ADDED : நவ 27, 2019 12:02 PM

டிச.2 - கார்த்திகை 3வது சோமவாரம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் திம்மராஜம்பேட்டை சிவனைத் தரிசித்தால், ராமேஸ்வரத்தை தரிசித்த பலன் கிடைக்கும்.
12ம் நுாற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த போஜராஜன் ரங்கபதி ராஜய்யன் கட்டிய கற்கோயில் இது. சிவபக்தரான மன்னரின் கனவில் தோன்றிய சிவன், புண்ணியத் தலமான ராமேஸ்வரம் போல இங்கு கோயில் கட்ட உத்தரவிட்டார். இங்குள்ள மூலவர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமியைப் போல இருக்கிறார். கருவறையின் பின்புறம் மணக்கோலத்தில் பார்வதியுடன் சுவாமி 'சோமாஸ்கந்தர்' இருக்கிறார். திருமணத்தடை உள்ளவர்கள் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் இனிய மணவாழ்வு அமையும். பிதுர் தோஷ நிவர்த்தி தலமான இங்கு புரட்டாசி மகாளய அமாவாசையன்று பிதுர் ஹோமம், தர்ப்பணம் நடக்கிறது.
மாசி மாத பவுர்ணமியன்று சூரியஒளி மூலவர் மீது விழுகிறது. இதை தரிசிப்போருக்கு ஆரோக்கியம் மேம்படும். தந்தை, மகன் உறவு பலப்படும்.
இச்சா, கிரியா, ஞானம் என்னும் மூன்று சக்திகளின் அம்சமாக பர்வதவர்த்தினி இருக்கிறாள். பவுர்ணமியன்று அம்மனைத் தரிசித்தால் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சியை தரிசித்த பலன் கிடைக்கும். மாங்கல்ய தோஷம் நீங்கவும், தாலிபாக்கியம் நிலைக்கவும் வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றுகின்றனர்.
அர்த்த, மகா மண்டபத்துடன் கூடிய தனி சன்னதியில் முருகப்பெருமான் உள்ளார். கந்தசஷ்டியன்று சூரசம்ஹாரம், தெய்வானை திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கும். குருபகவான் ராமலிங்கேஸ்வரரை வழிபடும் விதமாக, கைகூப்பி தியான நிலையில் உள்ளார். குருவருளைப் பெற வியாழக்கிழமையில் கொண்டைக்கடலை மாலை சார்த்தி அர்ச்சனை செய்கின்றனர்.
ராஜகோபுரத்தின் இடது புறம் விகடச்சக்கர விநாயகர், வலது புறத்தில் ஆறுமுகர் சன்னதிகள் உள்ளன. பர்வதவர்த்தினியின் இடப்புறத்தில் ஐயப்பன், முருகன் சன்னதிகள் உள்ளன. இப்பகுதியைச் சுற்றியுள்ள 18 பேட்டைக்கும் இது தலைநகரம் என்பதால் திம்மராஜம் பேட்டை என அழைக்கப்படுகிறது.
எப்படி செல்வது?
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் 15 கி.மீ.,
விசேஷ நாட்கள்
சித்திரை உத்திரம் திருக்கல்யாணம், கார்த்திகை 3வது சோமவாரம், 108 சங்காபிஷேகம், ஆருத்ரா தரிசனம், மாசி மகம்
நேரம்: காலை 7:00 - 10:00 மணி ; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 99944 33598
அருகிலுள்ள தலம்: காஞ்சி காமாட்சியம்மன் கோயில் (15 கி.மீ.,)