
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூரியனின் இன்னொரு பெயரான 'ஞாயிறு' என்னும் பெயர் கொண்ட ஊரிலுள்ள புஷ்பரதேஸ்வரரை வழிபட்டால் அனைத்துப் பணிகளிலும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. சென்னை அருகில் இத்தலம் உள்ளது.
தலவரலாறு:
சூரிய பகவானின் மனைவி சமுக்ஞாதேவி, கணவரின் வெப்பம் தாங்காமல் தன் நிழலில் இருந்து தன்னைப்போலவே ஒருத்தியை உருவாக்கினாள். அவளுக்கு 'சாயாதேவி' என்ற பெயர் வந்தது. அவளை சூரியனுடன் வாழச் செய்துவிட்டு, தந்தை வீடு சென்றுவிட்டாள். எமதர்மன் மூலமாக இதைஅறிந்த சூரியன், மனைவியை அழைத்து வரக்கிளம்பினார். அப்போது அவர் சிவபூஜை செய்யவே, வானத்தில் தோன்றிய ஒரு ஜோதி இங்குள்ள தடாகத்தில் பூஜித்திருந்த தாமரை மலருக்குள் ஐக்கியமானது. ஜோதியின் நடுவில் தோன்றி சிவன், அவரது உக்கிரத்தை குறைத்து, மனைவியுடன் சேர்ந்து வாழ அருளினார்.
பிற்காலத்தில், சோழமன்னன் ஒருவன் இவ்வழியே சென்றபோது, தடாகத்தில் தாமரை மலர் மின்னியதைக் கண்டான். அதைப்பறித்த போது அவனது பார்வை பறிபோனது. வருந்திய மன்னன் சிவனை வேண்ட சுவாமி அவனுக்கு பார்வை கொடுத்தருளினார். மேலும், அந்த தாமரைக்குள் லிங்க வடிவில் இருப்பதை உணர்த்தினார். அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினான் மன்னன். புஷ்பத்தில் (பூ) தோன்றியதால் சிவனுக்கு, 'புஷ்ப ரதேஸ்வரர்' என்ற பெயர் வந்தது. சூரியன் வழிபட்டதால் இவ்வூருக்கு 'ஞாயிறு' என்று சூட்டினார்.
சூரியவழிபாடு:
புஷ்பரதேஸ்வரர் சந்நிதியை பார்த்தபடி சூரியன் சந்நிதி இருக்கிறது. சித்திரை முதல் வாரத்தில், சிவன் மற்றும் அம்பிகை மீது சூரிய ஒளி விழுகிறது. அப்போது, சூரியக்கதிர் அபிஷேகம் இயற்கையாவே நடப்பதால், உச்சிக்காலத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்வதில்லை. ஞாயிறு மற்றும் பொங்கலன்று சூரியனுக்கு விசேஷ பூஜை நடக்கும். கிரகதோஷம் உள்ளவர்கள், சூரியனுக்குரிய சிவப்பு வஸ்திரத்தை சிவனுக்கு சாத்தி வழிபடுகின்றனர். தம்பதியர், ஒற்றுமையுடன் வாழ சூரியனுக்கு கோதுமைப் பொங்கல், கோதுமை பாயாசம் படைக்கின்றனர். பார்வை குறைபாடு உள்ளவர்கள் நெய் விளக்கு ஏற்றுகிறார்கள்.
பல்நோய் தீர்க்கும் முனிவர்:
பிரகாரத்தில் கிரீடம் அணியாத பல்லவ விநாயகர் இருக்கிறார். தந்தைக்கு மரியாதை செய்யும் விதமான, இவர் இவ்வாறு இருப்பதாக சொல்கிறார்கள். சிவனை வழிபட்ட கண்வ மகரிஷி கோயில் முன் மண்டபத்தில் இருக்கிறார். பல் நோய் உள்ளவர்கள் இவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, கால பைரவர், கமல விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர் இருக்கின்றனர். கோயிலுக்கு வெளியே சூரிய புஷ்கரிணி தீர்த்தம் உள்ளது.
இருப்பிடம்:
சென்னை கோயம்பேட்டில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் செங்குன்றம். அங்கிருந்து 13 கி.மீ., தூரத்தில் ஞாயிறு.
திறக்கும் நேரம்:
காலை 7.30- 11, (ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 1) மாலை 4.30- இரவு 7.30.
போன்:
044- 2902 1016