ADDED : ஜூன் 29, 2018 11:28 AM

காஞ்சிப்பெரியவரின் கட்டளையால் உருவான காசி விஸ்வநாதர் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் சின்னையா சத்திரத்தில் உள்ளது. இங்கு வழிபட்டால் அறிவும், அழகும் நிறைந்த பிள்ளைகள் பிறக்கும்.
சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடி விநாயகர் கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்தார் காஞ்சிப்பெரியவர். வரும் வழியில் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள சின்னையா சத்திரத்தில் பக்தர் ஒருவரது வீட்டில் தங்கினார்.
பெரியவரிடம் அந்த பக்தர், 'நீண்டகாலமாக குழந்தைப்பேறு வாய்க்கவில்லை' என வருந்தினார். காசி விஸ்வநாதர், விசாலாட்சிக்கு கோயில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என அருள்புரிந்தார் பெரியவர். அதனடிப்படையில் இங்கு விஸ்வநாதர் கோயில் கட்டப்பட்டது. காஞ்சிப்பெரியவர் தங்கிய வீடு கோயிலுக்கு அருகில் உள்ளது.
குழந்தைப்பேறு இல்லாதவர்கள் காசியாத்திரை சென்று, மூன்று நாட்கள் கங்கையில் நீராடி விஸ்வநாதர், விசாலாட்சியை தரிசித்தால் தோஷம் நீங்கும். அதற்குரிய வசதி, வாய்ப்பு இல்லாதவர்கள் இக்கோயிலை தரிசித்தால் உடனடியாக பலன் கிடைக்கும். காஞ்சிப்பெரியவரால் நடப்பட்ட மகிழமரம் தலவிருட்சமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மூலவர் விஸ்வநாதர் கிழக்கு நோக்கியும், விசாலாட்சி தெற்கு நோக்கியும் உள்ளனர். அம்மன் சன்னதியிலுள்ள பிரதான வாசல் ஆண்டு முழுவதும் திறக்கப்படுகிறது. சுவாமி சன்னதியில் உள்ள வாசல் திருக்கார்த்திகைஅன்று மட்டும் திறக்கப்பட்டு, சொக்கப்பன் கொளுத்தப்படும். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், துர்க்கை, நவக்கிரகம், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. கோட்டைச் சுவருக்கு வெளியே 'வாலில் மணிகட்டிய ஆஞ்சநேயர்' சன்னதி உள்ளது.
கோயிலைச் சுற்றியுள்ள 18 பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்களின் இல்ல சுபநிகழ்ச்சிகளான நிச்சயதார்த்தம், திருமணம், பெயர்சூட்டுதல் போன்ற சுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்துகின்றனர்.
விஸ்வநாதரின் அருளால் குழந்தைப்பேறு அடைந்தவர்கள் முடிக்காணிக்கை செலுத்துகின்றனர். விரைவில் கோயில் புதுப்பிக்கப்பட்டு ராஜகோபுரத் திருப்பணி தொடங்க உள்ளது.
எப்படி செல்வது: புதுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில் 15 கி.மீ.,
விசேஷ நாட்கள்: தமிழ்ப்புத்தாண்டன்று வருஷாபிேஷகம், திருக்கார்த்திகை, ஐப்பசி அன்னாபிஷேகம்
நேரம்: காலை 7:30 - 10:00 மணி; மாலை 4:30 - 07:00 மணி
தொடர்புக்கு: 98430 40464
அருகிலுள்ள தலம்: 15 கி.மீ., துாரத்தில் புவனேஸ்வரி கோயில்