ADDED : ஜூலை 30, 2012 03:07 PM

சமீப காலமாக அதிகம் பேசப்பட்டுவரும் சிவத்தலங்களில் ஒன்று திருவள்ளூர் மாவட்டம் நெய்வேலி கிராமத்திலுள்ள லலிதாம்பிகா சமேத அக்னீஸ்வரர் ஆலயம். கருவூர் சித்தர் மற்றும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரரால் தோற்றுவிக்கப்பட்டு, தினமும் நள்ளிரவில் அவர்களால் வழிபட்டு வருவதாக நம்பப்படும் இறைவன் இவர்.
தல வரலாறு: இந்தப்பகுதியில் உள்ள ஊன்றீஸ்வரர் கோயிலுக்கு வந்த இரண்டு சிவபக்தர்கள் முன் ஒரு சிறுவன் தோன்றினான். அருகில் உள்ள நெய்வேலி காட்டுப்பகுதியில் ஒரு சிவலிங்கம் இருப்பதாகவும், அவரையும் வழிபட்டுச் செல்லுங்கள் என்றும் சொன்னான். உடனடியாக, அவன் காணாமல் போய்விடவே, பக்தர்கள் நெய்வேலி சென்றனர். சிறுவன் கூறிய அடையாளப்படி லிங்கம் இருக்கிறதா என்று ஊர் மக்களிடம் விசாரித்தனர். அப்படி எதுவும் இல்லை என்று மக்கள் பதிலளித்தனர். ஆனாலும், அந்த பக்தர்கள் மனம் தளரவில்லை. முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்த வனாந்திர பகுதிக்குச் சென்று, லிங்கத்தைத் தேடினர். ஒரு முதிர்ந்த கல்லால மரத்தின் கீழ், சிதைவுற்ற கருவறையில் புதைந்து கிடந்தது லிங்கம். அதன் ருத்ரபாகம் மட்டும் வெளியே தெரிந்தது. அந்த லிங்கத்தில் இருந்து ஒளி வீசியது. அந்த சிவலிங்க திருமேனியை அவர்கள் தரிசித்து மகிழ்ந்தனர். கிராம மக்களும் சென்று பார்த்தனர். அதன்பின் கோயில் கட்டும் பணியைத் தொடங்கினர். தற்போது, இங்குள்ள ஓங்கி வளர்ந்து அடர்ந்து பரந்திருக்கும் கல்லால மரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது. அன்னை மாகாளி இக்கோயிலின் காவல் தெய்வமாக இம்மரத்தில் வாழ்வதாக ஐதீகம். இந்த மரத்தின் அடியில் ஒன்பது மாமுனிவர்கள் அமர்ந்து இன்றளவும் தவமியற்றி வருவதாக ஒரு தகவல் உண்டு. இவர்கள் நாகங்களாகவும், கருவண்டுகளாகவும் மரப்பொந்துகளில் வசித்து வருகின்றனர் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். இத்தலம் நாகதோஷ நிவர்த்தி மற்றும் புத்திரபாக்கியம் அருளும் தலமாக விளங்குகிறது.
விழாக்கள்: பிரதோஷ நாட்கள் முக்கியமானவை. அன்று பக்தர்களே சுவாமிக்கு நேரடியாக பாலபிஷேகம் செய்து பூஜிக்கலாம் என்பது மிக விசேஷம். இந்தக் கோயில் திருப்பணிகள் முடிந்து விரைவில் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. புதிய விநாயகர் சந்நிதி கட்டப்பட்டுள்ளது. திருக்குளம் மற்றும் சுவர் திருப்பணிகள் நடந்து வருகின்றன. கிராமத்திலிருந்து கோயிலுக்கு செல்வதற்கு பாதையும் அமைத்தாகி விட்டது. சுவாமி,அம்பாள்,வனதுர்க்கை,மகா மண்டபம் ஆகிய திருப்பணிகள் நடந்து வருகின்றன. திருப்பணியில் பக்தர்கள் பங்கேற்கலாம். சித்தர்கள் தோற்றுவித்த பழமையான கோயில் என்பதால், இங்குள்ள மூர்த்திகளுக்கு சக்தி அதிகம்.
இருப்பிடம்: திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை ரோட்டில், பூண்டி கூட்ரோடு வரும். அதன் வலது பக்கம் ஒரு கி.மீ., சென்றால் நெய்வேலியை அடையலாம். சென்னையில் இருந்து திருவள்ளூர் வரை மின்சார ரயிலில் சென்று அங்கு இருந்து ஆட்டோ, பஸ்சில் போகலாம்.
போன்:99403 98648,94450 04908.
- எல்.முருகராஜ்