/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
நேர்முகத்தேர்வு பயம் போக்கும் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர்
/
நேர்முகத்தேர்வு பயம் போக்கும் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர்
நேர்முகத்தேர்வு பயம் போக்கும் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர்
நேர்முகத்தேர்வு பயம் போக்கும் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர்
ADDED : ஜூன் 20, 2016 10:45 AM

நேர்முகத்தேர்வு என்றாலே அதிகாரிகளிடம் பேச பயம், திக்குவாயால் மனக்கஷ்டம் என்ற நிலை இருந்தால், விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்திலுள்ள லிங்க வடிவ அர்த்தநாரீஸ்வரருக்கு தேனபிஷேகம் செய்து வழிபடலாம். இந்தக் கோவிலில் ஆனித்திருவிழா விசேஷம்.
தல வரலாறு : சிவபார்வதி திருமணம் கைலாயத்தில் நடந்த போது, தென்திசை உயர்ந்து வட திசை தாழ்ந்தது. இதை சமன் செய்ய அகத்தியரை தென்திசை செல்ல சிவன் உத்தரவிட்டார். அகத்தியர் பல தலங்களில் தங்கி சிவபூஜை செய்தபடியே சென்றார். ஓரிடத்தில் சிவன் அகத்தியருக்கு திருமணக்காட்சி தந்தார். இந்தக்காட்சி எந்நாளும் உலக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என அகத்தியர் வேண்ட, “எனக்கு (லிங்கத்திற்கு) தேனபிஷேகம் செய்யும் காலத்தில், இங்குள்ள லிங்கத்தில் என்னுடன் பார்வதியும் இணைந்து தோன்றுவாள்,'' எனக் கூறி மறைந்தார். அதன் பின் பல ரிஷிகள் இங்கு வந்து தங்கி தேனபிஷேகம் செய்து ஈசனை வழிபட்டதால் இவ்வூர் ரிஷிவந்தியம்' என வழங்கப்பட்டது.
தல சிறப்பு: தேவர் தலைவன் இந்திரன் தினமும் இத்தல இறைவனுக்கு 108 குடம் பால் அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். ஆனால், இங்குள்ள அம்பாளை வழிபடாமல் சென்று விடுவான். தன்னை வழிபடாத இந்திரனுக்கு பாடம் புகட்ட நினைத்த அம்பிகை ஒருமுறை அபிஷேக குடங்களை மறைத்து வைத்து விட்டாள். குடங்களை காணவில்லையே என வருந்திய இந்திரன், அங்கிருந்த பலிபீடத்தில் தலையை மோதி உயிர் விட முயற்சித்தான். அப்போது ஈசன் தோன்றி, அம்பிகைக்கும் சேர்த்து அபிஷேகம் செய்யும்படி பணித்தார். அத்துடன் தினமும் நடக்கும் தேனபிஷேக பூஜையில், பார்வதியுடன் இணைந்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுப்பதாக கூறி மறைந்தார். தேன் தானும் கெடாது. தன்னுடன் சேர்க்கும் பொருளையும் கெட விடாது. இதன்படி தேனபிஷேக பூஜையில் சுயம்புலிங்கத்தில் அர்த்தநாரி ஈஸ்வரனாக (ஆண்பாதி பெண்பாதி) காட்சி தருகிறார். லிங்கத்திற்கு தேனபிஷேகம் செய்யும் போது, அதில் இடை நெளிந்து, கையில் கிளியுடன் இருக்கும் அம்மன் காட்சி தரும் அதிசயத்தைக் காண முடியும். பேச்சில் குறைபாடு உள்ளவர்கள், தேன் வாங்கி சிவனுக்கு அபிஷேகம் செய்து அந்த தேனை சாப்பிட்டால் பேச்சு குறைபாடு நீங்கும் என்பது நம்பிக்கை. மற்ற அபிஷேகம் நடக்கும் போது லிங்க வடிவம் மட்டுமே தெரியும். இங்குள்ள அம்பாளுக்கு முத்தாம்பிகை என்று பெயர். அர்த்தநாரீஸ்வரரின் சுதை சிற்பமும் உள்ளது.
சிறப்பம்சம்: இந்த கோவில் துவாபர யுகத்தில் தோன்றியதென்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. ரிஷிகளால் பூஜிக்கப்பட்ட அர்த்தநாரீஸ்வர லிங்கம் மண்ணில் புதைந்து கிடந்தது. விஜயநகர மன்னர்கள் காலத்தில் விவசாயம் செய்வதற்காக வீர வன்னியர் பரம்பரையினர் காடு வெட்டும் போது இது மீண்டும் கிடைத்தது. இத்தலத்திற்கு வந்து வழிபட்ட ராமருக்கு ஞானத்தையும், அகத்தியருக்கு திருமணக்கோலத்தையும் அர்த்தநாரீஸ்வரர் அருளியுள்ளார். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் ஈசனை வழிபட்டுள்ளனர்.
குக நமச்சிவாயர்: குரு நமச்சிவாயரின் சீடரான குக நமச்சிவாயர் திருவண்ணாமலையிலிருந்து பல தலங்களை தரிசித்து விட்டு இத்தலம் வழியாக சிதம்பரம் செல்லும்போது பசி அதிகமானது. அவர் இங்குள்ள முத்தாம்பிகை அம்மனிடம் சென்று, 'தாயிருக்க பிள்ளை சோறு' என்ற செய்யுளை பாடினார். உடனே அம்மன் அவர் முன் தோன்றி 'நான் இங்கு ஈசனுடன் அர்த்தபாகம் பெற்றிருக்கிறேன். எனவே இருவரையும் சேர்த்து பாடுவாயாக' என்று கூற குக நமசிவாயரும் அதன்படியே 'மின்னும்படிவந்த சோறு கொண்டு வா' என்ற பாடலைப்பாடினார். இந்த பாடலை கேட்டதும் முத்தாம்பிகையம்மன் பொற்கிண்ணத்தில் சோறு கொண்டு வந்து குக நமச்சிவாயரின் பசியாற்றினாள்.
திருவிழா: ஆனித்திருவிழா ஜூலை 8ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தேர்த்திருவிழா ஜூலை 16 ல் நடக்கிறது.
இருப்பிடம்: விழுப்புரத்தில் இருந்து ரிஷிவந்தியம் 60 கி.மீ.,
நேரம்: காலை 6 .00 - 12.00, மாலை 4.00 - 8.00 மணி.
அலைபேசி: 98653 69493, 90943 68541

