sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

பெண்களுக்கு இரண்டே நாள் காட்சி தரும் பெருமாள்

/

பெண்களுக்கு இரண்டே நாள் காட்சி தரும் பெருமாள்

பெண்களுக்கு இரண்டே நாள் காட்சி தரும் பெருமாள்

பெண்களுக்கு இரண்டே நாள் காட்சி தரும் பெருமாள்


ADDED : ஜன 28, 2011 10:42 AM

Google News

ADDED : ஜன 28, 2011 10:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருமாள் என்றால் அவரது திருவடி தரிசனத்தைக் காண்போம். ஆனால், அவரது மார்பு தரிசனத்தை அங்கவஸ்திரம் ஏதும் இல்லாமல் காண வேண்டுமானால், கேரளா, பத்தனம்திட்டை மாவட்டம் திருவல்லா திருவாழ்மார்பன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். இதைத் தரிசித்து வந்தால் செல்வச்செழிப்பு ஏற்படும். ஆனால், மூலஸ்தானத்துக்குள் இரண்டே நாட்கள் மட்டும் தான் பெண்களுக்கு அனுமதி உண்டு. 108 திவ்யதேசங்களில் ஒன்று.

தல வரலாறு: கேரளாவிலுள்ள சங்கரமங்கலம் கிராமத்தில் சங்கரமங்கலத்தம்மையார் என்ற பதிவிரதை வாழ்ந்தார். இவர் ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து இந்த கோயிலுக்கு வருவார். மறுநாள் துவாதசியன்று துறவிகளுக்கு அன்னதானம் செய்வார். இவர் வரும் வழியிலுள்ள காட்டில் வசித்த தோலாகாசுரன் என்பவன், இந்த அம்மையாரை கோயிலுக்கு செல்ல விடாமல், மறைவாக இருந்து, அவரே அறியாமல் துன்பம் விளைவித்தான். இதை பெருமாளிடம் அம்மையார் முறையிட்டார். ஒருமுறை அவர் காட்டு வழியே வரும்போது, பிரம்மச்சாரி இளைஞன் ஒருவன், ஏதோ ஒரு அசுர சக்தியுடன் போர் புரிவதைக் கண்டார். சற்று நேரத்தில் சப்தம் அடங்கி விட்டது. பிரம்மச்சாரியைக் காணவில்லை. அம்மையார் கோயிலுக்கு வந்தார். அங்கே, பெருமாள் காட்டில் பார்த்த பிரம்மச்சாரி இளைஞனைப் போன்ற தோற்றத்தில் இருந்தார். தன்னைப் பாதுகாக்க, பெருமாளே நேரில் வந்து அசுரனுடன் போரிட்டதை அம்மையார் புரிந்து கொண்டார். பிரம்மச்சாரி இளைஞர்கள் அங்கவஸ்திரம் அணிவதில்லை. பெருமாளும் இத்தலத்தில், அங்கவஸ்திரம் இல்லாமல் மார்பு தெரிய காட்சியளிக்கிறார். அவரது மார்பில் லட்சுமி (திரு) நிரந்தரமாக குடியிருப்பதால், இவருக்கு 'திருவாழ்மார்பன்' என்ற பெயர் ஏற்பட்டது. மற்ற தலங்களில் பெருமாளின் திருவடி தரிசனம் முக்கியம். இங்கோ, மார்பு தரிசனம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

உப்பு மாங்காய்: சங்கரமங்கலத்தம்மையார் பிரம்மச்சாரிகளுக்கு தானம் செய்த போது, பெருமாளும் பிரம்மச்சாரி வடிவில் வரிசையில் நின்றார். தனக்களித்த உணவை ஏற்ற அவர், அப்பெண் விரதம் முடித்து தான் சாப்பிடுவதற்காக வைத்திருந்த உப்பு மாங்காயை கேட்டார். அவள் அதை பாக்கு மரத்தின் இலையில் வைத்து பெருமாளுக்கு அளித்தார். இதனடிப்படையில், தினமும் கமுகு இலையில் சாதமும் உப்புமாங்காயும் சுவாமிக்கு நைவேத்யம் செய்யப்படுகிறது. தாயார் செல்வத்திருக்கொழுந்து நாச்சியார் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

சிறப்பம்சம்: பெருமாள் இங்கு பிரம்மச்சரிய விரதம் அனுஷ்டிக்கிறார். எனவே ஐயப்பன் கோயிலைப் போல, இங்கும் பெண்களுக்கு அனுமதி யில்லை. மார்கழி திருவாதிரையன்றும், சித்திரை விஷு அன்றும் இவரது மார்பு தரிசனம் விசேஷம் என்பதால், இந்த நாட்களில் மட்டுமே மூலஸ்தானத்துக்குள் பெண்களை அனுமதிப்பார்கள். மற்றநாட்களில் வெளியில் நின்று சுவாமியைப் பார்க்கலாம். இத்தலத்தில் சந்தனத்துடன் விபூதியும் தரப்படுவது விசேஷம். மார்கழி திருவாதிரையன்று சிவன் இவரது கோலத்தைக் காண வந்தாராம். அதனடிப்படையில், விபூதி கொடுப்பது வழக்கமாயிற்று.

கருடாழ்வார்:
பொதுவாக, கருடாழ்வார் பெருமாளுக்கு எதிரில் அருள்பாலிப்பார். ஆனால், இங்கு 50 அடி உயரத்திலுள்ள கல் தூணின் மீது பறக்கும் நிலையில் அருள்பாலிக்கிறார். கருடனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டுள்ளது. பெருமாளை வணங்குவோர் தங்களது வேண்டுகோளை அவரிடம் சொன்னவுடனேயே, கருடன் அவரை ஏற்றிச்செல்ல தயார் நிலையில் இருப்பதாக ஐதீகம்.

நாட்டிய நேர்ச்சை: குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கேரளாவின் பிரசித்தி பெற்ற கதகளி நிகழ்ச்சியை கோயிலில், நேர்ச்சையாக நடத்துகிறார்கள். இதற்காக 'கலா÷க்ஷத்ரா' என்ற குழு கோயிலில் உள்ளது.

திருவிழா: மாசி பிரம்மோற்ஸவம். உத்திரட்டாதியில் கொடியேறி பூசத்தில் ஆறாட்டு.

திறக்கும் நேரம்: காலை 4- 11.30 மணி, மாலை 5- 8 மணி.

இருப்பிடம்: பத்தனம்திட்டையில் இருந்து 27 கி.மீ., தூரத்தில் திருவல்லா. ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் கோயில்.
போன்: 0469- 270 0191.






      Dinamalar
      Follow us