ADDED : அக் 27, 2023 11:34 AM

செங்கல்பட்டு மாவட்டம் குமிழி மதுரா மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ளது பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில். விரும்பி தரிசனம் செய்பவர்களின் வேண்டுதல் பலிக்கிறது. நம்முடைய வேண்டுதலை அவர் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம் வாருங்கள்.
ஒரு சமயம் இங்கு சாலையில் அடிபட்டு இறந்த குரங்கினை பார்த்து எண்ணற்ற குரங்குகள் கண்ணீர் சிந்தின. அவ்வழியாக வந்த அன்பர் ஒருவர் அதனை நல்லடக்கம் செய்ய நினைத்தார். மக்களோடு சேர்ந்து அருகே இருக்கும் விநாயகர் கோயிலுக்கு அருகே பள்ளம் தோண்டிய போது பாறையே தென்பட்டது. அந்த இடத்தை விட்டு பிறகு கன்னியம்மன் கோயிலுக்கு வடக்கே சிறிது தொலைவில் ஓரிடத்தில் நல்லடக்கம் செய்தனர். பல ஆண்டு கழித்து அம்மன் கோயிலுக்கு வந்த அந்தணர் ஒருவர் இங்கு வாயுபுத்திரன் நிரந்தரமாக வசிக்கிறார் அவருக்கு கோயில் எழுப்புங்கள் என வாக்கு சொல்லி விட்டு சென்றார். ஊர் மக்கள் ஆதரவுடன் அனுமனுக்கு கோயில் எழுப்ப அம்மனிடம் அனுமதி கேட்ட போது ஐந்து தலை நாகம் படம் எடுத்து ஆடியதை அனைவரும் தரிசித்தனர். பாதாள விநாயகர், கன்னியம்மனை வழிபட்டு சிறிது துாரம் சென்றால் ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்லலாம். 26 படிகள் ஏறி மண்டபத்தை கடந்து கருவறையில் காட்சி தரும் பஞ்சமுக ஆஞ்சநேயர் துளசி, வெற்றிலை, வடை மாலையுடன் கம்பீரமாக காட்சி தருகிறார். கோயிலின் முகப்பில் ஸ்வாமி 18 அடி சுதை வடிவில் உள்ளார். பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாத ஸ்தபதி ஒருவர் இந்த கோயில் திருப்பணியில் ஈடுபடுத்திக் கொண்ட போது அவரது மனைவி கர்ப்பம் தரித்துள்ளார். புற்று நோய் உள்ள ஒருவர் பஞ்சமுக ஆஞ்சநேயரை தொடர்ந்து வழிபட அவருக்கு நோய் இருந்த அறிகுறியே மறைந்து விட்டது.
ஓம் அஸாத்ய ஸாதக
ஸ்வாமின் அஸாத்யம் கிம் தவ ப்ரபோ ராமதுாத மஹா
ப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா
என்னும் மந்திரத்தை சொல்லி இவரை நினைக்க செயல்கள் யாவும் ஜெயமாகும். ஸ்ரீராமஜெயம் சொல்லி ராம துாதனை வழிபடுங்கள். நல்லதே நடக்கட்டும்.
எப்படி செல்வது: வண்டலுாரில் இருந்து 15 கி.மீ.,
விசேஷ நாள்: புரட்டாசி சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி
நேரம்: காலை 6:00 - 10:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 97102 29549, 97108 41299
அருகிலுள்ள தலம்: ரத்தினமங்கலம் குபேரர் கோயில் 6 கி.மீ., (தடையின்றிசெல்வம் பெருகும்)
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 9:00 மணி