/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
தாய் என்ற பெருமைதனை மனம் குளிரத் தருபவன்!
/
தாய் என்ற பெருமைதனை மனம் குளிரத் தருபவன்!
ADDED : நவ 11, 2018 10:10 AM

திருச்செந்துார்... ஒரு கடற்கரைத் தலம். மற்ற படைவீடுகள் மலையில் இருக்க, இதற்கு மட்டும் கடலைத் தேர்ந்தெடுத்துள்ளார் முருகன். மனிதனுக்கு மலை போல துயர் வந்தாலும் சரி, அலை போல் வந்து வந்து மறைந்தாலும் சரி... அதை தீர்த்தருள்பவர் முருகப்பெருமான்.
கந்தசஷ்டி விழாவுக்கு காரணமான சூரசம்ஹாரம் எல்லா கோயில்களிலும் நடந்தாலும், இந்த சம்பவம் நடந்த இத்தலத்துக்கென தனி சிறப்பு உண்டு. பக்தர்கள் இங்கே ஆறுநாள் தங்கி விரதமிருந்து நாழிக்கிணற்றிலும், கடலிலும் நீராடுகின்றனர். கடல் போல் வரும் கஷ்டங்கள் நாழிக்கிணறு போல் சுருங்க வேண்டும் என பெருமானிடம் வேண்டுகின்றனர். குழந்தை இல்லாத குறை உலகிலேயே பெருங்குறை. வாரிசு இல்லாமல் வம்சமும், சம்பாதித்த பொருளும் அதோடு அழியுமே என ஒருவன் நினைக்கும் போது, அது அந்த செந்துார் கடலை விட பெரிய துன்பமல்லவா! அத்துன்பம் எந்த ஜென்மத்திலும் வந்துவிடக்கூடாது என மனிதன் விரும்புகிறான்.
சிலருக்குள் ஒரு கேள்வி எழும். கந்தசஷ்டி என்பது யுத்த திருவிழா. இதற்கும் குழந்தை வரத்துக்கும் என்ன சம்பந்தம்? இதற்கு கந்தப்பெருமான் திருச்செந்துார் வந்தால் பதில் அளிக்கிறார்.
சூரபத்மனுக்கு வரம் தந்தவர் சிவன். அவனை அடக்கியவர் முருகன். பெற்றவரால் முடியாததை பிள்ளை சாதித்தார். பெற்றோர் விட்டுச் சென்ற கடமையை பிள்ளைகளால் தான் நிறைவேற்ற முடியும். அது மட்டுமல்ல! ஒருவன் இறந்த பிறகு அவனுக்கு தர்ப்பணம், சிராத்தம் செய்ய பிள்ளைகள் வேண்டும். அப்படியானால் தான் பிறவாவரமான முக்தியை அவன் அடைய முடியும்.
அது மட்டுமா! மலடி என்று உலகம் ஏசினால் ஒரு பெண்ணின் மனம் என்ன பாடுபடும்! அவளது கணவனைக் கையாலாகாதவன் என சொல்லும் போது, அவன் படும்பாடு கொஞ்ச நஞ்சமா... பக்கத்து வீட்டுக் குழந்தைகள் சுவரில் கோடு கீச்சும் சுட்டித்தனத்தைக் காணும் போது, நம் வீட்டிலும் இப்படி கோலமிட ஆளில்லையே! என்று எப்படி வயிறு புரளும்! ஆக சிவனால் முடியாததை முருகன் சாதித்தது போல், நம் வீட்டிலும் குழந்தை பிறக்க வேண்டும் என மனதார வேண்டுவோருக்கு, அந்த முருகனே குழந்தையாகப் பிறப்பான். பெற்றோரை மிஞ்சும் வல்லமை பெறுவான். அவனது துணைவியரான வள்ளி, தெய்வானை நமக்கு பெண்குழந்தை வரத்தை அளிப்பார்கள். தங்களைப் போலவே முருகனுக்கு சேவை செய்யும் பாக்கியத்தை தருவார்கள்.
மற்ற தலங்களில் இல்லாத இன்னொரு சிறப்பு செந்துாரில் உண்டு. பச்சை சாத்தி, சிவப்பு சாத்தி என்னும் சப்பரங்கள் ஆவணி, மாசி விழாக்களில் பவனி வரும். அப்போது முருகனுக்கு பக்தர்கள் சாத்தும் பன்னீர் சேறு போல தெருவில் தங்கும். பச்சை செழிப்பைக் குறிக்கிறது. பச்சை சாத்திக்கு பன்னீர் சாத்தினால் விவசாயம் செழிக்கும். சிவப்பு ஆபத்தின் அடையாளம். ஆபத்தைத் தடுத்து பாதுகாப்பான வாழ்வு பெற சிவப்பு சாத்திக்கு பன்னீர் சாத்த வேண்டும்.
சிறப்பம்சம் மிக்க திருச்செந்துார் முருகனைத் தரிசிக்க கிளம்பி விட்டீர்களா!