/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
ஆர்வமுடன் செயலாற்று! ஆனந்தம் காத்திருக்கு!
/
ஆர்வமுடன் செயலாற்று! ஆனந்தம் காத்திருக்கு!
ADDED : ஜூன் 12, 2016 03:18 PM

* வாழ்க்கை என்பது அனுபவத்தின் வெளிப்பாடு. மனிதனின் ஒவ்வொரு எண்ணமும், சொல்லும், செயலும் புதுமையான அனுபவத்தை ஏற்படுத்த காத்திருக்கிறது. ஆர்வத்துடன் செயலில் ஈடுபடாமல் வாழ்வில் எந்தவித அனுபவமோ, வளர்ச்சியோ உண்டாகாது.
* மனித முயற்சி அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது நம்பிக்கையே. மனிதனின் நம்பிக்கையைப் பொறுத்தே வாழ்வு அமைகிறது. தன்னம்பிக்கையுடன், தெய்வ நம்பிக்கையும் சேரும் போது வாழ்வில் முன்னேற்றம் காண்பது உறுதி.
* குறிக்கோள் இல்லாத வாழ்வு வாழ்வாகாது. குறிக்கோள் என்பது சுயநலமற்றதாகவும், உயர்ந்ததாகவும், விசாலமானதாகவும், பெருந்தன்மை கொண்டதாகவும், பொதுநலம் மிக்கதாகவும் அமைய வேண்டும்.
* தன்னுடைய கருத்தே சரியானது என்று எண்ணக்கூடாது. வாக்குவாதம், அதிக எழுச்சி, சண்டை, கோபம் ஆகியவற்றை பேச்சில் தவிர்க்க வேண்டும். சொல்ல விரும்புவதை தெளிவாக அதே சமயத்தில் அமைதியாக தெரிவிக்க வேண்டும்.
* வழிபாடு என்பது தொடக்கத்தில் கடவுளுக்கு ஓர் இலையோ, மலரோ, சிறிதளவு தண்ணீரோ, பிடி சோறோ படைப்பதாக இருக்கும். பக்குவம் அடையும் போது தன்னையே முழுமையாக கடவுளுக்கு அர்ப்பணிக்கும் விதத்தில் உயர்ந்து விடும்.
* பக்தியில் ஈடுபட்டால் கடவுளைத் தவிர வேறெந்த விஷயத்திலும் ஈடுபடக் கூடாது என்பதில்லை. அறிவியல், கலை, இலக்கியம், குடும்பம் என வாழ்வின் மற்ற அம்சங்களையும் ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
* கடவுளிடம் முழுமையாகச் சரணடைந்து அவரது கைகளில் நம்மை ஒப்படைப்போம். அப்போது அவர் தன்னுடைய சொந்த சக்தியை நமக்குள் செலுத்தி வாழ்வை மலரச் செய்வார்.
* வாழ்வில் குறுக்கிடும் துன்பத்தை வாழ்த்தக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் மூலமே கடவுளின் அருள் ததும்பும் முகத்தைக் காணும் பேறு பெறுவீர்கள்.
* தியாகம் செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். பெருமைக்காக தியாகம் செய்வது கூடாது. மனிதர்கள் அனைவரும் நலம் பெறவும், கடவுளுக்காகவும் தியாகம் செய்ய முயலுங்கள்.
* நீங்கள் தர்மத்தின் கையில் ஒரு கருவியாக இருங்கள். உயிர்களின் மீது இரக்கம் காட்டுவதும், பிறரது நன்மைக்காக உயிரைத் தியாகம் செய்வதும் தர்மத்தின் வெளிப்பாடே. போர்க்களத்தில் பகைவனைக் கொல்வதும் தர்மத்தில் தான் அடங்கும்.
* கண்களில் கருணையும், பேச்சில் இனிமையும் தெய்வத்தின் சுபாவங்கள். இந்த உயர்பண்புகளை ஏற்றுக் கொள்பவன் மனித நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்கிறான்.
* பிறருடைய குறைகளைப் பற்றி ஒரு போதும் சிந்திக்க வேண்டாம். இதனால் மனம், உடல் இரண்டும் கேடு அடைகிறது. மன அமைதி மிக்கவர்களே தங்களின் குறைகளைத் திருத்திக் கொள்வதில் அக்கறை கொள்வர்.
* கடவுளின் அருளாட்சியில் தீமை என்பதே இல்லை. உலகில் நடக்கும் செயல்கள் அனைத்தும் நல்லதையோ அல்லது நல்லதை ஏற்படுத்தும் முயற்சியாகவோ மட்டுமே இருக்கின்றன.
உற்சாகப்படுத்துகிறார் அரவிந்தர்

