ADDED : டிச 26, 2020 08:28 PM

கடலுார் மாவட்டம் பண்ருட்டியிலுள்ள திருவதிகை சரநாராயணப்பெருமாள் கோயிலில் பள்ளி கொண்ட நரசிம்மர் சன்னதி உள்ளது. பிரதோஷத்தன்று இவரை தரிசித்தால் நினைத்தது நிறைவேறும்.
அசுரர்களான தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலியிடம் பறக்கும் கோட்டைகள் இருந்தன. அவற்றில் பறந்து சென்று தேவர்களையும், முனிவர்களையும் தாக்கினர். சிவபெருமானிடம் முறையிடவே, அவர் அசுரர்களுடன் போர் புரிய தயாரானார். அதற்காக தேர் ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் சூரியனும், சந்திரனும் சக்கரங்களாக மாறினர். பூமி தேரின் தட்டாக ஆக்கப்பட்டது. நான்கு வேதங்களும் குதிரைகளாக தேரில் பூட்டப்பட்டது. மேருமலையை வில்லாக வளைத்த சிவபெருமான் ஆதிசேஷனை அதில் நாணாக பூட்டினார், பிரம்மா தேரின் சாரதியாக அமர்ந்தார், மகாவிஷ்ணுவே அம்பாக மாறி அசுரர்களின் அழிவுக்கு துணை நின்றார்.
அவரே 'சர நாராயணப் பெருமாள்' என்னும் பெயரில் இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார். சரம் என்ற சொல்லுக்கு அம்பு என்பது பொருள். பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் உள்ள மகாவிஷ்ணுவின் சிலை சாளக்கிராம கற்களால் ஆனது. பாரதப்போர் முடிந்ததும் பிராயச்சித்தம் தேடிய அர்ஜுனன் இங்கு வழிபாடு செய்து பாவம் நீங்கப் பெற்றார்.
செங்கமலத்தாயார் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். மாதம் தோறும் உத்திர நட்சத்திரத்தன்று தாயாருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. வழக்கமாக கைகூப்பி நிற்கும் கருடாழ்வார், இங்கு மட்டும் கைகட்டி சேவை செய்யும் நிலையில் உள்ளார். மார்க்கண்டேய மகரிஷியின் மகளான ஸ்ரீதேவியை மகாவிஷ்ணு இங்கு மணம் செய்தார். இத்தலத்தை தரிசித்தால் திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். மகாலட்சுமியின் அம்சமான வில்வம் தலவிருட்சமாக உள்ளது.
இங்குள்ள நரசிம்மர் படுத்த கோலத்தில் காட்சியளிக்கிறார். அசுரனான வக்ரனை வதம் செய்த களைப்பு தீர நரசிம்மர் இங்கு தங்கியுள்ளார். பிரதோஷத்தன்று இவரை வழிபட்டால் சுகபோக வாழ்வு கிடைக்கும்.
எப்படி செல்வது
* கடலுாரில் இருந்து பண்ருட்டி 27 கி.மீ.,
விசேஷ நாள்
சித்திரை திருமஞ்சனம், கிருஷ்ண ஜெயந்தி, பங்குனி உத்திரம்
நேரம்
காலை 8:00 - 10:00 மணி
மாலை 5:00 - 8:15 மணி
தொடர்புக்கு
94437 87186. 04142 - 243 540
அருகிலுள்ள தலம்
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் 2 கி.மீ.,
நேரம் : காலை 6:00 - 12:00 மணி
மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 98419 62089