
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செலவே இல்லாமல், பிரம்மாண்டமான ஒரு கோயிலை மனமிருந்தால் கட்ட முடியும். எப்படி? காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலுக்கு வாருங்கள். இதுபற்றிய ரகசியத்தை மிகச்சுலபமாக அறிய முடியும்.
தல வரலாறு:
தொண்டை நாட்டிலுள்ள திருநின்றியூரில் வசித்தவர் பூசலார் என்னும் சிவபக்தர். இவர் வேதங்களைப் படித்து வித்தகரானார். நல்ல வழியில் சம்பாதித்த குறைந்த பொருளையும் சிவனடியார்களுக்காக செலவழித்தார். சிவனுக்கு எப்படியாவது ஒரு கோயிலைக் கட்டி விட வேண்டுமென்பது இவரது ஆசை. ஆனால், இவரது குறைந்த வருமானம் அதற்கு இடம் கொடுக்குமா என்ன! ஆசை நிறைவேற வழியின்றி தவித்துக் கொண்டிருந்தார்.
இந்த மனம் இருக்கிறதே! அது ஒரு பெரிய சாதனம். இந்தியாவில் இருக்கும் மனம், திடீரென அமெரிக்காவில் போய் நிற்கும். அங்கேயுள்ள நியூயார்க்கையும், வாஷிங்டனையும் மனக்கண்ணால் பார்க்கும். காற்றுக்கென்ன வேலி..கடலுக்கென்ன மூடி என்பது போல, மனதுக்கேது கட்டுப்பாடு. அந்த மனம் அவரை பெரும் செல்வந்தர் ஆக்கியது.
ஆம்... தன்னை ஒரு செல்வந்தர் போல், கற்பனை செய்து கொண்டார் பூசலார்.
கற்கள் வேண்டுமா! வண்டி வண்டியாக வந்து குவிந்தது. தலை சிறந்த சிற்பிகள் வேண்டுமா! பாண்டியநாடு, சேரநாடு, சோழநாடு என்றெல்லாம் பல்வேறு இடங்களில் இருந்தும் வரவழைத்தார். பணம் வேண்டுமா! மனதாலேயே கோடி கோடியாக சம்பாதித்தார். இப்படி பிரம்மாண்டமான ஒரு கோயில் தயாரானது மனதிற்குள்ளேயே! சுற்றுச்சுவர், மதில், கோபுரம், விமானம், மண்டபம், தெப்பக்குளம், வாகனங்கள், மூலவர், உற்சவர் சிலைகள் எல்லாம் தயாராயிற்று. அதோடு விட்டாரா! கும்பாபிஷேகத்திற்கும் அந்த மனம் நாள் குறித்து விட்டது.
''சிவபெருமானே! உனக்காக என் இதயத்தில் கோயில் கட்டி முடித்து விட்டேன். அங்கே லிங்கமெல்லாம் அமைத்தாயிற்று. நீ வந்து எழுந்தருளி விட்டால், நான் குறித்துள்ள சுபயோக சுபதினத்தில் அருமையாக கும்பாபிஷேகத்தையும் முடித்து விடுவேன். எனக்கு அருள் செய்க!'' என்று வேண்டினார்.
மன்னர் கட்டிய கோயில்:
இந்த சமயத்தில், காஞ்சிபுரத்தை ஆண்ட மன்னன் காடவர்கோன், சிவனுக்கு கோயில் கட்டிக் கொண்டிருந்தான். செல்வந்தனாயிற்றே! பிரம்மாண்டமாக கோயில் உருவானது. கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்தாயிற்று.
அன்றிரவில், காடவர்கோன் கனவில் சிவன் எழுந்தருளினார்.
''ஏனப்பா! ஒரேநாளில், இரண்டு பேர் கும்பாபிஷேகம் நடத்தினால் நான் எங்கே போவேன்? அதிலும், திருநின்றியூரில் என் பக்தன் பூசலார், உன்னிலும் மிகப்பிரம்மாண்டமான கோயிலைக் கட்டி, உனக்கு முன்னதாகவே நாள் குறித்து, என்னிடம் எப்போது வருவாய் என கேட்டுக் கொண்டிருக்கிறான். நீயும் அதேநாளில் அழைத்தால் என்ன செய்வேன்?'' என்று கேட்டு மறைந்தார்.
காடவர்கோன் திடுக்கிட்டு விழித்தான்.
திருநின்றியூருக்கு உடனே பயணமானான். அங்கே, கோயில் ஏதும் இல்லாதது கண்டு விசாரித்தான்.
பூசலாரிடம் சென்று, சிவன் தன்னிடம் சொன்னதை விவரித்தான்.
''மன்னா! என் சிவனா அப்படி சொன்னான்? என் மனதில் கட்டிய கோயிலுக்குள் அவன் எழுந்தருளப் போகிறானா?'' என்று மெய் சிலிர்த்தார். பூசலாரின் ஆசையை நிறைவேற்றும் விதத்தில், மன்னன் திருநின்றியூரிலும் ஒரு கோயிலைக் கட்டினான். திரு இருதயாலீஸ்வரர் என்பது அங்குள்ள இறைவனின் பெயர். பின், காஞ்சிபுரத்தில் அவன் கட்டிய கோயில், கயிலாயத்துக்கு நிகரானது என்பதால், கைலாசநாதர் கோயில் என்று பெயர் சூட்டினான்.
சிறப்பம்சம்: இங்குள்ள கைலாசநாதரை நாரத மகரிஷி வணங்கியுள்ளார். இங்குள்ள கருவறையைச் சுற்றி 'சொர்க்கவாசல்' என்னும் பிரகாரம் உள்ளது. இந்த வாசலுக்குள் நுழையும் இடமும், வெளிவரும் இடமும் குறுகலாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்குள் நுழைந்து வெளியே வந்தால் மறுபிறப்பு இல்லை என்பது ஐதீகம்.
'சேன்ட் ஸ்டோன்' எனப்படும் மண் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட இக்கோயில் மிகவும் பழமையானது, கலைநயம் மிக்கது என்பதால், தொல்பொருள் துறை பராமரித்து வருகிறது. கைலாசநாதரைத் தரிசித்தால் பாவநிவர்த்தி, நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கைலாசநாதரை தரிசிக்க வசதியுள்ளவர்கள் நேரில் சென்று வாருங்கள். வசதி இல்லாதவர்கள் மனதாலேயே தரிசியுங்கள். எப்படி செய்தாலும், சிவனருள் கிடைப்பது உறுதி.
இருப்பிடம்: காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து இரண்டு கி.மீ.,
திறக்கும் நேரம்:
காலை 7-11, மாலை 4- இரவு 8.
போன்:
97865 37715.

