ADDED : மே 16, 2016 10:41 AM

மே 20 நரசிம்ம ஜெயந்தி
மகாவிஷ்ணுவின், தசாவதாரங்களில் உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். அவதாரங்கள் அனைத்தும் தீயவர்களை அழித்து நல்லவர்களை காப்பதற்காக நடந்தவை. இவற்றில் மற்ற அவதாரங்களில் தீயவர்களை அழிக்கும் இடம், நேரம் போன்றவை அந்தந்த அவதாரத்தின் போது பெருமாள் எடுத்த முடிவுகள். ஆனால் நரசிம்ம அவதாரம் மட்டும் தன் பக்தன் எந்த நேரத்தில் தன்னை அழைப்பானோ என்று காத்திருந்து உடனடியாக வந்த அவதாரம். அத்தகைய புகழுக்குரிய நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் என்ற பெயர் தாங்கி திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரத்தில் தன் பூவிழியால் அருள்பாலிக்கிறார்.
சிரிக்கும் சிங்கம்: இங்கு மூலவர் நரசிம்மன், ஏழரை அடி உயரத்தில், தனது வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து சிரித்த முகத்துடன் அருள்புரிகிறார். தாயார் மகாலட்சுமியை அமர வைத்து, எம்பெருமான் தனது இடது கையால் தாயை அரவணைத்தபடி, வலதுகரத்தை அபயஹஸ்தமாக காட்டி, நாளை என்றில்லாமல் இன்றே, இப்போதே அனைவருக்கும் கேட்ட வரங்களை அளித்து அருள்பாலிக்கிறார். நரசிம்ம அவதாரத்தை குறிப்பிடுகையில் 'சிங்கம் சிரித்தது' என்று சொல்வார் திருமங்கை ஆழ்வார். அதே போன்று சிரித்த முகத்துடன் பெருமாள் இருக்க, தாயாரின் பார்வை பக்தர்களை நேரடியாக பார்ப்பது தனிச் சிறப்பு.
கோவில் அமைப்பு: 16ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு காலத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டது. அந்த பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, 2007ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஐந்து நிலை கொண்ட கோபுரம் இருக்கிறது. சக்கரத்தாழ்வார் மற்றும் வேதாந்த தேசிகனுக்கும், ஆதி லட்சுமி, தான்ய லட்சுமி, வீர லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி, தனலட்சுமி ஆகிய அஷ்ட லட்சுமிகளுக்கும், ஆண்டாளுக்கும் சன்னிதிகள் உள்ளன. ஐந்து அடி உயரமுள்ள மரகதவல்லித் தாயார், அபய ஹஸ்தத்துடன் வசீகர சிரிப்புடன் அருள்பாலிக்கிறாள். 20 தூண்களுடன் கூடிய கல்யாண மண்டபம் விசேஷம்.
மூலவர் முன்பு நான்கு அடி உயரத்தில், 16 நாகங்களை அணிகலனாகக் கொண்ட கருடாழ்வார் இருக்கிறார். இவரைத் தரிசித்தால் ராகு, கேது தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
திருவிழா: ஆனி பிரமோற்ஸவம் (10 நாட்கள்), நரசிம்ம ஜெயந்தி, சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்பு திருமஞ்சனம்.
இருப்பிடம்: சென்னை கோயம்பேட்டில் இருந்து 35 கி.மீ., தூரத்தில் பூந்தமல்லி. இங்கிருந்து அரக்கோணம் சாலையில் 20 கி.மீ., தூரத்தில் பேரம்பாக்கத்தை அடுத்து நரசிங்கபுரம். சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மின்சார ரயில்களில் கடம்பத்தூரில் இறங்கி 10 கி.மீ., பயணம் செய்தாலும் நரசிங்கபுரத்தை அடையலாம்.
அலைபேசி: 94425 85638

