/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
சர்ப்பதோஷம் நீக்கும் சாலைக்கிணறு ராமானுஜர்
/
சர்ப்பதோஷம் நீக்கும் சாலைக்கிணறு ராமானுஜர்
ADDED : ஏப் 01, 2013 01:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சர்ப்பதோஷத்தால் திருமணம், செயல்பாடுகளில் தடை ஏற்படுவதாக சொல்வார்கள். இவர்களுக்கு, காஞ்சிபுரம் அருகிலுள்ள சாலைக்கிணற்றில் ராமானுஜர் தடைகளை நீக்கி அருளுவார். இவரை வணங்கினால் தோல் நோய் நீங்கும்.
தல வரலாறு:
'ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டெழுத்து மந்திரத்தை உலகிற்கே உபதேசித்த அருளாளர் ராமானுஜர். இவர் யாதவப்பிரகாசர் என்ற குருவிடம் வேதம் படித்து வந்தார். குருவை மிஞ்சிய சிஷ்யராக, உபநிஷத்திற்கு புதிய விளக்கங்களை அளித்தார். இதைக் கேட்டவர்கள் அவரைப் பாராட்டினர். இதனைப் பொறுக்காத குரு, அவரைக் கொல்லத் துணிந்தார். சதித்திட்டம் தீட்டி ராமானுஜரை காசியாத்திரைக்கு அனுமதித்தார். கங்கையாற்றில் தள்ளிக் கொல்ல ஆள் அனுப்பினார். ஆனால், எம்பார் என்பவர் மூலம் ராமானுஜருக்கு இந்த உண்மை தெரியவந்தது. யாதவப்பிரகாசர் அனுப்பிய ஆட்களிடம் இருந்து தப்பிய ராமானுஜர் காசி செல்லாமல் பாதியில் திரும்பினார். வரும்வழியில், காட்டுப்பாதையில் வழிதெரியாமல் தடுமாறி நின்றபோது, காஞ்சி வரதராஜரே தாயாருடன் வேடர் கோலத்தில் எழுந்தருளினார். நடந்து வந்த களைப்பால் ராமானுஜர் வேடனிடம் தண்ணீர் கேட்க, அங்கிருந்த சாலைக்கிணற்று நீரைக் கொடுத்து தாகம் தணித்ததோடு, வழியும் காட்டி அருளினார். இதன் அடிப்படையில் சாலைக் கிணற்றில் ராமானுஜர் கோயில் கட்டப்பட்டுள்ளது.
திருமஞ்சன தீர்த்தம்:
தனக்கு வழிகாட்டிய வேடன், காஞ்சியிலிருக்கும் வரதராஜரே என்பதை உணர்ந்த ராமானுஜர் மகிழ்ந்தார். பெருமாளுக்கு தொண்டு செய்ய அனுமதிக்கும்படி, சுவாமிக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்த திருக்கச்சிநம்பிகளை வேண்டினார். அதன்படி சாலைக்கிணற்றில் இருந்து அபிஷேக தண்ணீர் எடுத்து வரும் பணியில் ஈடுபட்டார். காஞ்சி வரதராஜருக்கு இன்றும் திருமஞ்சனத்திற்கு (அபிஷேகம்) இந்த கிணற்று நீரே பயன்படுத்தப்படுகிறது.
அனுஷ்டானக்குள உற்சவம்:
ராமானுஜருக்கு பெருமாள் காட்சியளித்ததை நினைவூட்டும் விதத்தில், மார்கழி திருவிழாவின்போது அனுஷ்டானக்குள உற்சவம் நடத்தப்படும். வைகுண்ட ஏகாதசியிலிருந்து 12ம் நாள் இந்த விழா நடத்தப்படும். வரதராஜப்பெருமாள், தாயார்களுடன் வேடர் கோலத்திலும், ராமானுஜர் மலர் அலங்காரத்திலும் காஞ்சியிலிருந்து சாலைக் கிணற்றுக்கு எழுந்தருளி திருமஞ்சனம் நடைபெறும்.
சர்ப்பதோஷ நிவர்த்தி:
காலசர்ப்பதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ராமானுஜரின் அவதார நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தன்று இங்கு சிறப்புபூஜை நடத்துகிறார்கள். புத்திரபாக்கியம் பெற தீர்த்தத்தில் நீராடி அங்கப்பிரதட்சணம் செய்வர். மனக்குறை தீரவும், உடல் குறைபாடு நீங்கவும் அர்ச்சனை செய்கிறார்கள். ராமானுஜர் சந்நிதியிலிருந்து, காஞ்சிபுரம் வரதராஜர் ராஜகோபுரத்தை தரிசிக்கலாம்.
இருப்பிடம்:
காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்ட்- செவிலிமேடு சாலையில் உள்ள கூட்டுரோட்டிலிருந்து 1 கி.மீ.,
திறக்கும் நேரம்:
தினமும் காலை 9- 10, சனிக்கிழமை காலை6- மதியம்12, திருவாதிரை நட்சத்திர நாட்களில் காலை6- மாலை5.
போன்:
94882 19520.
சி. வெங்கடேஸ்வரன்