ADDED : மே 22, 2023 07:45 AM

வாழ்க்கையில் முன்னேற வேண்டும், பிறர் போற்றும்படி வாழ வேண்டும் என நினைக்கிறீர்களா... கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள கால பைரவர் கோயிலுக்கு வாருங்கள்.
சிறிய மலையில் உள்ள இவரை தரிசிக்க வாகனத்திலும் பயணிக்கலாம். சந்திர சூடேஸ்வரர் கோயிலுக்கு செல்லும் வழியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். கபாலமாலையை அணிந்திருக்கும் இவர், இரண்டு நாகங்களை அரைஞாண் கயிறுபோல் கட்டி சத்ரு சம்ஹார மூர்த்தியாக இருக்கிறார். இவருக்கு அபிேஷகம் செய்யும்போது சிவப்பு நிறமாக மாறுவார். அதிலும் அஷ்டமி, அமாவாசை நாளன்று நைவேத்தியம் செய்யும்போது இவரது உடம்பில் வியர்வை தோன்றும்.
தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு உளுந்து வடை மாலை சாற்றி, தயிர் சாதம் படைத்து வழிபட்டால் சுவாசக்கோளாறு, இருமல் காணாமல் போகும். 27 மிளகைச் சிவப்பு துணியில் கட்டி, அகலில் வைத்து நெய் ஊற்றி தீபமேற்றினால் செல்வம் பெருகும். ராகு காலத்தில் பைரவருக்கு அர்ச்சனை செய்தால், திருமணம் கைகூடும். இவை எளிய பரிகாரம். ஆனால் இதற்கு சக்தியோ அதிகம். பரிகாரத்தை தொடர்ந்து 8 வாரம் செய்வது சிறப்பு. இப்படி கஷ்டங்களோடு வரும் பக்தர்களை அரவணைத்து, அவர்களது வாழ்க்கையை வளமாக்குகிறார் கால பைரவர்.
சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், மிளகு மற்றும் சீரகம் கலந்த சாதம் ஆகியவை இவருக்கு உகந்த நைவேத்தியங்கள். இவற்றில் ஏதேனும் ஒன்றை வேண்டுதல் நிறைவேறியதும் செய்து வழிபடுங்கள்.
எப்படி செல்வது: ஓசூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து 4 கி.மீ.,
விசேஷ நாள்: காலபைரவாஷ்டமி தேய்பிறை அஷ்டமி, அமாவாசை
தொடர்புக்கு: 99943 34298, 81444 68556
நேரம்: காலை 9:00 - 1:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
அருகிலுள்ள தலம்: ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோயில் 0.5 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 0434 - 429 2870

