ADDED : மே 13, 2011 12:21 PM

ராகு பகவான் தன் மனைவியர் நாகவல்லி, நாக கன்னியுடன் கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயிலில் அருளுகிறார். ராகு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் இங்கு சென்று வரலாம்.
தல வரலாறு: சுசீல முனிவரின் மகன் சுகர்மனை, நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு தீண்டியது. அவர் அந்தப்பாம்பை, மானிடனாக பிறக்கும்படி சபித்துவிட்டார். காஷ்யப முனிவரின் ஆலோசனைப்படி இங்கு வந்த தக்ககன், சிவனை வணங்கி சாபவிமோசனம் பெற்றான். இவர் 'நாகநாதர்' என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார்.
நாக அரசனுக்கு சிவன் அருளிய தலமென்பதால், ராகுபகவான் தன் மனைவியரு டன் இங்கு சிவனை வழிபட வந்தார்.
இத்தலத்தின் மகிமையறிந்து தினமும் சிவதரிசனம் பெற விரும்பி இங்கேயே தங்கி விட்டார். இதையடுத்து ராகுவுக்கு இங்கு மனைவியர் நாகவல்லி, நாககன்னியுடன் சன்னதி எழுப்பப்பட்டது.
அனுக்கிரக ராகு: இத்தலத்தில் ராகுபகவான், அனுக்கிரஹம் புரியும் மங்கள ராகுவாக அருளுகிறார். நாக தோஷ நிவர்த்திக்கு இங்கு வேண்டிக்கொள்ளலாம். மனித தலை, நாக உடலுடன் நவக்கிரக மண்டபத்தில் காட்சி தரும் ராகு, இங்கு மனித வடிவில் காட்சி தருகிறார். இந்த அமைப்பு அபூர்வமானது. யோககாரகனான ராகுவை வணங்கினால் எதிர்பாராத யோகம், பதவி உயர்வு, தொழில் வளர்ச்சி, வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், வெளிநாட்டு பயண யோகம் ஆகிய பலன்கள் கிடைக்கும். நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இவருக்கு அபிஷேகம் செய்யும் பாலை கூர்ந்து கவனித்தால் நீல நிறமாகத் தெரியும். தினமும் குறிப்பிட்ட நேரங்களில் இவருக்கு பாலபிஷேகம் நடக்கும். ராகு பெயர்ச்சியன்று இவர் வீதியுலா செல்வார். அம்பாள் கிரிகுஜாம்பிகை சன்னதியில் விநாயகரும், அருகில் யோகராகுவும் இருக்கின்றனர்.
முத்தேவியர் தரிசனம்: ஒரே சன்னதியில் பிருங்கி முனிவருக்கு காட்சி தந்த கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவியர் இங்கு உள்ளனர். கிரிகுஜாம்பிகை சன்னதியில் பாலசாஸ்தா, சங்கநிதி, பதுமநிதியும் இருப்பதால் இவளை வணங்கினால் செல்வவளம் பெருகும். .
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில் 5 கி.மீ., தூரம்.
திறக்கும் நேரம்: காலை 6- 12.45 மணி, மாலை 4- 8.30 மணி.
போன்: 0435- 246 3354.

