/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
பிரச்னை தீருணுமா! - பிறவி மருந்தீஸ்வரரை தரிசியுங்க!
/
பிரச்னை தீருணுமா! - பிறவி மருந்தீஸ்வரரை தரிசியுங்க!
பிரச்னை தீருணுமா! - பிறவி மருந்தீஸ்வரரை தரிசியுங்க!
பிரச்னை தீருணுமா! - பிறவி மருந்தீஸ்வரரை தரிசியுங்க!
ADDED : நவ 03, 2017 09:44 AM

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸ்வரராக சிவன் வீற்றிருக்கிறார். இவரை வழிபட நீண்டகால பிரச்னை தீரும்.
தல வரலாறு: அரக்கர் குலப்பெண்ணான ஜல்லிகை, சிவபக்தி கொண்டிருந்தாள். கருணை மனம் கொண்ட அவளுக்கு விருபாட்சன் என்பவன் கணவனாக அமைந்தான். அவன் மனிதர்களை உண்டு வாழ்பவன். ஜல்லிகையோ மரக்கறி உண்பவள். இருந்தாலும் கணவனின் குணத்தை மாற்ற முடியவில்லை. ஒருமுறை, அந்தணச்சிறுவன் ஒருவன், மறைந்த தன் தந்தைக்கு சிராத்தம் செய்ய சென்று கொண்டிருந்தான்.
விருபாட்சன், சிறுவனை உணவாக விழுங்க முயன்றான். 'அந்தணர்களை விழுங்கினால் அந்த உணவு விஷமாகும்' என ஜல்லிகை தடுத்தாள். ஆனாலும் அரக்கன், சிறுவனை விழுங்கிட விஷம் தாக்கி இறந்தான்.
திருத்துறைப்பூண்டி என்னும் இத்தலம் அந்த காலத்தில் வில்வ வனமாக இருந்தது. அங்கிருந்த சிவனை வணங்கிய ஜல்லிகை, “இறைவா! என் கணவர் நல்லவர் அல்ல, இருப்பினும் அவர் இல்லாமல் நான் வாழ முடியாது. பிறவி பிணியில் இருந்து விடுதலை கொடு,” என வேண்டினாள். பலநாள் பட்டினியாக கிடந்த அவளது உயிர் போகும் நிலையில், சிவபார்வதி காட்சியளித்தனர்.
ஜல்லிகையிடம் பார்வதி, “மகளே! நீ இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வா,” என்றாள். அவ்வாறே நீராடி வர இறையருளால் விருபாட்சன் உயிருடன் வந்தான். அதன் பின் அரக்கனின் வயிற்றில் கிடந்த சிறுவனும் உயிர் பெற்றான். அவனுக்கும் இறை தரிசனம் கிடைத்தது.
இவ்வாறு அருள்புரிந்த இறைவனே பிறவி மருந்தீஸ்வரர் என்னும் பெயரிலும், அம்பிகை பிருகந்நாயகி என்னும் பெயரிலும் இங்கு அருள்பாலிக்கின்றனர். இவர்களை வழிபட்டால் கொடிய பிரச்னையும் தீரும்.
சிறப்பம்சம்: இக்கோயிலின் சிறப்பு அம்சமாக கஜசம்ஹார மூர்த்தி வடிவில் இருந்து சிவன் அருள்பாலிக்கிறார். அமாவாசை, பவுர்ணமியன்று வழிபட, மனம் வலிமை பெறும்.
தாருகா வனத்து முனிவர்கள், தாங்கள் செய்யும் யாக பலனை ஏற்பதால் தான், சிவனுக்கு சக்தி கிடைப்பதாக எண்ணி ஆணவம் கொண்டனர். அவர்களுக்கு புத்தி புகட்ட சிவன், பிட்சாடனராக எழுந்தருளினார். முனிவர்கள் மந்திர சக்தியை உபயோகித்து யானையை ஏவினர். பிட்சாடனர் அதைக் கொன்று, தோலை உரித்து ஆடையாக அணிந்தார். இதனால் 'கஜசம்ஹார மூர்த்தி' என பெயர் பெற்றார். இதைக் கண்ட முனிவர்களின் ஆணவம் அழிந்தது.
அகத்தியருக்கு காட்சியளித்த மணக்கோல சிவன் வேதாரண்யேஸ்வரர் என்னும் பெயரில் வீற்றிருக்கிறார்.
எப்படி செல்வது: திருவாரூரில் இருந்து 30 கி.மீ., தஞ்சாவூரில் இருந்து 65 கி.மீ.,
விசேஷ நாட்கள்: சித்திரை திருவிழா, நவராத்திரி, மார்கழி திருவாதிரை விழா
நேரம்: காலை 6:00 -11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 99442 23644, 98652 79137
அருகிலுள்ள தலம்: 31 கி.மீ.,ல் திருவாரூர் தியாகராஜர் கோயில்