இந்திரன் பூஜித்த சுந்தர லிங்கம், விஷ்ணு பூஜித்த சங்கரலிங்கம் இங்குள்ளன.
சுந்தரருக்கு அருளிய இறைவன்: சுந்தரரின் திருமண நாளன்று சிவன், ஒரு முதியவர் வேடத்தில் வந்தார். அவர் சுந்தரரிடம், 'நீ என் அடிமை என உன் முன்னோர் எனக்கு எழுதியதற்கான ஆதாரம் இது,'' என்று ஒரு ஓலைச்சுவடியை அங்கிருந்த பெரியவர்களிடம் காண்பித்தார். அதிலுள்ள கையெழுத்து முன்னோர்களுடையது தான் என்பதை அறிந்த பெரியவர்கள், சுந்தரரை முதியவருடன் செல்லுமாறு கூறினர். தனது திருமணம் நின்று விட்டதே என்ற கோபத்தில் சிவனை 'பித்தன்' என்று திட்டினார். அதை பொருட்படுத்தாமல் சுந்தரரை அழைத்துக்கொண்டு திருவெண்ணெய்நல்லுார் சென்றார் சிவன். வாசலில் தனது பாதுகைகளை கழற்றி விட்டு நேராக மூலஸ்தானத்திற்குள் சென்று மறைந்தார். வந்தது சிவன் என்பதை அறிந்து பரவசப்பட்டார் சுந்தரர். அப்போது அசரீரி ஒலித்து “சுந்தரா, என்னைப்பற்றி பாடு,” என்றது.
“எப்படி பாடுவது, என்ன பாடுவது என்று யோசித்தார். நீ என்னை 'பித்தா' என்று திட்டினாயே, அதை வைத்து பாடு,” என்று எடுத்துக்கொடுத்தார். சுந்தரரும் 'பித்தா, பிறைசூடி பெருமானே அருளாளா' என பதிகத்தை பாடினார். அன்றுமுதல் இருவரும் நண்பர்களாயினர்.
சிவனுக்கும், சுந்தரருக்கும் வாக்கு வாதம் நடந்ததை குறிக்கும் விதத்தில் பிரகாரத்தில் 'கல்மண்டபம்' உள்ளது. இங்கு சிவனின் 'பாதுகை' உள்ளன.
எப்படி செல்வது: விழுப்புரத்தில் இருந்து 23 கி.மீ.,
விசேஷ நாட்கள்: ஆடி சுவாதியில் சுந்தரர் விழா, கந்தசஷ்டி, பங்குனியில் தேரோட்டம்
நேரம் : காலை 6:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 93456 60711
அருகிலுள்ள தலம்: 25 கி.மீ.,ல் திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோயில்