/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
குருவருளும் உண்டு திருவருளும் உண்டு
/
குருவருளும் உண்டு திருவருளும் உண்டு
ADDED : பிப் 23, 2016 11:16 AM

தூத்துக்குடி மாவட்டம் கொம்மடிக்கோட்டை கிராமத்தில் பாலா ஷேத்திரம் என்ற ஞானியார் மடம் உள்ளது. இங்கு வாலை குரு சுவாமி, அவரது சீடர் காசியானந்தா சுவாமி மற்றும் வாலாம்பிகைக்கு சன்னிதிகள் உள்ளன. இங்கு வந்து வணங்கினால் குருவருளும், திருவருளும் (தெய்வ அருள்) இணைந்து கிடைக்கும்.
தல வரலாறு: 800 ஆண்டுக்கு முன்பு வடக்கே இருந்து வந்த ஞானியான வாலை குருசுவாமியும், அவரது சீடர் காசியானந்தரும் இப்பகுதியில் தங்கி வாலாம்பிகையை வழிபட்டனர். இவள் அம்பாளின் குழந்தை அம்சம் ஆவாள். வாலை என்ற சொல்லுக்கே 'பெண் குழந்தை' என்று தான் பொருள். வடமாநிலங்களில் இந்த அம்பாளை 'பாலா' என்கிறார்கள்.
இவள் சித்தர்களின் விருப்பத்திற்குரிய தெய்வம் ஆவாள். பண்டாசுரனை வதம் செய்வதற்காக அம்பிகை வாலையாக அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. வாலாம்பிகை இடதுகையில் புத்தகம், வலக்கையில் ஜெப மாலை இருக்கிறது. அவளது அபய கரமும் (பாதுகாக்கும் கை), வரத கரமும் (வரமளிக்கும் கை) பக்தர்களுக்கு ஆசி வழங்குகின்றன.
குரு வழிபாடு: ஒரே கருவறையில் குருவும், சீடருமாக வாலைகுரு சுவாமியும், காசியானந்தரும் அருள்பாலிக்கின்றனர். இவர்கள் இங்கேயே சித்தியடைந்தனர். இவர்களை வழிபட்டு குருவருளை பெற்ற பின்பே, வாலாம்பிகையை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். ஒரே நேரத்தில் குரு தரிசனமும், வாலாம்பிகை தரிசனமும் பக்தர்களுக்கு கிடைப்பது இத்தலத்தின்அற்புத அனுபவமாகும்.
பிரகார சன்னிதிகள்: இங்கு அணிக்கை விநாயகர், சிவகாமி சமேத நடராஜர், மாணிக்கவாசகர், மனோன்மணி, சந்திரசேகரர், கன்னி விநாயகர், பாலமுருகன், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், பிரதோஷ நந்தி, அன்னபூரணி, உச்சிஷ்ட கணபதி ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
நோய் தீர்க்கும் திருமாத்திரை: வாலை குருசுவாமியே நேரில் வந்து திருமாத்திரை கொடுத்து ஒரு பக்தருக்கு பிணி தீர்த்ததாக ஐதீகம். கோவிலிலுள்ள வேம்பு, மஞ்சணத்தி, வில்வம், புளிய இலைகளுடன், எலுமிச்சை சாறு, திருநீறு, திருமண் சேர்த்து பிரகாரத்திலுள்ள அம்மிகளில் பக்தர்களே அரைத்த மருந்தை கருவறையில் வைத்து வழிபட்டு பிரசாதமாக பெற்றுக் கொள்கின்றனர். இதை சாப்பிட்டால் நோய் அனைத்தும் தீரும் என நம்புகின்றனர்.
திருவிழா: ஆவணி அஸ்தம் முதல் 11 நாள் விழா, சித்திரை 1 முதல் 11 நாள் திருவிழா, நவராத்திரி, சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை, ஐப்பசி ரோகிணியில் மனோன்மணி- சந்திரசேகர மூர்த்திக்கு திருக்கல்யாணம், பவுர்ணமிதோறும் வாலாம்பிகை ஊஞ்சல்
நேரம்: காலை 5.00- இரவு 8.30
இருப்பிடம்: திருச்செந்தூர்- திசையன்விளை ரோட்டில் 27 கி.மீ.
அலை/தொலைபேசி: 98421 53475 , 04639 -253 611.

