ADDED : செப் 30, 2020 06:12 PM

விருதுநகரிலிருந்து 16 கி.மீ., தொலைவில் உள்ளது மூளிப்பட்டி. இங்குள்ள தவசிலிங்கம் கோயில் பகுதி மன்னர்கள் ஆண்ட காலத்தில் பெரும் புதராக இருந்துள்ளது. மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று பால் தராமல் இருக்கவே இதை கண்காணிக்க மன்னர் உத்தரவிட்டுள்ளார். புதருக்குள் மாடு சென்று வருவதை வேலையாட்கள் மன்னரிடம் கூறி உள்ளனர். புதரை அகற்றும் போது மண்வெட்டியால் வெட்டியதில் ரத்தம் பீறிட லிங்கம் தென்பட்டது. உடனே அங்கு மண்கோட்டையால் கோயில் எழுப்பி உள்ளனர். பல்லாண்டுகளுக்கு பிறகு 1996, 2008 ல் என இரு முறை தவசிலிங்க சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
மன்னர்கள் வழிப்பட்ட பழமை வாய்ந்த இக்கோயில் தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் குலகோயிலாகும். இவரது சொந்த நிதியில் கோயில் புனரமைக்கப்பட்டு 2020 ஆக. 28ல் கும்பாபிஷேகம் நடந்தது.
மூலவர் சன்னதி கற்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மூலவர் பின் அய்யனாரும் அருகே பூர்ணகலா, புஷ்கலாவும் வீற்றுள்ளனர். லிங்கத்தின் பின்னால் அய்யனார் வீற்றிருப்பது அபூர்வமானது. இக்கோயில் வளாகத்தில் பைரவரில் துவங்கி வேட்டை கருப்பசாமி, சப்தகன்னிமார்கள், கண்திருஷ்டி விநாயகர், தட்சணாமூர்த்தி, துர்கை, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி என 32 சன்னதிகளும் உள்ளன.
தலையிலிருந்து கங்கை நீர் விழுவது போன்று 12 அடி உயரத்தில் சிவபெருமான் சிலையும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு வந்தாலே மனதிலுள்ள கஷ்டங்கள் மறைந்து விடுகிறது. கேட்ட வரத்தை கொடுப்பதிலும் தவசிலிங்கம் சக்தியே தனி.
எப்படி செல்வது: விருதுநகர் - அழகாபுரி சாலையில் 16 கி.மீ.,
விசேஷ நாள்: பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி
நேரம்: காலை 7:00 - மதியம் 12:00 மணி; மாலை 4:00 - இரவு 8:00 மணி
தொடர்புக்கு: 99949 52322
அருகிலுள்ள தலம்: திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் 16 கி.மீ.,