ADDED : அக் 21, 2012 05:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்வித்தாயான சரஸ்வதியை மூலவராகக் கொண்ட கோயில் ஒரே ஒரு இடத்தில் தான் இருக்கிறது. திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் இவளைத் தரிசித்து வரலாம். இவ்வூரில் மகாலட்சுமி, துர்க்கையும் கோயில் கொண்டுள்ளதால் 'நவராத்திரி நகர்' எனப்படுகிறது.
தல வரலாறு:
ஒருசமயம் கலைவாணி தன் கணவர் பிரம்மாவிடம், 'இந்த சத்தியலோகமே, கல்விக்கரசியான தன்னால் தான் பெருமையடைகிறது,'' என்றாள். பிரம்மாவோ, படைக்கும் தொழிலைச் செய்யும் தன்னால் தான் பெருமையடைகிறது என்று வாதிட்டார். இது பெரும் பிரச்னையாகி ஒருவரையொருவர் சபித்துக் கொண்டனர். இதனால் பூலோகத்தில் புண்ணியகீர்த்தி, சோபனை என்னும் அந்தண தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் அவதரித்தனர். இந்த பெற்றோர் சோழநாட்டில் வசித்தனர். இவர்களுக்கு திருமண வயது வந்ததும் பெற்றோர் வரன் தேடினர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர நிலையிலுள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்குமே என அஞ்சினர்.
பெற்றோருக்கு இவ்விஷயம் தெரியவந்தது. சிவனை நினைத்து உள்ளம் உருகி பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் அவள் முன்தோன்றி, இப்பிறவியில் சகோதரர்களாக அவதரித்த நீங்கள், திருமணம் செய்வதென்பது இயலாத காரியம். எனவே, சரஸ்வதி மட்டும் இங்கே தனியாக கோயில் கொண்டிருக்கட்டும். இங்கு வரும் பக்தர்களுக்கு கல்விச்செல்வத்தை வழங்கட்டும்,' என்று அருள்பாலித்தார். அதன்படி கன்னி சரஸ்வதியாக இக்கோயிலில் இவள் அருள்பாலிக்கிறாள்.
ஒட்டக்கூத்தரும் பாரதியாரும்:
இவ்வூர் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் தன் அவைப்புலவரான ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்டது. எனவே அவரது பெயரால் 'கூத்தனூர்' ஆனது. ஒட்டக்கூத்தர் தான், இக்கோயிலைக் கட்டியதாகவும் தகவல் <உள்ளது. ஒட்டக்கூத்தர் முன்பு தான் குழந்தைகளுக்கு வித்தியாப்பியாசம் (எழுத்துப்பயிற்சி) தருகின்றனர். இவ்வூர் சரஸ்வதியை மகாகவி பாரதியார் பலமுறை வந்து வழிபட்டு சென்றுள்ளார். அதன் காரணமாகவே அவர் புகழ் பெற்ற கவிஞராக முடிந்தது என்கிறார்கள். இக்கோயில் ஒற்றைப் பிரகாரத்தைக் கொண்டது. ராஜகோபுரம் இருக்கிறது. விநாயகர், நாகர், பிரம்மா, பிரம்புரீஸ்வரர், பாலதண்டாயுதபாணி, ஒட்டக்கூத்தர் உள்ளனர். சரஸ்வதியின் முன் அன்ன வாகனம் உள்ளது. இதில் நர்த்தன விநாயகர் சுயம்புமூர்த்தியாக இருக்கிறார்.
சரஸ்வதி சிலை:
மூலவர் சரஸ்வதி வெண்மை நிற ஆடை தரித்து, வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல்கையில் அட்சரமாலையும், இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கியிருக்கிறாள். ஜடாமுடியும், கருணைபுரியும் இருவிழிகளும், 'ஞானச்சஸ்' என்ற மூன்றாவது திருக்கண்ணும் கொண்டு கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறாள்.
சிறப்பம்சம்:
இத்தலம் 'ஞான பீடம்' என்றும் 'தட்சிணதிரிவேணி சங்கமம்' என்றும் புகழ் பெற்றது. இவ்வூர் சிவன் கோயிலில் துர்க்கையும், பெருமாள் கோயிலில் மகாலட்சுமியும், தனி கோயிலில் சரஸ்வதியும் அருள்பாலிக்கின்றனர். ஒரே ஊரில் முப்பெரும் தேவியரையும் தரிசிக்க முடியும் என்பதும் விசேஷமான விஷயம். நவராத்திரிக்கென்றே அமைந்த ஊர் அது. கோயிலின் அருகில் புகழ் பெற்ற 'மாப்பிள்ளை சுவாமி' கோயில் இருக்கிறது. இந்த தலத்து சிவனை வழிபட்டால், திருமணத்தடையுள்ள ஆண், பெண்களுக்கு திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. புகழ்பெற்ற பிதுர் தர்ப்பண தலமான செதலபதி முக்தீஸ்வரர் கோயிலும் அருகில் உள்ளது.
ருத்ர கங்கை :
சரஸ்வதி இங்கு கோயில் கொண்டிருப்பதை அறிந்ததும், இன்று காணாமல் போன சரஸ்வதிநதி இங்கே வந்தது. இரண்டும் இணைந்து 'ருத்ர கங்கை' என பெயர் பெற்றது. இங்குள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் சிவனுக்கு அபிஷேக நீர் இத்தீர்த்தத்தில் இருந்தே எடுக்கப்படுகிறது. தற்போது 'அரசலாறு' என்ற பெயரில் ஓடுகிறது. பித்ரு தர்ப்பணத்திற்கு மிகச்சிறந்த நதி. ஆனால், மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் வருகிறது.
இருப்பிடம் :
திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 30 கி.மீ., துராத்தில் பூந்தோட்டம் கிராமம். இங்கிருந்து பிரியும் ரோட்டில் 6 கி.மீ., தூரத்தில் கோயில்.
திறக்கும் நேரம் :
காலை 6- 12 , மாலை 4- இரவு 9.
போன் :
04366 238 445.