ADDED : மார் 17, 2013 05:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீரங்கப்பட்டினம் என்னும் திவ்ய ÷க்ஷத்திரத்தில் ரங்கநாதர் பள்ளிகொண்ட பரந்தாமனாக சேவை சாதிக்கிறார்.
தல வரலாறு:
பூலோகத்திலுள்ள புண்ணிய நதிகள் தங்களிடம் சேர்ந்த பாவங்களை, ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடி போக்கிக் கொள்கின்றன. பாவம் நிறைய சேர்ந்ததால், காவிரி கோர வடிவம் பெற்றாள். தனது பாவம் நீங்க இங்கு வந்து பெருமாளை பூஜித்தாள். சுவாமி அவளுக்கு காட்சியளித்து பாவ விமோசனம் கொடுத்தார். மேலும், தனது திருப்பாத தரிசனத்தை நிரந்தரமாக அளிக்கும் விதத்தில், தன் காலடியில் இருக்க அனுமதித்தார். எனவே, இங்கு கையில் மலர் வைத்தபடி காவிரி அமர்ந்திருக்கிறாள்.
சிறப்பம்சம்:
பாவம் போக்கிய ரங்கநாதருக்கு நன்றி செலுத்தும் விதத்தில், மாலையிட்ட மங்கையாக காவிரி நதி இங்கு இரண்டாகப் பிரிந்து ஓடுகிறது. எனவே இக்கோயில் தீவின் மத்தியில் அமைந்திருக்கிறது. ரங்கநாதர் பள்ளிகொண்ட தலம் என்பதால் ஊர், 'ஸ்ரீரங்கப்பட்டணம்' என அழைக்கப்படுகிறது.
இங்கு பெருமாள் சாளக்கிராமத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக, யோக சயனத்தில் அருளுகிறார். மூலவரின் மேல் பிரம்மானந்த விமானம் உள்ளது. காவிரி பாயும் வழியில், அதன் மத்தியில் தீவு போல அமைந்த மூன்று தலங்களில் பெருமாள், ரங்கநாதராக காட்சி தருகிறார். அதில் இது முதல் தலம் என்பதால் இதனை, 'ஆதிரங்கம்' என்கிறார்கள். இங்கிருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ள சிவசமுத்திரம் கோயில் 'மத்திய ரங்கம்' (சாம்ராஜா நகர் மாவட்டம்) என்றும், திருச்சி ஸ்ரீரங்கம் 'அந்திரங்கம்' என்றும் அழைக்கப்படுகிறது.
பிரகாரத்தில் லட்சுமி நரசிம்மர், சுதர்சனர், கஜேந்திர வரதர், வெங்கடாஜலபதி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் சந்நிதிகள் உள்ளன. சந்நிதி முகப்பில் 'சதுர்விம்சதி கம்பம்' என்னும் இரண்டு தூண்களில் பெருமாளின் பிரதானமான 24 கோலங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
திருவிழா:
வைகாசி பவுர்ணமியில் கருட சேவை, ஆனி சித்திரை நட்சத்திரத்தில் சுதர்சனர் ஜென்ம நட்சத்திர பூஜை, ஆடியில் ஊஞ்சல் உற்சவம், ஆடிப்பூரம், நவராத்திரி, தை அமாவாசையன்று கருட ஜெயந்தி, பொங்கல், ரதசப்தமி.
இருப்பிடம் :
பெங்களூரு- மைசூரு ரோட்டில் 125 கி.மீ., (மைசூருவில் இருந்து 15 கி.மீ.,)
திறக்கும் நேரம் :
காலை 7.30 - மதியம் 1.30 , மாலை 4 - இரவு 8 .
போன் :
094488 77648.