/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
மகாபெரியவரால் உருவான பஞ்சமுக சிவாலயம்
/
மகாபெரியவரால் உருவான பஞ்சமுக சிவாலயம்
ADDED : பிப் 25, 2011 09:34 AM

காஞ்சிப்பெரியவரின் ஆன்மிகஉரை கேட்டு, சிவனுக்கு ஐந்து முகங்களுடன் அமைந்த கோயில் சென்னை முகப்பேரில் உள்ளது.
தல வரலாறு: ஒரு காலத்தில் தொண்டைநாட்டை ஆண்ட மன்னர்கள் பிள்ளைப்பேறு வேண்டி புத்திரகாமேஷ்டி யாகத்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடத்தி வந்தனர். மகப்பேறுக்காக யாகம் நடந்த இந்த இடத்தின் பெயர் மருவி 'முகப்பேர்' என ஒரு தகவல் உண்டு. தொண்டை நாட்டின் முகப்பு பகுதியாக இருந்ததால் 'முகப்பூர்' என்றிருந்த, 'முகப்பேர்' என்றானதாகவும் சொல்லலாம். மேற்கு முகப்பேரில் புத்ரகாமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இவர் ஐந்து முகங்களுடன் காட்சி அளிப்பதால் 'பஞ்சமுக சிவன்' என்றும் பெயர் பெறுகிறார்.
காஞ்சிப்பெரியவரின் உரை: 1992ல், முகப்பேர் வந்த காஞ்சிப்பெரியவர் பஞ்சமுக சிவாலயம் ஏற்பட காரணமாக அமைந்தார். சாஸ்திரப்படி சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் என்றும், ஒவ்வொரு முகத்திற்கும் தனித்தனியாக சகஸ்ர நாமம் உண்டு என்றும், இறைவனின் ஆறாவது முகமான அதோமுகம் மட்டும் வெளியில் தெரியாது என்றும் அவர் இங்கு உரையாற்றும்போது குறிப்பிட்டார். பெரியவரின் வழிகாட்டுதலை செயல்படுத்தும் விதத்தில் இங்கு ஐந்து முகச் சிவாலயம் அமைக்கப்பட்டது
ஐந்து முகசிவன்: சிவாலயங்களில் சிவபெருமானை லிங்க வடிவத்தில் அமைப்பது வழக்கம். இங்கும் மூலவர் லிங்கவடிவில் இருந்தாலும், ஐந்து திருமுகங்களுடன் காட்சி தருகிறார். இந்த லிங்கம் காசியில் வடிவமைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. கருப்பான பளிங்கு கல்லினால் ஆன இந்த லிங்கத்தில் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்னும் ஐந்து முகங்களும் ஒவ்வொரு திசையை நோக்கி அமைந்துள்ளன.
முகத்திற்கு ஒரு பலன்: மேல்நோக்கி இருக்கும் சத்யோஜாதத்தை வழிபட்டால் கல்வி, அரசியல், கலை வாழ்வு சிறக்கும். மேற்கு பார்த்த ஈசானமுகத்தை வழிபட்டால் நோய், புத்திரசோகம், விஷக்கடி பாதிப்பு ஆகியவற்றில் இருந்து தப்பிக்கலாம். வடக்கு நோக்கிய முகமான தத்புருஷம் பூமி லாபம் தருவதுடன், குடும்ப ஒற்றுமைக்கு வழிகாட்டும். கிழக்கு நோக்கிய அகோர முகம் மனத்தெளிவு, ஞானத்தை அருளும். தெற்கு பார்த்த வாமதேவம் எதிரி பயம், வறுமையிலிருந்து காப்பாற்றும். ஐந்து முகங்களையும் ஒரே சேர வழிபட்டால் மன நிம்மதியும், செல்வவளமும் பெருகும்.
காமேஸ்வரி: அம்பிகையின் திருநாமம் காமேஸ்வரி. வலக்கரத்தில் கொஞ்சும் கிளியும், அங்குசமும், இடக்கரத்தில் பாசமும், கரும்பும் தாங்கி நிற்கிறாள். அம்பாள் அருகில் பூர்ண மகாமேரு சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
வித்யாமகாகணபதி: கல்விச்செல்வம் தரும் வித்யாமகா கணபதி சந்நிதி விசேஷமானது. ஏட்டுச்சுவடி ஏந்தியிருக்கும் இவரை மாணவர்கள் வழிபட்டு வர கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சதுர்த்தி நாட்களில் இவரை வழிபடுவது சிறப்பு.
திருவிழா: மகாசிவாராத்திரி, சித்ரா பவுர்ணமி, ஆடிப்பூரம், நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம்.
இருப்பிடம்: மேற்குமுகப்பேர் ஜெ.ஜெ,நகர் மூன்றாவது பிளாக்கில் உள்ளது. கோயம்பேட்டில் இருந்து 5 கி.மீ., ஆட்டோவில் செல்லலாம். பி70 பஸ்சில் (வேளச்சேரி-ஆவடி), 'வெயின்' ஸ்டாப்பில் இறங்கி நடந்து சென்று விடலாம்.
திறக்கும்நேரம்: காலை 6- 10மணி, மாலை 5.30- 8.30மணி
போன்: 94449 29154, 044-2624 6696.