
திருவனந்தபுரம் கரமனையில் அருளும் சத்திய வாகீஸ்வரருக்கு தரப்படும் அரிசி அல்லது நெல் காணிக்கை (நெற்பறை காணிக்கை) அன்னதானம் செய்யப்படுகிறது. இதனால் இவர் அன்னதான சிவன் எனப் போற்றப்படுகிறார்.
தல வரலாறு: அனந்தன் காட்டிலுள்ள ஆற்றங்கரையில் கரமகரிஷி என்பவர், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இந்த ஆறு மகரிஷியின் பெயரால்
'கரமனை' எனப்பட்டது. பிற்காலத்தில் மழை இல்லாமல் ஆறு வறண்டது. அப்போது அந்த சிவலிங்கத்தை பூஜித்த அர்ச்சகரின் கனவில் தோன்றிய சிவன் ''சிவலிங்கம் உக்கிரத்துடன் இருப்பதால், அருகில் அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும். அதற்கான சிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரை குளத்தில் மூழ்கி கிடக்கிறது. அதை பிரதிஷ்டை செய்து வழிபடு'' என தெரிவித்தார்.
மன்னரிடம் கனவு குறித்து அர்ச்சகர் தெரிவிக்க, மதுரையில் இருந்து அம்மன் சிலை வரவழைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து மழை பெய்து ஆற்றில் வெள்ளம் பெருகியது. இங்கு சிவனுக்கு சத்தியவாகீஸ்வரர் என்றும், தெற்கு நோக்கி பிரதிஷ்டை செய்த அம்மனுக்கு 'கோமதி' என்றும் பக்தர்கள் பெயரிட்டனர்.
நெற்பறை காணிக்கை: தைப் பூசத்தன்று சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்மனுக்கு கரமனை ஆற்றங்கரையில் தீர்த்தவாரி நடக்கும். சுவாமி, அம்மன் திருவீதி எழுந்தருள்வர்.
அப்போது, தங்களின் விருப்பம் நிறைவேற 'நெற்பறை' எனப்படும் காணிக்கையை பக்தர்கள் அளிக்கின்றனர்.
இதற்காக பத்து படி நெல் அல்லது அரிசியை (15 கிலோ) செலுத்துகின்றனர். இதற்காக 'பறை' என்னும் பாத்திரம் இங்குள்ளது. அரிசி அன்னதானம் அளிக்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக் குறிச்சி சத்தியவாகீஸ்வரர் கோயிலும், கரமனை கோயிலும் சம காலத்தில் கட்டப்பட்டவை. கோமதி அம்மனுக்கு வஸ்திரம் அணிவித்து, அரளிப்பூ சாத்தி வழிபட விபத்து, நோயில் சிக்கியவர்கள் விரைவில் சுகம் பெறுவர். புரட்டாசி நவராத்திரியில் அம்மனுக்கு
லட்சார்ச்சனை நடக்கும்.
நந்திக்கு மாகாப்பு: வெப்ப நோய்களில் இருந்து விடுபட, சுவாமிக்கு ஜலதாரை வழிபாடு செய்கின்றனர். மூலவர் மீது தாரா பாத்திரம் கட்டப்பட்டு அதில் நிரம்பியிருக்கும் புனித நீர் சொட்டு சொட்டாக லிங்கத்தின் மீது விழுவது ஜலதாரை. தமிழ் மாதத்தின் கடைசி ஞாயிறன்று விசேஷ ஹோமம் நடக்கிறது. இதில் பங்கேற்றால் சுக வாழ்வு அமையும். கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்க தைப்பூசநாளில் நந்தீஸ்வரருக்கு வெள்ளை மாகாப்பு சாத்துகின்றனர்.
ஒலிக்கும் மணி: கோயிலை திறக்கும் முன் வித்தியாசமான நடைமுறை பின்பற்றப்படுகிறது. மணி ஒலிக்கப்பட்டு, சிறிது நேரம் கழித்த பின்னரே நடை திறக்கப்படும். கணபதி, சுப்பிர மணியர், தர்மசாஸ்தா, நாகர், தூணில் ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகள் உள்ளன. யானை கட்டும் இடத்தில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
எப்படி செல்வது: திருவனந்தபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து நாகர்கோவில் ரோட்டில் 3 கி.மீ.,
விசேஷ நாட்கள்: தைப்பூசம் 12 நாள் பிரம்மோற்ஸவம், நவராத்திரி, அட்சய திரிதியை, கந்தசஷ்டி, விநாயகர் சதுர்த்தி, மண்டல பூஜை.
நேரம்: அதிகாலை 5.15 - மதியம் 11.30 மணி; மாலை 5.30 - இரவு 8.45 மணி
தொடர்புக்கு: 0471 - 234 5667
அருகிலுள்ள தலம்: 7 கி.மீ.,ல் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோயில்