ADDED : செப் 10, 2023 05:47 PM

கல்லிலே கலைவண்ணம் கண்டவர்கள் பல்லவர்கள். குடைவரைக்கோயில்களை அமைப்பதில் வல்லவர்கள். இவர்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் எங்கு எல்லாம் வளமான பாறைகள் இருந்தனவோ, அங்கு எல்லாம் கைவண்ணத்தை காட்டியுள்ளனர். அதில் ஒன்றுதான் செங்கல்பட்டு மாவட்டம் வல்லத்தில் இருக்கும் வேதாந்தீஸ்வரர் கோயில்.
இயற்கை எழிலார்ந்த இந்தக் கிராமத்தில் சிறு குன்றின் மீது இயற்கையாக காட்சி தருகிறார் வேதாந்தீஸ்வரர். இவரை தரிசிப்பதற்கு முன்பு கரிவரதராஜப் பெருமாளை முதலில் சந்தித்தாக வேண்டும். மலையில் படியேறி செல்லும்போது வலதுபுறம் தாழ்வான பாறைச்சரிவில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் காட்சி தருகிறார் கரிவரதராஜப் பெருமாள். இவரது சன்னதிக்கு அருகில் புன்னகை தவழ அருள்பாலிக்கிறாள் விஷ்ணு துர்கை. சைவ, வைணவ ஒற்றுமைக்கு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார் பல்லவ மன்னர் மகேந்திரவர்மன்.
மீண்டும் மலையில் ஏறினால் குடைவரையில், ருத்ராட்ச பந்தலின் கீழ் வேதாந்தீஸ்வரரை காணலாம். அருகில் ஞானாம்பிகை அம்பாள். இப்படி கருவறையின் முன்பு ஓரிடத்தில் நின்றபடியே சிவன், அம்பாள், சண்டிகேஸ்வரர், விநாயகர், முருகன் என பஞ்சமூர்த்திகளை பார்க்கலாம்.
இவர்களுக்கு அருகே தனியாக செல்வ விநாயகர் ஜம்மென்று அமர்ந்து இருக்கிறார். இக்கோயிலின் மற்றொரு சிறப்பு ஜேஷ்டா தேவி. இவள் திருப்பாற்கடலை கடையும்போது முதலில் தோன்றியவள் என்பதால், 'மூத்ததேவி' என அழைப்பர். இவளை வணங்கினால் உடல் ஆரோக்கியம், மன அமைதி, ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். என்னப்பா... துாக்கமெல்லாம் ஒரு பிரச்னை. இதற்கெல்லாம் வழிபாடா என நினைக்காதீர். உண்மையில் துாக்கம் என்பது கடவுள் தரும் மாமருந்து. அது சரியாக இருந்தால் எல்லாம் (உடல்நலம்) சரியாகும். 'துாக்கமும் கண்களை தழுவட்டுமே' என நினைப்பவர்களுக்கு நிச்சயம் இவளின் கரிசனம் தேவை. கூடவே மனதில் அமைதியும் நிலவும். இங்கு சித்தர்களும் வலம் வருகின்றனர். கொம்பை என்ற பல்லவ அரசகுமாரியும், குடிமகள் ஒருவரும் இக்கோயிலை நிர்மாணிப்பதற்கு மூலகாரணமாக இருந்துள்ளனர்.
எப்படி செல்வது: செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் 3 கி.மீ.,
விசேஷ நாள்: பவுர்ணமி, பிரதோஷம் அமாவாசை, மஹா சிவராத்திரி ஏகாதசி
நேரம்: காலை 7:00 - 9:00 மணி; மாலை 5:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 94431 72894
அருகிலுள்ள தலம்: இளநகர் உடையீஸ்வரர் கோயில் 43 கி.மீ., (மனபலம் அதிகரிக்க...)
நேரம்: காலை 6:00 - இரவு 7:00 மணி
தொடர்புக்கு: 98409 55363; 044 - 2474 2282

