ADDED : ஜன 15, 2013 10:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலன்று சூரியனை ஒளி வடிவாய் வழிபடுகிறோம். கடவுளை அருட்பெருஞ்ஜோதியாக வழிபட்டார் வள்ளலார். அதைப் போலவே, திருச்சி அருகிலுள்ள ஓமாந்தூர் பெரிய கோயிலில் உள்ள அனைத்து சந்நிதிகளிலும் ஜோதிவடிவில் வழிபாடு செய்கின்றனர். இங்கு மூலவராக அன்னகாமாட்சி விளங்குகிறாள். இக்கோயிலை பொங்கலன்று வழிபட்டு வருவோமா!
தலவரலாறு:
12ம் நூற்றாண்டில், கொல்லிமலை அடிவாரத்தில் காராளன் என்ற சிறுவன் பசு மேய்த்து வந்தான். அங்கிருந்த மாசிபெரியண்ண சுவாமியையும், அன்ன காமாட்சியையும் மலையாளிகள் வழிபட்டு வந்தனர். இரவு நேரத்தில் இந்த தெய்வங்களை வழிபடும் போது, அவர்களைத் தவிர வேறு யாரும் பார்ப்பது கூடாது என்பது நிபந்தனை. இதை மீறி, காராளன் தன் நண்பனான பூஜாரியின் மகன் உதவியுடன் பார்த்தான். இதைக் கண்ட மலையாளிகள், காராளனைக் கட்டி வைத்தனர். தன்னைக் காப்பாற்றும்படி பெரியண்ணசுவாமி, காமாட்சியம்மனை வேண்டிய காராளன், அப்படியே உறங்கி விட்டான். கனவில், ''காரளா! நீயும் உன்னைச் சேர்ந்தவர்களும் மாடுகளை ஓட்டிக் கொண்டு இங்கிருந்து கிளம்புங்கள்! மாடுகள் எந்த இடத்தில்
நகராமல் சுற்றி சுற்றிவருகிறதோ அங்கே நான் நிரந்தரமாக குடிகொள்வேன். அங்கிருந்து என்னை வழிபடு,'' என்று பெரியண்ணசுவாமி ஆணையிட்டார். திடுக்கிட்டு கண் விழித்த காராளன், தனது கட்டுகள் அவிழ்ந்து, மாட்டு மந்தை நடுவில் இருப்பதைக் கண்டான். தன்னைச் சேர்ந்தவர்களிடம் நடந்ததைக் கூறினான். தெய்வ உத்தரவை நிறைவேற்ற அவர்கள் காராளனுடன் தெற்கு நோக்கிப் புறப்பட்டனர்.
கொல்லிமலையில் இருந்து அவர்கள் ஓமந்தூர் வந்தனர். அங்கு மாடுகள் நகராமல் சுற்றிச் சுற்றி வந்தன. அங்கேயே தங்கி, பெரியண்ணசுவாமி, காமாட்சிக்கு கோயில் அமைத்து வழிபடத் தொடங்கினர்.
பெரிய கோயில்:
22 ஏக்கர் பரப்பில் அமைந்த இக்கோயிலை 'பெரியகோயில்' என்று அழைக்கின்றனர். அனைத்து இனத்தையும் சேர்ந்த 50 ஆயிரம் குடும்பங்களுக்கு குலதெய்வக் கோயிலாக விளங்குகிறது. கோயில் கருங் கல்லால் ஆனது. ராஜகோபுரத்தில், பெரியண்ணசுவாமியின் வாகனமான வேங்கைப்புலிகள் உள்ளன. கிழக்குநோக்கி காமாட்சி சந்நிதி உள்ளது. அம்மன், யோகநிலையில் ஜோதிவடிவில் இருப்பதாக ஐதீகம்.
ஜோதி வழிபாடு:
இங்குள்ள எல்லா சந்நிதிகளிலும் ஜோதியே தெய்வமாக பாவித்து வழிபாடு நடத்தப்படுகிறது. காலையில் பூஜாரி, காமாட்சி சந்நிதியை நீரால் மெழுகுவார். அஷ்ட லட்சுமி விளக்கில் நெய்விளக்கேற்றி அதிலிருந்து காமாட்சியை ஜோதியாக ஏற்றி நமஸ்காரம் செய்வார். அதன்பின் மற்ற சந்நிதிகளில் ஜோதி ஏற்றப்படும். மதியம் 12மணி பூஜையின் போது மட்டும் அம்மனுக்கு கற்பூர ஜோதி காட்டப்படும். கோயில் சுற்று மதிலுக்குள் வெட்டியெடுக் கும் மண்ணே திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
வேல் வழிபாடு:
மாசி பெரியண்ணசுவாமி தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். சந்நிதி முன் வேங்கைப்பதிவு என்னும் வேல் காட்சி தருகிறது. இவரோடு மாசிக்கருப்பசாமியும், முனீஸ்வரரும் ஜோதிவடிவில் இருக்கின்றனர். பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேற வேல்வழிபாடு செய்கின்றனர். இங்கிருக்கும் திரிசூலம், வேலினைத் தோளில் தாங்கி சந்நிதியை மூன்றுமுறை வலம் வந்து வழிபடுகின்றனர். இவருக்குரிய வாகனம் வேங்கைப்புலி. பெரியண்ண சுவாமிக்கு பொங்கலிடுவதும், வேலுக்கு பூமாலை, கனிமாலை சாத்துவதும் முக்கிய நேர்ச்சை.
பிற சந்நிதிகள்:
ஏகாம்பரேஸ்வரர், தேவராயசுவாமி, சவுதாரி அம்மன், கரட்டடியான், பச்சைநாச்சி, சண்டிகேஸ்வரர், கவுமாரி, லாடப்பசன்னியாசி, மதுரைவீரன், புதுக்கருப்பு, பச்சாயி, காத்தவராயன், பைரவர், அப்பச்சியாயி, குப்பச்சியாயி என 64 சந்நிதிகள் உள்ளன. எந்த சந்நிதியிலும் விக்ரகம் இல்லை. காமாட்சியம்மன் சந்நிதி சிற்பவேலைப்பாடு மிக்கதாகும். சந்நிதியின் பின்புறம் ஸ்ரீசக்ரம் உள்ளது. வேலைப்பாடு மிக்க இதன் சுவரில் உள்ள விநாயகர், மகிஷாசுரமர்த்தனி, ராமரை வணங்கும் ஆஞ்சநேயர் சிற்பங்கள் கண்கவர்பவை.
திறக்கும் நாட்கள்:
திங்கள், வெள்ளி மட்டுமே கோயில் திறக்கும். ஆங்கில, தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல், ஆடி பதினெட்டு, இருபத்தெட்டு, மகாசிவராத்திரி நாட்களில் கோயில் திறந்திருக்கும். சிவராத்திரியே இங்கு பெரிய விழா.
ஓமக்குளம்:
இங்கு வாழ்ந்த ஓமரிஷியின் பெயரால் ஓமக்குளம் தீர்த்தம் உள்ளது. இதில் பாசி படர்வதில்லை. குளத்து நீரைக் குடித்தால் விஷபயம் நீங்கும். இங்கு நீராடி, காமாட்சியை மூன்று முறை வலம் வந்தால் நினைத்தது நிறைவேறும். ஆழம் அதிகம் என்பதால், நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே குளிக்கலாம்.
இருப்பிடம்:
திருச்சியிலிருந்து மண்ணச்சநல்லூர் வழியாக திருவெள்ளறை 19 கி.மீ., அங்கிருந்து ஓமாந்தூர் 8கி.மீ.,
திறக்கும்நேரம்:
திங்கள், வெள்ளி காலை9- மதியம்12
போன்:
98422 75074, 04327- 235640.
சி.வெங்கடேஸ்வரன், சிவகங்கை