
நதிகளில் காவிரி என்றாலே தனிச்சிறப்பு. மூன்று இடத்தில் இரண்டாகப் பிரிந்து தீவு போன்ற அமைப்பை உருவாக்குகிறது. அந்த மூன்று இடத்திலுமே பெருமாள் குடிகொண்டுள்ளார். அந்த வகையில் அமைந்த முதல் தீவுதான் கர்நாடகா மாண்டியாவில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணம்.
இதை 'ஆதிரங்கம்' என்பர்.
சப்தரிஷிகளில் ஒருவரான கவுதமர் தீர்த்த யாத்திரையின் போது இங்கு வந்தார். அப்போது பெருமாளின் தரிசனம் வேண்டி தவமிருந்ததால், சுவாமி சயன கோலத்தில் காட்சி தந்தார். மகிழ்ச்சியடைந்தவர் இதே கோலத்தில் பெருமாளை இங்கு எழுந்தருளும்படி வேண்டினார். அதற்கு பெருமாள், இங்கு ஒரு புற்றின் மத்தியில் தனது வடிவம் இருப்பதாகவும், அச்சிலையை பிரதிஷ்டை செய்யும்படியும் கூறினார். கவுதமரும் அதன்படி செய்து, 'ரங்கநாதர்' என பெயரிட்டார். பிரம்மா 'பிரம்மானந்த விமானத்தை' அமைத்தார்.
ஆதிசேஷன் மீது திருமுடியும், திருவடியும் வைத்து யோக சயனத்தில் உள்ளார் ஸ்ரீரங்கநாதர். இவரது திருவடியைச் சேவித்தபடி கையில் மலர் ஏந்தி காவிரி அமர்ந்திருக்கிறாள். ஏன் தெரியுமா? ஒருமுறை பூலோகத்திலுள்ள புண்ணிய நதிகள் தங்களிடம் சேர்ந்த பாவங்களை, ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடி போக்கிக் கொண்டன. இந்த பாவங்கள் தன்னில் கரைந்ததால், காவிரி கோர வடிவம் பெற்றாள். இதைப்போக்க இத்தலத்து ஸ்ரீரங்கநாதரை பூஜித்தாள். சுவாமியும் அவளுக்கு பாவ விமோசனம் கொடுத்தார். இதனால்தான் இங்கு ஸ்ரீரங்கநாதரின் திருவடியை சேவிக்கும் பாக்கியத்தை பெற்றாள் காவிரி. தனிச் சன்னதியில் ஸ்ரீரங்கநாயகித் தாயார் பத்மாசனக் கோலத்தில் காட்சியளிக்கிறாள். பிரகாரத்தில் லட்சுமி நரசிம்மர், சுதர்சனர், கஜேந்திர வரதர், வெங்கடாஜலபதி, ஆஞ்சநேயர், கருடாழ்வாரும் உள்ளனர்.
இத்தலத்தின் மற்றொரு சிறப்பு வைகுண்ட ஏகாதசி. மற்ற பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று, சுவாமி சொர்க்கவாசல் கடப்பார். ஆனால் இங்கு ஸ்ரீரங்கநாதர் மகரசங்கராந்தியன்று (பொங்கல்) மாலையில் சொர்க்கவாசல் கடப்பார். அன்று மூலவர் வெண்ணெய்க்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவார். இதைப்போல் கவுதம மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த நிகழ்ச்சி சித்திரை வளர்பிறை சப்தமியன்று, 'ரங்கஜெயந்தி' விழாவாக கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமி ரத்தின கிரீடம் அணிந்து உலா வருவார்.
எப்படி செல்வது: மைசூருவில் இருந்து 14 கி.மீ.,
விசேஷ நாள்: வைகாசி பவுர்ணமியில் கருட சேவை ஆடிப்பூரம், தை அமாவாசை தைப்பொங்கல், ரதசப்தமி
நேரம்: காலை 7:30 - 1:30 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 94488 77648; 08236 - 252 273
அருகிலுள்ள தலம்: மைசூரு யோக நரசிம்மர் கோயில் 19 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 1:30 மணி; மாலை 5:30 - 10:00 மணி
தொடர்புக்கு: 081 - 256 3646

