sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

கன்னியராக வள்ளி தெய்வானையை தரிசிக்க வேண்டுமா ?

/

கன்னியராக வள்ளி தெய்வானையை தரிசிக்க வேண்டுமா ?

கன்னியராக வள்ளி தெய்வானையை தரிசிக்க வேண்டுமா ?

கன்னியராக வள்ளி தெய்வானையை தரிசிக்க வேண்டுமா ?


ADDED : நவ 05, 2010 03:53 PM

Google News

ADDED : நவ 05, 2010 03:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன்  இருப்பான்' என்பதற்கேற்ப ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி கதித்தமலையில் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். அருணகிரி நாதரால் பாடல் பெற்றதும், அகத்தியர் பூஜித்த பெருமை பெற்றதுமான இந்தக் கோயில் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. மூலவரான 'வெற்றி வேலாயுதசுவாமி' தனித்த நிலையில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அது மட்டுமல்ல! வள்ளியும், தெய்வானையும் இங்கே முருகனுடன் இல்லாமல் திருமணத்துக்கு முந்தைய நிலையில், தனித்த சன்னதியில் காட்சியளிக்கின்றனர்.

தல வரலாறு: முருகன் குடிகொண்டுள்ள தலங்களைத்  தரிசிக்க அகத்தியர் சென்றார். அவருடன் நாரதர் மற்றும் பல தேவர்களும் உடன் சென்றனர். ஒருநாள் பூஜைக்குரிய நேரம் வந்தது. ஆனால், முருகனுக்கு நைவேத்யம் செய்ய தண்ணீரில்லை. நடந்த களைப்பில் அவருக்கும் தாகம் ஏற்பட்டது. இதனால் முருகப்பெருமானை வேண்ட, முருகன் அங்கு தோன்றினார். தம் வேலை தரையில் குத்தி ஒரு ஊற்று ஏற்படுத்தினார். நீர் பெருக்கெடுத்து ஓடியது. அகத்தியரும் மகிழ்ச்சியுடன் பூஜைகளை முடித்து கொண்டதுடன், தன் தாகத்தையும் தீர்த்துக்கொண்டார். முருகனால் அன்று ஏற்படுத்தப்பட்ட ஊற்று வற்றாமல் இன்று வரை நீரை கொடுத்துக் கொண்டிருக்கிறது. குழியில் இருந்து ஊற்று தோன்றியதால் 'ஊத்துக்குழி' என அழைக்கப்பட்ட அப்பகுதி, மருவி 'ஊத்துக்குளி' என அழைக்கப்படுகிறது. இந்த அற்புதத்தை நிகழ்த்திய முருகனுக்கு கோயிலும் கட்டப்பட்டது.

தல சிறப்பு: எங்காவது முருகனை விட்டு வள்ளியும், தெய்வானையும் தனியாக இருப் பதை பார்த்திருக்கிறீர்களா? இங்கே அந்த அதிசயத்தைக் காணலாம்.

வள்ளியும், தெய்வானையும் முருகனின் சன்னதிக்கு பின்னால் தனி சன்னதியில் ஒரே மூலஸ்தானத்தில் தனித்திருக்கிறார்கள். ஏன் இப்படி? இதற்கும் காரணம் இருக்கிறது.சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகன் தனிமையில் இருந்தார். அவரை மணம் முடிக்க விரும்பிய இந்தப் பெண்கள் இம்மலைக்கு வந்து முருகன் தங்களை ஆட்கொள்ளுமாறு வேண்டினர். அவரது அருளாசியின்படி இந்திரனின் மகளாக தெய்வானையும், நம்பிராஜனின் வளர்ப்பு மகளாக வள்ளியும் அவதரித்தனர். திருமணத்துக்கு முன்னதான நிலை என்பதால், இவர்களுக்கு தனி சன்னதி தரப்பட்டுள்ளது. மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. வள்ளி, தெய்வானை, வேல் ஆகியன முறையே இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகியவை. அதாவது இச்சை என்னும் ஆசை, கிரியை என்னும் செயல், ஞானம் என்னும் அறிவு ஆகிய மூன்று சக்திகளை குறிக்கின்றன. இவை மூன்றும் பரப் பிரம்மமாகிய (தெய்வம்) முருகனுக்குள் அடங்கியுள்ளது. பெரும்பாலான முருகன் கோயில்களில் இச்சாசக்தியும் (வள்ளி), கிரியாசக்தியும் (தெய்வானை) அவருக்கு இருபக்கம் வைக்கப்படுவர்., ஞான சக்தியான வேல் மட்டும் அவரது மார்பின் மேல் வைக்கப்படும். ஞானசக்தி தான் இம் மூன்றில் முக்கியமானது. இச்சையும்,  கிரியையும் இருந்தால் தான் ஞானம் பெற முடியும். ஆனால், அபூர்வ சக்தி படைத்த முருகன், இவ்விரண்டும் இல்லாமலே ஞானசக்தி பெற்றவர் என்பதையும் இது காட்டுகிறது.

கோயில் அமைப்பு: குன்றின் மீது ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் கிழக்கு நோக்கி கம்பீரமாகத் தோற்றமளிக்கிறது. கோயிலுக்குச் செல்ல அகலமான படிக்கட்டுகள் உள்ளன. ராஜகோபுரத்தின் முன்னால் தீப ஸ்தம்பம் உள்ளது. பிரகாரமும் இருக்கிறது. முருகனின் கண தலைவரான இடும்பனுக்கு தனி சன்னதி உள்ளது. முருகன் கோயிலுக்கு கீழே தென்கிழக்கு பக்கமுள்ள பாம்பு புற்றுக்கு தனி கோயில் உள்ளது. இது மயூரகிரி சித்தரின் சமாதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கு அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. பக்தர்கள் இந்த புற்றை 'சுப்பராயர்' என அழைக்கிறார்கள்.  வள்ளி தெய்வானை சன்னதிக்கு செல்லும் வழியில் பாலை மரத்தின் அடியில் காவல் தெய்வமான சுக்குமலையான் சன்னதி உள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் சுக்குமலையானை வழிபாடு செய்கிறார்கள்.

இருப்பிடம்: திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி வழியாக ஈரோடு செல்லும் பஸ்களில் 15 கி.மீ., பயணித்தால் கதித்தமலை முருகன் கோயிலை அடையலாம்.

போன்: 04294-262 052-54.






      Dinamalar
      Follow us