ADDED : மார் 15, 2016 02:29 PM

திருவனந்தபுரம் அருகிலுள்ள நெய்யாற்றின்கரையில் கிருஷ்ணர் பாலகனாக நவநீத கிருஷ்ணன் என்னும் பெயரில் கோவில் கொண்டிருக்கிறார். இங்கு பக்தர்களுக்கு அளிக்கப்படும் வெண்ணெய் நோய் தீர்க்கும் மருந்தாக திகழ்கிறது.
தல வரலாறு: திருவாங்கூர் சமஸ்தானத்தில் மார்த்தாண்ட வர்மா மன்னராக இருந்தார். பதவிக்காக சிலர் மன்னரைக் கொல்ல சதியில் ஈடுபட்டனர். ஒரு சமயத்தில் பகைவர்களிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள மன்னர் தப்பியோடினார். நெய்யாற்றின்கரையை அடைந்த மன்னர் பெரும் பயத்துடன் இருந்தார். அப்போது புல்லாங்குழலுடன் சிறுவன் ஒருவன் வந்தான். அங்கிருந்த பலா மரப்பொந்தில் ஒளிந்து கொண்டால் எதிரிகளிடம் இருந்து தப்பி விடலாம் என்று சுட்டிக் காட்டினான். மன்னரும் அதில் ஒளிந்து உயிர் பிழைத்தார்.
பின்னாளில் பகைவர்களை வென்ற மன்னர் அரண்மனை திரும்பினார். ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய கிருஷ்ணர், 'நானே சிறுவன் வடிவில் வந்து காப்பாற்றினேன்,'' என்றார். இதற்கு நன்றிக்கடனாக நெய்யாற்றின்கரையில் மன்னர் பாலகிருஷ்ணனுக்கு கோவில் கட்டினார்.
கிருஷ்ணருக்கு பிடித்தது வெண்ணெய். இதை சமஸ்கிருதத்தில் 'நவநீதம்' என்பர். இதனால் கிருஷ்ணருக்கு 'நவநீதகிருஷ்ணன்' என்ற பெயர் சூட்டப்பட்டது.
ஊர் பெயர்க்காரணம்: மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் அகத்திய முனிவர் வாழ்ந்த பகுதியை 'அகஸ்தியர் கூடம்' என்பர். இங்கு யாகத்திற்காக பெரிய கொப்பரைகளில் நெய் நிரப்பப்பட்டிருந்தது. அந்த நெய் வழிந்தோடிய பகுதியில், பிற்காலத்தில் கிருஷ்ணரின் அருளால் தெளிந்த ஆறு ஓடியது. அதுவே நெய்யாறு எனப்பட்டது. நெய்யாற்றங்கரையில் அமைந்த ஊர் என்பதால், இந்த ஊருக்கு 'நெய்யாற்றின்கரை' என பெயர் வந்தது.
வெண்ணெய் பிரசாதம்: முதலில் செய்த கிருஷ்ணர் சிலையின் அமைப்பு சரியில்லாததால், பஞ்சலோகத்தில் மற்றொரு சிலை செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலவர் கிருஷ்ணர் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமியை நோக்கி இருப்பதாக ஐதீகம். மூலவர் சிலையும், அதன் அடிப்பகுதியும் பஞ்சலோகத்தால் ஆனது. மன்னர் தன் உயிரை காத்த சிறுவனின் உருவத்தை வரைந்து காட்டியது போலவே, கிருஷ்ணர் சிலை வடிக்கப்பட்டது. இங்கு தரப்படும் பிரசாத வெண்ணெயை நோய் தீர்க்கும் மருந்தாக பக்தர்கள் கருதுகின்றனர்.
அம்மச்சி பிலாவு: நான்கு புறமும் வாசல் கொண்ட இந்தக் கோவிலின் பிரதான வாசல் மேற்கில் உள்ளது. வடக்கு வாசல் வழியாக வந்தால் நெய்யாறு ஓடுவதைக் காணலாம். கிழக்கு நோக்கி கணபதி சன்னிதி உள்ளது. கருவறையின் முன் தங்க கொடிமரமும், வெளிப்புறத்தில் கேரள பாணியில் விளக்கு மாடமும் இருக்கிறது. நாலம்பலம் என்னும் உள்பிரகாரம் கலைநயம் மிக்கது. கருங்கல்லால் ஆன சோபனம் (கருவறை முன் உள்ள மேடை) கவிழ்ந்த தாமரை மலரைப் போல் உள்ளது. ஸ்ரீகோவில் என்னும் கருவறையின் கூரை, சதுர வடிவில் செப்பு தகடால் ஆனது. வலப்புற நுழைவு வாசலில் உள்ள காயத்ரி, ராமர் பட்டாபிஷேகம், அனுமன், யோக நரசிம்மர் சித்திரங்கள் சிறப்பு மிக்கவை. கோவிலுக்கு அருகிலுள்ள 'அம்மச்சி பிலாவு ' (தாய் பலா மரம் ) வேலியிட்டு பாதுகாக்கப்படுகிறது. தினமும் மூன்று கால பூஜை நடக்கிறது.
திருவிழா: பங்குனியில் பிரம்மோற்ஸவம், கிருஷ்ண ஜெயந்தி, சித்திரை விஷு தரிசனம், வைகுண்ட ஏகாதசி.
இருப்பிடம்: திருவனந்தபுரம்-நாகர்கோவில் ரோட்டில் 20 கி.மீ.,

