
ஏப்., 25 - சித்ரா பவுர்ணமி!
சித்ரா பவுர்ணமியன்று மதுரை வைகை ஆற்றில் மஞ்சள் நிற தங்கக்குதிரையில் கள்ளழகர் இறங்குவார். அதற்கு முன்னதாகவே ஒரு பெருமாள் வெள்ளிக் குதிரையில் ஆற்றில் எழுந்தருளி, முன்னும் பின்னும் ஆடிக்கொண்டே வையாழி நடைபயில்வார். இவர் 'அண்ணா வாரும்' என கள்ளழகரை ஆற்றிற்குள் அழைத்து வருவார்.
ஆற்றின் நடுமண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளும்போது, அவரை இந்தப் பெருமாள் மூன்று முறை சுற்றி வருவார். அவருக்கு கள்ளழகர் சார்பாக தீர்த்தம், பரிவட்டம், மாலை என முதல் மரியாதை செய்யப்படும். இப்படி, கள்ளழகரிடமிருந்து முதல் மரியாதை பெறும் பெருமாளை தரிசிக்க வேண்டுமானால் மதுரை தெற்கு மாசி வீதி வீரராகவப்பெருமாள் கோயிலுக்கு செல்ல வேண்டும். சித்ராபவுர்ணமியன்று இங்கு தரிசனம் செய்தால் செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம்.
தல வரலாறு:
பல்லாண்டுகளுக்கு முன்பு, சோழவந்தான் அருகிலுள்ள தேனூரில் தான் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா நடந்தது. அக்காலகட்டங்களில் பெருமாளுக்குரிய உற்சவ மண்டபங்கள் நெற்கதிர் கால்களைக் கொண்டு அமைக்கப்படும். ஒருமுறை கள்ளழகர் இந்த மண்டபத்தில் எழுந்தருளியபோது திடீரென தீப்பிடித்து விட்டது. அமுதார் என்ற அர்ச்சகர், உயிரையும் பொருட்படுத்தாமல் தீயில் சிக்கிய கள்ளழகர் சிலையைத் தூக்கி, ஆற்று மணலில் போட்டுவிட்டு மயங்கி விழுந்தார்.
இதைக்கண்ட அரசன், ''அமுதாரே! நான் ஆண்டாண்டு காலமாக கள்ளழகரின் தீவிர பக்தனாக உள்ளேன். இவ்விழாவில் முதல் மரியாதையும் எனக்கு கிடைக்கிறது. அப்படியிருந்தும் கூட அழகரை காப்பாற்றாமல் என் உயிரை பெரிதெனக் கருதி ஒதுங்கி நின்றேன். நீங்களோ உயிரையும் பொருட்படுத்தாமல் பெருமாளை காப்பாற்றி விட்டீர்கள். எனவே இவ்வாண்டு முதல் எனக்குத் தரப்பட்ட முதல் மரியாதையை தாங்களே பெற வேண்டும்'' என கேட்டுக்கொண்டார். அதற்கு அமுதார்,''அரசே! நான் மிகச் சாதாரணமானவன். முதல் மரியாதை பெறும் தகுதி எனக்கு இல்லை. நான் அர்ச்சகராக சேவை செய்யும் வீரராகவப் பெருமாளுக்கு, கள்ளழகரின் முதல் மரியாதை கிடைக்குமாறு செய்யுங்கள்,''என வேண்டினார். அவரது விருப்பப்படியே கள்ளழகர் வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் போது, மதுரை வீரராகவப் பெருமாளுக்கு முதல் மரியாதை தரப்படுகிறது.
சிறப்பம்சம்:
சொக்கப்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட கோயிலில் பெருமாள் நின்ற கோலத்தில் வீரராகவப்பெருமாளாகவும், கிடந்த கோலத்தில் ரங்கநாதராகவும், அமர்ந்த கோலத்தில் யோக நரசிம்மராகவும் அருளுகிறார். தாயார் கனகவல்லி தனி சந்நிதியில் அருளுகிறாள். ஸ்ரீதேவி, பூதேவியுடன், பள்ளிகொண்ட ரங்கநாதர், சக்கரத்தாழ்வார், கருடன், ஆஞ்சநேயர், மணவாள மாமுனிகள், நவக்கிரகங்களுக்கு சந்நிதி உள்ளது.
சுக்கிர ஓரை வழிபாடு:
புத்திரபாக்கியம், திருமணம், தொழில் விருத்தி, வழக்கில் வெற்றி பெறவும், சத்ரு பயம், நவக்கிரக தோஷம், கணவன் மனைவி கருத்து வேறுபாடு நீங்கவும், செல்வம் பெருகவும் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் (இரவு 8 - 9) ரங்கநாதருக்கு சிறப்பு ஆராதனை நடக்கிறது. பெருமாளுக்கு உகந்தது சனிக்கிழமை என்றாலும், இங்கு வெள்ளியன்று தான் பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும்.
இருப்பிடம்:
மதுரை தெற்கு மாசிவீதியிலுள்ள வீரராகவப்பெருமாள் கோயில் தெரு, எழுத்தாணிக்காரத்தெரு சந்திப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 - 11, மாலை 4 -இரவு 8.30.
போன்:
0452 2338542