ADDED : செப் 25, 2012 10:14 AM

வள்ளி, தெய்வானை என்ற இரண்டு துணைவியரைக் கொண்ட முருகப்பெருமான், பிரம்மச்சாரியாக பிரம்ம சாஸ்தா வடிவம் தாங்கி, காஞ்சிபுரம் குமரகோட்டத்தில் அருள்பாலிக்கிறார். இது கந்தபுராணம் தோன்றிய தலம்.
தல வரலாறு:
சிவனைத் தரிசிக்க எண்ணிய பிரம்மா, தேவர்களுடன் கயிலை சென்றார். அங்கிருந்த முருகனை பிரம்மாவைத் தவிர மற்ற தேவர்கள் வணங்கினர். பிரம்மா மட்டும் படைப்புத்தொழில் செய்பவர் என்ற ஆணவத்துடன் முருகனைக் கண்டு கொள்ளவில்லை. அவரது செருக்கை அடக்க எண்ணிய முருகன், ''படைப்புக்கு ஆதாரமான பிரணவ மந்திரம் 'ஓம்' என்பதன் பொருள் என்ன?'' என்று பிரம்மாவிடம் கேட்டார். பொருள் அறியாமல் விழித்த பிரம்மனை சிறையில் அடைத்தார். தானே, பிரம்மாவின் படைப்புத் தொழிலை மேற்கொள்ளத் தொடங்கினார். பிரம்மனை விடுவிக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன், தன் சார்பாக நந்திதேவரை முருகனிடம் தூது அனுப்பினார். ஆனால், முருகன் அவரது சமாதானத்தை ஏற்கவில்லை. பின் சிவனே, நேரில் வந்து பிரம்மனை விடுவிக்க வேண்டினார். தந்தை சொல்லை ஏற்று முருகன் அவரை விடுதலை செய்தார். இருப்பினும், தனது கட்டளையை முதலிலேயே ஏற்க மறுத்த குற்றம் நீங்க, பூலோகத்தில் லிங்கம் நிறுவி வழிபடும்படி முருகனுக்கு சிவன் உத்தரவிட்டார். அதன்படி முருகன் வழிபட்ட தலமே காஞ்சிபுரம் குமரகோட்டம்.
முருகன் அமைப்பு:
தேவசேனாபதியான முருகன், சிவலிங்கம் நிறுவி வழிபட்டதால் இத்தலம் 'தேவசேனாபதீசம்' எனப்படுகிறது. மூலவர் முருகன் தனித்த நிலையில் பிரம்மச்சாரி கோலத்தில் அருள்பாலிக்கிறார். படைப்புத்தொழிலை நினைவூட்டும் விதத்தில் பிரம்ம சாஸ்தாவாக இருக்கிறார். மேல் வலக்கையில் ருத்ராட்ச மாலை, இடக்கையில் கமண்டலம் உள்ளது. கீழ்வலக்கை பக்தர்களுக்கு அபயம் அளித்தும், இடக்கையை தொடை மீது வைத்தும் காட்சி தருகிறார். இடுப்பில் மான்தோலும், தர்ப்பையால் ஆன அரைஞாணும் கொண்டிருப்பது மாறுபட்ட அமைப்பு. மூலவர் ”ப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். காஞ்சிபுராணத்தில் சிவஞானமுனிவர் இதனை சிறப்பித்துப் பாடியுள்ளார்.
தினமும் தேன் அபிஷேகம்:
குமரக்கோட்ட முருகனுக்கு பூஜையின்போது தினமும் தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது.
தீபாவளியன்று மட்டும் எண்ணெய் அபிஷேகம் செய்வர். வரசித்திவிநாயகர், சந்தானகணபதி, தண்டபாணி, சண்முகர், பைரவர், சோமாஸ்கந்தர், நவவீரர்கள், முத்துக்குமாரசாமி ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. கந்தசஷ்டியின் போது இங்கு விரதமிருக்கும் பக்தர்கள் நினைத்தது நிறைவேற கோயிலை 108 முறை வலம் வந்து வழிபடுவது சிறப்பு.
புலவர் முருகன்:
இங்கு கச்சியப்ப சிவாச்சாரியார் என்னும் அர்ச்சகர் இருந்தார். அவரது கனவில் தோன்றிய முருகன், 'திகடச் சக்கரச் செம்முகம்' என்னும் அடியை எடுத்துக் கொடுத்து கந்தபுராணத்தைப் பாடும் படி பணித்தார். அவரும் தினமும் 100 பாடல்களை எழுதி ஏட்டினை சந்நிதியில் வைக்க, முருகனே தன் கைப்பட திருத்திக்கொடுத்தார். நூல் அரங்கேற்றத்தின் போது, முருகனே தமிழ்ப் புலவராக வந்து புலவர்களின் ஐயத்திற்கு விளக்கம் அளித்து விட்டு மறைந்தார். 10,345 பாடல்கள் கொண்ட பெரிய நூலான கந்த புராணம் தமிழில் தோன்றுவதற்கு காரணமாக இருந்தவர் குமரகோட்டம் முருகன் என்பதை அறிந்து அனைவரும் மகிழ்ந்தனர்.
உருகும் உள்ளத்தான்:
என்றும் பதினாறாக விளங்கும் மார்க்கண்டேயர், ஒருமுறை பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்தார். வழியில் திருமாலைக் கண்டு அவரிடம், 'உலகப் பொருட்கள் எங்கே போயின?' என்று கேட்க திருமாலோ, 'என் வயிற்றில் உள்ளன' என்று பதிலளித்தார். அதை நம்பாத மார்க்கண்டேயர் காஞ்சியை அடைந்தார். உலகம் அழிந்தாலும் அழியாத காஞ்சி ஏகாம்பரநாதரை வணங்கி வாழ்வு பெற்றார். இதை அறிந்த திருமாலும், இங்கு வந்து சிவனை வழிபட்டார். பின் குமரக்கோட்டம் சென்று அங்குள்ள சிவனிடம், பக்தர்களுக்காக உருகும் முருகனோடு இருக்க அனுமதி கேட்டார். அதன் படிஇங்கு 'உருகும் உள்ளத்தான்' என்ற திருநாமத்தோடு தனிசந்நிதியில் காட்சி தருகிறார்.
திறக்கும் நேரம்:
காலை 5 - மதியம் 1, மாலை 4 - இரவு 8.30
இருப்பிடம்:
காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 1கி.மீ.,
போன்:
044 2722 2049.