/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
தினமும் திருமணம் செய்யும் சுவாமி
/
தினமும் திருமணம் செய்யும் சுவாமி
ADDED : ஜூலை 07, 2017 08:41 AM

காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நித்ய கல்யாண பெருமாளுக்கு 360 நாள் திருக்கல்யாண உற்ஸவம் நடத்தப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் சிறந்த வாழ்க்கைத்துணை அமையும்.
தல வரலாறு: மேகநாதன் என்னும் அரசனின் புதல்வன் பலி, நல்லாட்சி புரிந்து வந்தான். அக்காலத்தில் மாலி, மால்யவான், ஸுமாலி ஆகிய அரக்கர்கள் தேவர்களுடன் போரிட பலியின் உதவியை நாடினர். பலி மறுத்து விட்டான். அரக்கர்கள் தேவர்களுடன் சண்டையிட்டு தோற்று, மீண்டும் பலியிடம் உதவி கேட்டனர். அரக்கர்களுக்காக தேவர்களுடன் பலி போரிட்டு வென்றான். தேவர்களுக்கு முதலில் உதவி செய்ய மறுத்த பாவத்தால், பலிக்கு பிரம்மஹத்தி (கொலை) தோஷம் ஏற்பட்டது. இதைப் போக்க பெருமாளை எண்ணி இங்கு வந்து தவமிருந்தான். வராக(பன்றி) முகத்துடன் காட்சியளித்த பெருமாள் பலியின் தோஷம் போக்கினார்.
தினமும் திருமணம்: குனி என்ற முனிவரும் அவரது மகளும் சொர்க்கம் செல்ல தவம் இருந்தனர். குனி சொர்க்கம் சென்றார்.
அங்கு வந்த நாரதர் அந்தப் பெண்ணிடம் “நீ திருமணமாகாதவள். எனவே உன்னால் சொர்க்கம் செல்ல முடியாது” என்று சொல்லி அங்கிருந்த முனிவர்களிடம் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார். காலவரிஷி என்பவர் அவளை திருமணம் செய்து 360 பெண் குழந்தைகளைப் பெற்றார். தன் பெண்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென பெருமாளிடம் வேண்டி தவமிருந்தார். ஒருநாள் பிரம்மச்சாரி ஒருவன் வந்தான். திவ்ய தேச யாத்திரை செல்வதாக கூறிய அவனது தெய்வீகக் கோலம் பெருமாளை ஒத்திருந்தது. தனது பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி பிரம்மச்சாரியை வேண்டினார். அவனும் ஒப்புக்கொண்டு தினம் ஒரு பெண் வீதம் திருமணம் புரிந்தான். 360வது நாளில் அந்த இளைஞர் வராக மூர்த்தியாக காட்சியளித்தார். 360 மனைவிகளையும் ஒரே வடிவமாக்கி தன் இடப்பக்கத்தில் அமர வைத்து காட்சி தந்தார்.
'திரு'வாகிய லட்சுமியை 'இடப்புறம் ஏற்றுக்கொண்டதால் இத்தலம் 'திருவிடவெந்தை' எனப்பட்டது. இது காலப்போக்கில் 'திருவிடந்தை' என்றானது.
சிறப்பம்சம்: திருமங்கையாழ்வாரும் மணவாள மாமுனிகளும் இத்தல பெருமாளைப் பாடியுள்ளனர். நித்யகல்யாண பெருமாள் என்ற பெயரில் அருள்பாலிக்கும் வராகமூர்த்தியின் தாடையில் திருஷ்டிப்பொட்டு உள்ளது. 360 கன்னியர் இணைந்த தாயாருக்கு 'அகிலவல்லி நாச்சியார்' என்ற பெயர் சூட்டப்பட்டது. 360 கன்னியரில் முதல் கன்னிக்கு 'கோமள வல்லி' என்று பெயர். இங்கு தனி சன்னதியில் உள்ள மற்றொரு தாயார் கோமளவல்லி எனப்படுகிறாள்.
பெருமாள் தனது ஒரு திருவடியை பூமியிலும் மற்றொன்றை ஆதிசேஷன் மற்றும் அவரது மனைவியின் தலை மீது வைத்தும் அருள்பாலிக்கிறார். திருஷ்டி தோஷம், ராகு, கேது, சுக்ர தோஷம் உள்ளவர்கள் பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபட தோஷம் நீங்கும். கல்யாண புஷ்கரணி தீர்த்தம் இங்குள்ளது.
எப்படி செல்வது: சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக 39 கி.மீ., தூரத்தில் கோவளம் தாண்டினால் திருவிடந்தை. மாமல்லபுரம், புதுச்சேரி பஸ்கள் செல்லும்.
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 3:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 044-2747 2235

