/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
ஐயோ பசிக்குதே! - வாரியாரிடம் கெஞ்சிய தொண்டர்
/
ஐயோ பசிக்குதே! - வாரியாரிடம் கெஞ்சிய தொண்டர்
ADDED : நவ 05, 2010 04:01 PM

66 ஆண்டுகளுக்கு முன், திருச்செந்தூரில் நடந்த கந்தசஷ்டி விழாவுக்கு, கிருபானந்தவாரியார் சுவாமிகள் சென்றிருந்தார். அது பற்றிய தனது நினைவலைகளை நூல் ஒன்றில் சொல்லியுள்ளார். இதோ! அதன் தொகுப்பு. திருச்செந்தூரில் 1944ம் ஆண்டு நடந்த கந்தசஷ்டி விழாவில் பேச என்னை அழைத்திருந்தனர். முருகன் தலத்தில் உயர்ந்தது திருச்செந்தூர். தனது தந்தையாகிய சிவனுக்கு, ஐந்து சிவலிங்கங்களை அமைத்து முருகன் பூஜித்த அரிய திருத்தலம் செந்திலம்பதி. இங்கே மூலவருடைய திருக்கரத்தில் மலர் உள்ளது. ஒருமுறை, செந்திலாதிபனாகிய முருகன் அப்பாவை வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்போது தேவர்கள் வந்து வணங்கினர். பூவேந்திய கரத்துடன் திரும்பிக் காட்சியளித்தார். செந்திலாண்டவனுடைய பின்புறத்தில் ஈசானம், தத்புருஷம், அசோகரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்து சிவலிங்கங்கள் உள்ளன. செந்தில் நாயகனை வழிபடுகின்ற நேரத்தில் முருகனுக்குத் தீபாராதனையை செய்து அத் தீபராதனையைப் பின்புறம் உள்ள சிவமூர்த்திக்கும் செய்வர். இது உற்றுப் பார்க்கின்றவர்களுக்குத் தெரியும். இந்தத் திருக்கோயிலுக்குச் சென்றால் அங்கு நடைபெறுகின்ற வழிபாட்டு முறைகளையும், முருகப்பெருமானுடைய திருமேனியை யும் நன்கு பார்த்து சில உண்மைகளை உணர்தல் வேண்டும். கந்தசஷ்டி விழாவில் விரிவுரை புரிவதற்காக அடியேன் திருச்செந்தூர் சென்றபோது மோகனூரில் இருந்து ஆறு அன்பர்கள் என்னுடன் வந்தார்கள். சஷ்டி விரதம் ஆரம்ப நாள் அது. என்னுடன் வந்திருந்த மோகனூர் அன்பர்களைப் பார்த்து நான்,'' இன்று முதல் சஷ்டி விரத நாள், எனவே யாரும் சாப்பிடக் கூடாது. உபவாசம் இருத்தல் வேண்டும். முருகப் பெருமானுடைய சடாட்சர மந்திரம் (சரவணபவ)ஜெபம் செய்யுங்கள்,'' எனக் கூறினேன். என்னுடன் வந்த அந்த அன்பர்கள் கோயிலைப் பார்ப்பதற்காகவும், ஊர் சுற்றிப் பார்ப்பதற்காகவும் சென்றார்கள். அப்போது மாலை 6 மணி இருக்கும். நான் தங்கியிருந்த வீட்டின் மேல் மாடியில் அமர்ந்து கொண்டு ஜெபம் செய்து கொண்டிருந்தேன். மோகனூரிலிருந்து என்னுடன் வந்த அன்பர்களில் ஒருவர் பொதுப்பணியில் மிகுந்த ஈடுபாட்டினை உடையவர். இவர் என்னிடத்தில் வந்து அமர்ந்து, ஒரு சீப்பு வாழைப்பழத்தினை என் முன்னால் வைத்து, விழுந்து வணங்கினார். நான் ''என்ன விஷயம்?'' எனக்கேட்டேன். அவர் வாடிவதங்கிய முகத்தோடு நின்றார். அவர் தழுதழுத்த குரலில் என்னிடம், ''சுவாமி! தாங்கள் என்னை உபவாசம் இருக்கச் சொன்னீர்கள். எனக்கோ பசி தாங்க முடியவில்லை. தலையை சுற்றுகின்றது. கால் தள்ளாடுகின்றது. உங்களது அனுமதி இல்லாமல் அரை டஜன் வாழைப்பழத்தினை உள்ளே தள்ளிவிட்டேன். இந்த பழத்தை சாப்பிடவும், இரு தோசை சாப்பிடவும் தயவு செய்து உத்தரவு தாருங்கள்,'' எனக் கூறினார்.எனக்கு 'ஐயோ' என்று இருந்தது. பாவம் மனிதன் பசியால் வாடிப் பரிதவிக்கிறான் என்று கருதி 'போய்ச் சாப்பிடுங்கள்' எனக் கூறினேன். இரு தோசைக்கு உத்தரவினை பெற்ற அவர் தினம் மூன்று வேளைகளிலும் இரு தோசைகள் சாப்பிடலானார். இப்படி தனது அனுபவத்தை முடித்து விடுகிறார் வாரியார் சுவாமிகள். அவரது அனுபவத்தில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன தெரியுமா? விரதம் இருக்கும் போது பக்தியுடன் உபவாசத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அது தான் பூரண பக்தி, வயிறு பசியால் வாடுவதை மனம் ஒரு கணங்கூட நினைக்காத வகையில் உபவாசம் இருத்தல் வேண்டும்.அதைவிடுத்து 'ஐயோ! பசி என்னை வாட்டுகிறதே' என்று மனம் ஓலமிட்டுக் கொண்டிருந்தால் உள்ளம் பக்தியில் தோய்ந்து நிற்காது. கந்தசஷ்டி விரதமிருப்பவர்கள் பசி தாங்கும் வலிமையை, அந்த முருகப்பெருமானிடமே கேட்டுப் பெற வேண்டும்.