/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
சரஸ்வதி பூஜையன்று மூக்குத்தி தரிசனம்
/
சரஸ்வதி பூஜையன்று மூக்குத்தி தரிசனம்
ADDED : அக் 21, 2012 05:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரையில் மீனாட்சியின் மாணிக்க மூக்குத்தி பிரபலம். அதுபோல், கல்வி தெய்வமான சரஸ்வதி தனது கணவர் பிரம்மாவுடன் அருளும் கும்பகோணம் வேதநாராயணப் பெருமாள் கோயிலில், பிரம்மாவின் இன்னொரு துணைவியான காயத்ரிதேவியின் மூக்குத்தி தரிசனம் விசேஷம். இதைப் பிரம்மன் கோயில் என்று அழைக்கின்றனர். சரஸ்வதி பூஜையை ஒட்டி மூக்குத்தி தரிசனம் காணலாம்.
தல வரலாறு:
படைக்கும் தொழில் தன்னிடம் மட்டுமே உள்ளது, சிவன், விஷ்ணுவிடம் இந்த சக்தி இல்லை என்பது குறித்து பிரம்மனுக்கு கர்வம் ஏற்பட்டது. இதையறிந்த விஷ்ணு, ஒரு பூதத்தை பிரம்மனிடம் அனுப்பினார். பூதத்தை பார்த்து பயந்த பிரம்மா, விஷ்ணுவிடம் சென்று, தான் படைக்காத பூதம் ஒன்று தன்னை பயமுறுத்துவதாகவும், அதனிடமிருந்து தன்னை காப்பாற்றும்படியும் வேண்டினார். அதற்கு விஷ்ணு,''உனது கர்வத்தை அடக்குவதற்காகவே பூதத்தை அனுப்பினேன். உனக்கு ஏற்பட்ட அகங்காரத்தி னால் படைக்கும் தொழில் மறந்து போகும்,''என்று சாபமிட்டார். வருந்திய பிரம்மா, சாப விமோசனம் வேண்டினார். அதற்கு விஷ்ணு,''பூமியில் சென்று தவம் செய்தால் விமோசனம் கிடைக்கும்,'' என்றார்.
ஒருமுறை உலகம் அழிந்த காலத்தில், இந்த பூமியில் அழியாமல் இருந்த பெருமை பெற்றது கும்பகோணம். அங்கு வந்து பிரம்மா யாகம் செய்தார். அவரது துணைவியரான சரஸ்வதி, காயத்ரியும் உடன் வந்தனர். பிரம்மாவுக்கு நான்கு தலை. காயத்ரிக்கு ஐந்து தலை. கணவரை விட மனைவிக்கு அதிக தலை இருந்ததால், யாககுண்டத்தில் இருந்து நெருப்பு எழவில்லை. உடனே சரஸ்வதி தனது மந்திர பார்வையில், காயத்ரியைப் பார்க்க அவளது ஒரு முகம் மறைந்து, பிரம்மாவை நோக்கி இருந்தது. அந்த முகத்தில் இருந்து ஒரு மூக்குத்தி ஜொலித்தது. உடனே யாககுண்டத்தில் நெருப்பு பற்றியது. உடனே, மகாலட்சுமி சமேதராக விஷ்ணு தோன்றினார். பிரம்மனுக்கு சாபவிமோசனம் கொடுத்து வேதங்களை சொல்லித்தந்து 'வேத நாராயணன்' என்று பெயர் பெற்றார். தாயார் வேதவல்லி எனப்படுகிறாள்.
தல சிறப்பு:
பிரம்மா தன் தேவியர்களான சரஸ்வதி, காயத்ரி தேவியருடன் நின்ற கோலத்தில் வேதநாராயணப்பெருமாளிடம் ஆசி பெறும் கோலத்தில்உள்ளார். அடுத்துள்ள மூலஸ்தானத்தில் வேதநாராயணப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். பிரம்மனுக்கு எதிரில் யோக நரசிம்மர் இரண்டு தாயார்களுடன் உள்ளார். இப்படி ஒரே இடத்தில் அடுத்தடுத்த சந்நிதிகளில் மூன்று தெய்வங்களையும் தரிசிப்பது தலத்தின் சிறப்பம்சம். கல்வியில் சிறந்து விளங்குவதற்கும், தொழிலில் மேன்மையடையவும் இங்கு 'பிரம்ம சங்கல்ப பூஜை' செய்யப்படுகிறது. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் இங்குள்ள பிரம்மா, சரஸ்வதி, காயத்ரிக்கு விசேஷ அர்ச்சனை செய்கிறார்கள். வியாழக்கிழமைகளில் பிரம்மனுக்கு சிறப்பு பூஜை உண்டு.கடன் தொல்லையில் இருந்து விடுபட வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கும், சனிக்கிழமை பெருமாளுக்கும் சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது. ஆயுள் அபிவிருத்தி, சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்திக் காகயோகநரசிம்மருக்கு ஹோமம் செய்யப்படுகிறது.
மூக்குத்தி தரிசனம்:
இங்குள்ள காயத்ரிக்கு நான்கு முகமே உள்ளது குறிப்பிடத்தக்கது. சரஸ்வதிபூஜையன்றும், ரோகிணி நட்சத்திர நாட்களிலும் காயத்ரிதேவி 'மூக்குத்தி தரிசனம்' நிகழ்ச்சி இங்கு நடக்கும். அப்போது அம்பாளின் மூக்குத்தி ஒளியை இங்கு காணலாம். இதைக் காணும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். வியாபார அபிவிருத்தி, குழந்தைகளுக்கு ஞாபகசக்தி அதிகரித்தல், பேச்சுத்திறன் ஏற்படும். இந்த நாட்களில் தரிசனம் இலவசம். மற்ற நாட்களில் பார்க்கரூ.50 கட்டணம். திருமணத்தடையுள்ள பெண்கள், தொடர்ந்து துன்பத்தை அனுபவிப்போர் தங்கள் ஜாதகத்தை பிரம்மாவின் பாதத்தில் வைத்து பூஜித்தால் பிரச்னைகள் தீரும் என்கிறார்கள்.
திறக்கும் நேரம்:
காலை 8- 11.30, மாலை 5.30- 9.
இருப்பிடம்:
கும்பகோணம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ. தூரத்திலுள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ளது. பிரம்மன் கோயில் என்றால் தான் தெரியும்.
போன்:
94865 68160