ADDED : டிச 11, 2022 08:20 AM

இன்றைய தமிழகத்தின் மையம் அன்றைய சோழ மண்டலம். அன்றைய வாழ்க்கை இன்றுபோல் இல்லை. நாம் ஏற்றுக்கொள்ள முடியாத மாறுபாடான விஷயங்களை அவர்கள் கொண்டிருந்தார்கள். அது என்ன... நேர்மை, நாணயம். அரசர் முதல் மக்கள் வரை அனைவரும் உண்மையாக இருந்தனர். பக்தியில் திளைத்திருந்தனர். அப்படி உருவானதுதான் ஒரு கோயில்.
நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் கோயில். அதுதான் பெரிய கோயில். அரசனுக்கு எல்லாம் அரசனான அருண்மொழிவர்மன் என்று சொல்லக்கூடிய ராஜராஜன் கட்டிய கோயில். பரம்பொருளான சிவபெருமான் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பது அவருடைய எண்ணம்.
கடவுள் மிகப்பெரியவர். அதற்கு முன்பு நாம் துாசு என்பதை காட்டும் கோயில். அப்படிப்பட்ட பெரிய கோயில் சிறியதாக இருந்தால் எப்படி இருக்கும். ஆமாம். அதே வடிவமைப்பு உடைய கோயிலை பார்க்க ஆசைப்படுகிறீர்களா... கரூர் மாவட்டம் குளித்தலைக்கு அருகே உள்ள மேட்டு மருதுார் உடையநாதர் கோயிலுக்கு வாருங்கள்.
இது ஒரு வித்தியாசமான கோயில். எந்தவொரு பகட்டும் இல்லாத எளிய கோயில். முன்பொரு காலத்தில் காவிரி நதி கரைபுரண்டு ஓடிய இடத்திற்கு அருகே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. உடையநாதரை பார்த்து அதிகாலை சூரியன் வந்தனம் செய்யும். இருட்டான கருவறையின் உள்ளே சிறிய தீப வெளிச்சத்தில் உடையாரை தரிசிக்கலாம். அவருக்கு மேலே வெற்றிடம். அந்த இடம் முழுக்க ஏதோவொரு ரூபவெளி. அதுதான் கோயிலின் அஸ்திவாரம். இந்தக்கலையில் உருவானதுதான் பெரியகோயில். என்னவொரு கலைநேர்த்தி... இப்படி கோயிலை ரசிக்கும்போது நம் மனதில் பேரமைதி குடிகொள்ளும். அவரது தெய்வீகத்தால் நமது பிரச்னைகள் அனைத்தும் கரைந்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்படும். கோயிலை சுற்றி காலாற நடந்து வரலாம்.
சரி. சுவாமிக்கு ஏன் உடையநாதர் என பெயர் வைத்தார்கள் தெரியுமா.. 'உடையார்' என்றால் உரிமையானவர், 'நாதர்' என்றால் தலைவர் என்று பொருள். இந்த உலகமே பரம்பொருளான சிவபெருமானுக்கு உரிமையானது. இவர்தான் நமக்கு எல்லாம் தலைவர். எனவேதான் இவர் உடையநாதர். இவருக்கு 'ஆரா அமுதீஸ்வரர்' என்ற பெயரும் உண்டு. ஒரு நடை போய் பாருங்கள். மனதின் கவலை குறைவதை காணலாம். கோயிலுக்கு செல்வதற்கு முன் அனுமதி பெற வேண்டும்.
எப்படி செல்வது: கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து 8 கி.மீ.,
விசேஷ நாள்: பிரதோஷம், மகா சிவராத்திரி, கார்த்திகை சோம வாரம்
நேரம்: காலை 8:00 - மதியம் 12:00 மணி
தொடர்புக்கு: 93856 91543
அருகிலுள்ள தலம்: ரத்தினகிரீஸ்வரர் கோயில் 10 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 04323 - 245 522
