/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
புரட்டாசி சனி வந்தாச்சு! சந்தோஷம் பிறந்தாச்சு!
/
புரட்டாசி சனி வந்தாச்சு! சந்தோஷம் பிறந்தாச்சு!
ADDED : செப் 16, 2016 09:30 AM

தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள கூடலழகர் கோவிலை 'ராமாயணக் கோவில்' என செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர். புரட்டாசி சனிக்கிழமைகளில் இங்கு கருடசேவை நடக்கிறது. இதை தரிசிப்பவர்களின் வாழ்வில் என்றும் சந்தோஷம் நிலைத்திருக்கும்.
தல வரலாறு: மதுரையிலுள்ள கூடலழகர் பெரியாழ்வாருக்கு கருட வாகனத்தில் காட்சி தந்த சிறப்பு மிக்கவர். பெரியாழ்வார் அவரது அழகில் மயங்கி, எங்கே பெருமாளுக்கு திருஷ்டி பட்டு விடுமோ என்று எண்ணி, அவர் பல்லாண்டு வாழ வேண்டும் என்று
“பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள்
மணி வண்ணா! நின் சேவடி செவ்வி திருக்காப்பு”
என்று பாடவே ஆரம்பித்து விட்டார்.
இந்தப் பாட்டு தான் உலகிலுள்ள எல்லா பெருமாள் கோவில்கள் திறக்கும் போதும் பாடப்படுகிறது. இப்படிப்பட்ட பெருமைக்குரிய கூடலழகருக்கு, தான் ஆட்சி செய்யும் கூடலூர் பகுதியில் கோவில் அமைக்க சிற்றரசர் ஒருவர் ஆசைப்பட்டார். ஆனால் எங்கு கோவில் அமைப்பது என்று புரியவில்லை. ஒருநாள் இரவில் அவரது கனவில் தோன்றிய பெருமாள், ஒரு குறிப்பிட்ட இடத்தை காட்டி, அங்கே கோவில் அமைக்கக் கூறினார். மன்னரும் திருப்பணியை மேற்கொண்டார். அந்த பெருமாளுக்கும் 'கூடலழகர்' என்ற பெயரையே சூட்டினார். கோவில் அமைந்த ஊருக்கு 'கூடலூர்' என்று பெயர் வைத்தார். பாண்டிய நாட்டையும், சேர நாட்டையும் இணைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் மத்தியில் இத்தலம் உள்ளதால் 'கூடலூர்' என பெயர் பெற்றதாகவும் சொல்வர்.
அஷ்டாங்க விமானம்: பெருமாளுக்குரிய விமானங்களில் 'ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டெழுத்து மந்திரத்தின் அம்சமாக அமைக்கப்படும் அஷ்டாங்க விமான தரிசனம் சிறப்பானது. மதுரை கூடலழகர், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோவில்களில் அஷ்டாங்க விமானத்தின் கீழ் பெருமாள் வீற்றிருக்கிறார். அதே அமைப்பில் இக்கோவிலிலும் விமானம் அமைக்கப்பட்டது.
ராமாயணக் காட்சி: அஷ்டாங்க விமானத்திலும், சுவாமி சன்னிதி முன் மண்டபத்திலும் தசரதர் ஆட்சி, ராம சகோதரர்கள் பிறப்பு, அவர்களது திருமணம், வனவாசம், சீதை கடத்தப்படுதல், ராவண வதம், பட்டாபிஷேகம் ஆகிய ராமாயண காட்சிகள் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. சிற்ப சிறப்பால் இந்த விமானத்தை, 'ராமாயண விமானம்' என்றும், கோவிலை 'ராமாயண கோவில்' என்றும் அழைக்கிறார்கள். மதுரை கூடலழகர் கோவில் போலவே, இங்கும் சுவாமி கருவறையை ஒட்டியே உள்பிரகாரம் உள்ளது. பக்தர்கள் இதை வலம் வந்து வழிபடலாம். பழமையான கோவில்களில் மட்டுமே காணக் கூடிய அமைப்பு இது.
பிரார்த்தனை: மூலஸ்தானத்தில் பெருமாள், தாயார்களுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு வெள்ளிக்கிழமைகளில் வாசனை திரவியம் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்த கலவையால் காப்பிடுகின்றனர். மூலவர் கூடலழகர் என்றும், உற்சவர் சுந்தரராஜர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். பிரிந்த தம்பதியர் இணைந்து வாழ பெருமாளுக்கு துளசி மாலை, வஸ்திரம் அணிவித்து வழிபடுகின்றனர். தலைமைப் பொறுப்பு, உயர் பதவி கிடைக்க அங்க வஸ்திரம் சாத்துகின்றனர். முன்மண்டபத்தில் மகாலட்சுமி தாயாருக்கு சன்னிதி உள்ளது. நவநீத கிருஷ்ணர், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் மற்றும் ராமானுஜர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. முன் மண்டப மேற்சுவரில் ராசி சக்கரத்தின் மத்தியில் அமைந்த மகாலட்சுமி சிற்பம் இருக்கிறது.
கருடசேவை: சித்ரா பவுர்ணமியன்று பெருமாள் வீதியுலா வருவார். புரட்டாசி சனிக்கிழமைகளில் கருடசேவை சிறப்பாக நடக்கும். இங்குள்ள தமிழ்ப்பாவை சிலை, முன்மண்டபத்திலுள்ள கல் கொடுங்கை (கூரைகளில் வேயும் கல்லால் ஆன கட்டைகள்) பாண்டிய, சேர மன்னர்களின் மீன் மற்றும் வில் கொடி சின்னங்கள் ஆகியன சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகும். கோவில் சுற்றுச்சுவரில் தசாவதார மூர்த்திகள் இடம் பெற்றுள்ளனர்.
இருப்பிடம்: தேனி - குமுளி சாலையில் 45 கி.மீ.,
நேரம்: காலை 10:30 - மதியம் 12:00, மாலை 5:30 - இரவு 7:30 மணி.
அலைபேசி: 95660 31109

