ADDED : ஜூலை 30, 2012 03:09 PM

ஆக.2 ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கு திருவிழா அன்று திருச்சி மாநகரம் களைகட்டும். அன்று காவிரிநதியில் புதுமணத்தம்பதிகள் நீராடி, புத்தாடை புனைந்து, தங்களுக்கு சிறந்த வாரிசு அமையவும், சுகப்பிரசவம் நடக்கவும் மலைக்கோட்டை தாயுமானசுவாமியையும், மட்டுவார்குழலி அம்பாளையும் வழிபடுவார்கள். இந்த திருத்தலத்துக்கு ஆடிப்பெருக்கன்று நாமும் சென்று வருவோமா!
தல வரலாறு: சாரமா முனிவர் என்ற சிவபக்தர், திருச்சியில் நந்தவனம் உருவாக்கி, சிவனுக்கு செவ்வந்தி மலர் படைத்து பூஜித்து வந்தார். ஒருசமயம் வணிகன் ஒருவன் மலர்களைத் திருடி, சோழ மன்னனுக்குக் கொடுத்தான். அந்த மலரின் அழகில் மயங்கிய மன்னன், தினமும் வணிகனை மலர் கொண்டு தரும்படி சொன்னான். அவனும் நந்தவனத்தில் தொடர்ந்து திருடி வந்தான். இதனால், சாரமா முனிவருக்கு பூ கிடைக்கவில்லை. அவர், மன்னனிடம் சொல்லியும் அவன் கண்டுகொள்ளவில்லை.
வருந்திய முனிவர், சிவனிடம் முறையிட்டார். அதுவரை கிழக்கு நோக்கியிருந்த சிவன், முனிவருக்காக மன்னனின் அரசவை இருந்த மேற்கு நோக்கித் திரும்பி, உக்கிரப்பார்வை பார்த்தார். இதனால் அப்பகுதியில் மண் மழை பொழிந்தது. தவறை உணர்ந்த மன்னன், சிவனை வேண்டி மன்னிப்பு பெற்றான். இவ்வாறு தவறு செய்பவர்களை உடனுக்குடன் தண்டிப்பவராக இத்தலத்து இறைவன் அருளுகிறார். செவ்வந்தி மலர் படைத்து வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு, 'செவ்வந்தி நாதர்' என்ற பெயர் ஏற்பட்டது.
தாயுமானவர்: தனகுத்தன் என்ற வணிகனின் கர்ப்பிணி மனைவி ரத்னாவதி, தனக்கு பிரசவம் பார்க்க வரும்படி, தனது தாயை அழைத்தாள். தாயும் அவளது வீட்டிற்கு கிளம்பி வந்தாள். வழியில் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவளால் நதியைக் கடக்க முடியவில்லை. இதனிடையே, அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி உண்டானது. கணவர் வெளியூர் போயிருந்தார். தன்னைக் காக்கும்படி திரிசிராநாதரான செவ்வந்தியப்பரிடம் வேண்டினாள்.
கருணையுள்ள அந்த இறைவன், அவளது தாயின் வடிவில் சென்று பிரசவம் பார்த்தார். காவிரியில் ஒரு வாரம் வரையில் வெள்ளம் ஓடவே, அதுவரையில் சிவன், தாயின் இடத்திலிருந்து அப்பெண்ணிற்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தார். வெள்ளம் வடிந்தபிறகு, ரத்னாவதியின் தாய் மகளின்வீட்டிற்கு வந்தாள். அவளது வடிவில் மற்றொருவள் இருந்ததைக் கண்ட, இருவரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது சிவன் இருவருக்கும் சுயவடிவில் காட்சி கொடுத்தருளினார். தாயாக இருந்து அருளியதால் இவர், 'தாயுமானவர்' என்று பெயர் பெற்றார். தாயுமானவர், மட்டுவார்குழலி , உச்சிப்பிள்ளையார் மூவரும் இந்த குன்றில் தனித்தனி கோயில் கொண்டு அருளுகின்றனர். 417 படிகளுடன், 273 அடி உயரத்தில் அமைந்த குன்று இது.
பிரம்ம தீர்த்தம்: இத்தலத்தில் மலையே சிவனாகக் கருதி வழிபடப்படுவதால், மலைக்கு நேரே அடிவாரத்தில் பிரம்ம தீர்த்தக் கரையில் பெரிய நந்தி சிலை அமைத்து, தனிக்கோயில் எழுப்பியுள்ளனர். நந்திக்கோயில் என்றழைக்கப்படும் இங்கு, பிரதோஷத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. நந்திக்கு பின்புறத்தில் 35 அடி உயர கல் தீபஸ்தம்பம் உள்ளது.
சுகப்பிரசவ வழிபாடு: கர்ப்பமாக இருக்கும் பெண்களின் வீட்டிலிருந்து யாராவது ஒரு பெண், 21 கொழுக்கட்டை, 21 அப்பம், ஒரு துணியில் மஞ்சள், குங்குமம், வெற்றிலையை கட்டி கொண்டு வர வேண்டும். இதை மட்டுவார்குழலி என்னும் சுகந்த குந்தளாம்பிகைக்கு செலுத்தி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இதனால், சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.
உச்சிப்பிள்ளையார்: அயோத்தியில் ராமபிரான் பூஜித்த ரங்கநாதரை பெற்ற விபீஷணன், இலங்கைக்குக் கொண்டு சென்றான். வழியில் காவிரியில் நீராட எண்ணினான். ரங்கநாதர் சிலையை வழியில் வைக்கக்கூடாது என நிபந்தனை விதித்திருந்ததால், சிறுவன் வடிவில் வந்த விநாயகரிடம் சிலையைக் கொடுத்துவிட்டுச் சென்றான். விநாயகர், விபீஷணன் வரும் முன்பாக
அச்சிலையை கீழே வைத்துவிட்டார். நீராடியபின்பு வந்த விபீஷணன் கோபம் கொண்டு, சிறுவனை விரட்டினான். மலை உச்சிக்குச் சென்ற விநாயகர், சுயரூபம் காட்டினார். இவர் 'உச்சிப்பிள்ளையார்' என்று பெயர் பெற்றார்.
சுவாமி முன்னே கொடிமரம் பின்னே: இக்கோயிலில் சிவனுக்கு பின்புறம் கொடிமரம் இருக்கிறது. முன்பு இக்கோயிலில் சிவன் சந்நிதி, கிழக்கு நோக்கியே இருந்தது. எனவே, பிரதான வாசலும், கொடிமரமும் கிழக்கு திசையில் அமைக்கப்பட்டது. சாரமா முனிவருக்காக, மன்னனைத் தண்டிக்க சிவன் மேற்கு திசை நோக்கித் திரும்பி விட்டதால், சந்நிதி வாசலும், கொடி மரமும் கிழக்கிலேயே நிலைத்து விட்டது. பூஜையின்போது சந்நிதிக்குப் பின்புறம் தான் (கிழக்கில்) மேளதாளம் வாசித்து,தேவாரம் பாடுகின்றனர்.
திறக்கும் நேரம்: தாயுமானவர் கோயில் காலை 6 - மதியம் 12, மாலை 4 - இரவு 8.30. உச்சிப்பிள்ளையார் கோயில் காலை 6 - இரவு 8.
போன்: 0431 - 270 4621, 271 0484, 270 0971.