ADDED : பிப் 10, 2017 11:35 AM

கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலுள்ள திருவதிகையில் அருள்பாலிக்கும் சரநாராயணப் பெருமாளை தரிசித்தால் திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்த புண்ணியம் உண்டாகும். இக்கோவிலில் நரசிம்மர் பள்ளிகொண்ட நிலையில் இருக்கிறார்.
தல வரலாறு: தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்ற அசுரர்கள், பறக்கும் கோட்டைகளை அமைத்தனர். அவற்றில் பறந்து செல்லும் அவர்கள், திடீரென ஓரிடத்தில் இறக்கி விடுவார்கள். கோட்டையின் அடியில் சிக்கும் உயிர்கள் எல்லாம் இறந்து போகும். தேவர்களையும் இவர்கள் துன்புறுத்தினர். இவர்களை அழிக்க சிவபெருமான் புறப்பட்டார். அவர் செல்ல ஒரு தேர் உருவாக்கப்பட்டது. அதில் சூரியனும், சந்திரனும் சக்கரங்கள் ஆயினர். பூமி தேரின் தட்டாக மாற்றப்பட்டது, நான்கு வேதங்கள் குதிரைகள் ஆயின. மேருமலையை சிவன் வில்லாக வளைத்து, ஆதிசேஷனை நாணாகக் கட்டினார், பிரம்மா தேர்ச்சாரதியாக இருந்தார், விஷ்ணு அம்பாக மாறினார்.
அம்பாக (சரமாக) இருந்து, சிவனுக்கு போர் புரிய உதவிய விஷ்ணு, இத்தலத்தில் 'சரநாராயணப் பெருமாள்' என்னும் பெயரில் வீற்றிருந்து அருள்புரிகிறார். இவருக்கு 'நின்றருளிய பரமசாமி' என்ற பெயரும் உண்டு.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திரிபுரம் எரிக்கும் திருவிழா நடக்கும். அன்று கருட வாகனத்தில் பெருமாள் சரத்துடன் எழுந்தருளி சரம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும்.
சிறப்பம்சம்: ஹேமாம்புஜ நாயகி தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறாள். இவளுக்கு செங்கமலத்தாயார் என்றும் பெயருண்டு. உத்திர நட்சத்திரத்தன்று இவளுக்கு திருமஞ்சனம் நடக்கிறது. மற்ற கோவில்களில் கைகூப்பி நிற்கும் கருடாழ்வார், இங்கு கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் காட்சி தருகிறார். இங்குள்ள பெருமாள் உப்பிலியப்ப பெருமாளைப் போல், மார்க்கண்டேய மகரிஷியின் மகள் ஸ்ரீதேவியை திருமணம் செய்த கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். இத்தலத்தை தரிசித்தால் திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்த புண்ணியம் உண்டாகும் என்பது ஐதீகம். வில்வமரம் தலவிருட்சமாக உள்ளது. கருடனால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் ஒன்றும் இருக்கிறது.
சயன நரசிம்மர்: பெருமாள் கோவில்களில் இங்கு மட்டுமே சயனகோல நரசிம்மர் அருள்பாலிக்கிறார். தெற்கு நோக்கி சயனிக்கும் இவரது அருகில் தாயார் வீற்றிருக்கிறாள். போக சயனத்தில் இருக்கும் இவர், வக்ராசுரனை வதம் செய்த களைப்பு தீர இங்கு படுத்திருப்பதாக ஐதீகம். சிவனைப் போலவே இவருக்கும் பிரதோஷத்தன்று சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
அர்ஜுனன் பூஜித்த தலம்: கோவில் உள்ள இடம் அதிகாபுரி க்ஷேத்திரம் எனப்படுகிறது. இங்குள்ள விமானம் நளினக விமானமாகும். மூலவர் சரநாராயணப் பெருமாளின் திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது. நிகமாந்த மகா தேசிகரால் மங்களாசாசனம் (பாடல் பெற்றது) செய்யப்பட்ட சிறப்பு கொண்ட தலம். வில்லிபுத்தூரார் எழுதிய மகாபாரதத்தில், அர்ஜுனன் குருக்ஷேத்திரப்போர் முடிந்து, பிராயச்சித்தம் தேடி இங்கு வழிபட்டதாக தகவல் உள்ளது. பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோவில் பற்றிய குறிப்பு பிரமாண்ட புராணத்தில் இடம்பெற்றுள்ளது.
நேரம் : காலை 8:00 - 10:00, மாலை 5:00 - இரவு 8:15 மணி
இருப்பிடம்: கடலூரில் இருந்து பண்ருட்டி 27 கி.மீ., பேருந்து நிலையத்தில் இருந்து கோவில் 2 கி.மீ.,
அலைபேசி: 94437 87186.

