ADDED : ஜன 03, 2020 01:05 PM

ஜனவரி 6 வைகுண்ட ஏகாதசி
ஆடிப்பாடும் அரையர்
வைகுண்டத்தை 'திருநாடு' என்பர். அங்கு செல்பவர்கள் பெருமாளைத் தரிசிக்கும் பேறு பெறுவர். அவர்களை “நித்ய சூரிகள்” என்பர். இவர்கள் பசி, தாகம், உறக்கம் ஆகிய உணர்வுகள் இன்றி இருப்பர். பரவச நிலையில் பெருமாளைப் புகழ்ந்து ஆடிப் பாடுவர். இக்காட்சியைப் பூலோக வைகுண்டமான திருச்சி - ஸ்ரீரங்கத்தில் நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் வைணவ ஆச்சாரியரான நாதமுனிகளின் மனதில் எழுந்தது. அதற்காக திவ்ய பிரபந்தங்களுக்கு நாட்டிய இசை வடித்தார். 'அரையர்' என்னும் அபிநயத்துடன் ஆடிப்பாடும் கலைஞர்களை உருவாக்கினார். இதுவே 'அரையர் சேவை' என்றானது. இந்த சேவை இங்கு மிக பிரபலமானது.
அரங்கன் வந்த அதிசயம்
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இருக்கும் ரங்கநாதர் ஆதிகாலத்தில் அயோத்தியில் இருந்தவர். ராமர் மற்றும் அவரது முன்னோர்களால் பூஜிக்கப்பட்டவர். இலங்கைக்கு கடத்தப்பட்ட சீதையை மீட்க உதவியவர்களுக்கு தன் பட்டாபிஷேக விழாவில் பரிசுகளை ராமர் வழங்கினார். அப்போது ராவணனின் தம்பி விபீஷணனிடம் ''என்ன பரிசு வேண்டும்'' எனக் கேட்டார் ராமர்.
''இங்கிருக்கும் ரங்கநாதர் சிலையை இலங்கைக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன்'' என்றான் விபீஷணன். மறுக்காமல் கொடுத்து அனுப்பினார். வழியில் காவிரி நதியைக் கண்ட உடன் ரங்கநாதர் சிலையைக் கீழே வைத்துவிட்டு நீராடினான். கிளம்பும் போது சிலையை எடுக்க முயன்றான். ஆனால் முடியவில்லை. அந்த இடத்தில் ஸ்ரீரங்கம் கோயில் உருவானது. பிற்காலத்தில், தர்மவர்மன் என்னும் சோழ மன்னர், ரங்கநாதருக்கு கோயில் எழுப்பினார்.
அமுத கலச கருடாழ்வார்
ஸ்ரீரங்கம் கோயில் பிரகாரத்தில் அமுத கலசம் ஏந்திய கருடாழ்வார் சன்னதி உள்ளது. அசுரர்களிடம் இருந்து வேதங்களை மீட்டெடுத்த பெருமாள், அவற்றை கருடாழ்வாரிடம் ஒப்படைத்தார். இதன் அடிப்படையில் இங்கு கருடாழ்வாரின் கையில், வேதங்கள் உள்ளன. சாளகிராம கல்லால் ஆன இவருக்கு பருப்பு, வெல்லம், கொழுக்கட்டை மல்லிகைப்பூ மாலை, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். கருட பஞ்சமியன்று சிறப்பு பூஜை நடக்கும்.
ஒன்றா...இரண்டா...குளிருக்கு 365
கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியை கைசிக ஏகாதசி என்பர். அன்று இரவில் உற்ஸவர் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கும். சுவாமிக்கு அன்றாட பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும் விதமாக இதை செய்கின்றனர். கார்த்திகை, மார்கழி குளிர்காலம் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், போர்வை அணிவிக்கப்படுகிறது.
கம்பருக்காக கர்ஜித்தவர்
கம்பராமாயணம் ஸ்ரீரங்கம் தாயார் சன்னதி எதிரிலுள்ள மண்டபத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அப்போது அதில் நரசிம்மர் வரலாறு இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டிய அறிஞர்கள், ''ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி குறிப்பிடக் கூடாது'' என தடுத்தனர். அப்போது கர்ஜித்தபடி துாணில் இருந்து வெளிப்பட்ட நரசிம்மர், ''கம்பரின் கூற்று உண்மை'' என ஆமோதித்து தலையசைத்தார். இந்த நரசிம்மரை 'மேட்டழகிய சிங்கர்' என்பர். இவரே தாயார் சன்னதிக்கு அருகில் வீற்றிருக்கிறார்.
பூமிக்குள் இருந்து மேலே வந்தவர்
ஸ்ரீரங்கத்தில் தங்கி பலகாலம் ரங்கநாதருக்கு சேவை செய்த மகான் ராமானுஜர். இத்தலத்திலேயே அவர் மோட்சமும் அடைந்தார். அவரது பூதவுடலை பத்மாசனத்தில் அமர வைத்து சீடர்கள் அடக்கம் செய்தனர். சிலகாலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு மேலெழுந்தார். அவரே ஸ்ரீரங்கம் கோயிலில் தனி சன்னதியில் காட்சி தருகிறார். இவரை பார்த்தால் மயிர்க்கூச்செறியும் அளவுக்கு திருமேனி தத்ரூபமாக இருக்கும். திருமஞ்சனம் என்னும் அபிஷேகம் செய்வதில்லை. சித்திரை மாத திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சேர்ந்த கலவையை மட்டும் சாத்துவர்.
நோய்க்கு இனி 'நோ'
ஸ்ரீரங்கம் கோயிலில் மருத்துவக் கடவுளான தன்வந்திரி சன்னதி இருக்கிறது. இவரது மார்பில் மகாலட்சுமி வீற்றிருக்கிறாள். கைகளில் சங்கு, சக்கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சி இருக்கிறது. நீண்ட நாளாக நோயால் அவதிப்படுபவர்கள் விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். அத்துடன் தினமும் பெருமாளுக்கு நைவேத் யத்துடன் சுக்கு, வெல்லக் கலவை படைக்கப்படுகிறது.
பகல்பத்து, ராப்பத்து விழா
நாலாயிரதிவ்ய பிரபந்தப் பாசுரங்களை ராகதாளத்தோடு அபிநயத்து ஆடிப் பாடுவது அரையர் சேவை. தமிழகத்தில் ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீரங்கம் ஆகிய தலங்களில் மட்டும் இச்சேவை நடக்கிறது. பகல்பத்து என்னும் பெயரில் பகலில் பத்து நாட்களும் ராப்பத்து விழா என்னும் பெயரில் இரவில் பத்து நாட்களுமாக நடக்கிறது. மார்கழி அமாவாசைக்கு அடுத்த பிரதமை நாளில் தொடங்கும் பகல்பத்து தசமியன்று முடியும். வைகுண்ட ஏகாதசி தினம் முதல் பஞ்சமி வரை ராப்பத்து நடைபெறும். ஸ்ரீவில்லி புத்துாரில் மார்கழி தவிர ஆடி,தை மாதங்களிலும் நடைபெறுகிறது.
முத்துக்குறிக்கு பட்டு
கூம்பு வடிவ குல்லாவை தலையில் அணிந்து கொண்டு பெருமாளுக்கு அணிவித்த பூமாலை, பரிவட்டத்தை அரையர் சேவையில் பங்கேற்போர் சூடிக்கொள்வர். பாசுரங்களைப் பாடும் போது, அதற்கேற்ப முகம், கைகளால் பாவனை செய்வர். இதில் முத்துக்குறி என்னும் நிகழ்ச்சியில் ஆடும் போது பட்டாடை உடுத்துவர். மகளின் எதிர்காலம் குறித்து தாய் கேட்பது போல பாடல்களைப் பாடுவதே முத்துக்குறி கண்டருளல். இதைக் காண வரும் பக்தர்களும் பட்டு உடுத்துவது வழக்கம். இதில் தாய், மகள், குறிசொல்பவள் என மூன்று பாத்திரங்களாக அரையர் ஒருவரே மாறி மாறி அபிநயம் செய்வார்.
திருச்சி - ஸ்ரீரங்கம் டிட் பிட்ஸ்
* பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார் ரங்கநாதர். நாபியில் பிரம்மா இல்லை. கோயிலுக்குள் பாவம் தீர்க்கும் சந்திர தீர்த்தம் உள்ளது.
* டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள், இத்தலத்து பெருமாள் மீது தீராத அன்பு கொண்டிருந்தாள். இதன் அடிப்படையில் பெருமாளுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து ரொட்டி நைவேத்யம் படைக்கப்படுகிறது.
* திருப்பாணாழ்வார் மீது அர்ச்சகரான லோக சாரங்கர் கல் எறிந்த போது, ரங்கநாதர் அதை தன் நெற்றியில் தாங்கி, ரத்தம் வழிய நின்று, ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த தலம் இது.